உலகப் பணக்காரர் எலான் மஸ்க் (Elon Musk) எப்போதுமே ட்விட்டரில் (தற்போது X) ஏதாவது சர்ச்சையைக் கிளப்புவார். ஆனால், இம்முறை அவர் மோதியிருப்பது அயர்லாந்தைச் சேர்ந்த பட்ஜெட் ஏர்லைன்ஸ் ஜாம்பவானான ‘ரயன்ஏர்’ (Ryanair) நிறுவனத்தின் சி.இ.ஓ மைக்கேல் ஓ’லரியுடன் (Michael O’Leary). இந்த இரண்டு கார்ப்பரேட் “வாயாடி”களுக்கும் இடையே நடக்கும் வார்த்தைப் போர் இப்போது இணையத்தில் செம வைரல்!
சண்டை ஆரம்பித்தது எங்கே? எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் (Starlink) இணையச் சேவையைத் தங்கள் விமானங்களில் பொருத்த முடியாது என்று ஓ’லரி திட்டவட்டமாக மறுத்ததில் இருந்தே பனிப்போர் தொடங்கியது. “விமானத்தின் மீது ஆண்டெனாவை வைத்தால், அது எரிபொருள் செலவை அதிகரிக்கும். எலான் மஸ்க் ஒரு மேதைதான், ஆனால் அவருக்கு விமானங்களைப் பற்றி ஒன்றும் தெரியாது,” என்று ஓ’லரி கூறியிருந்தார். இதற்குப் பதிலளித்த மஸ்க், “ஓ’லரி ஒரு முட்டாள் (Idiot), அவரை வேலையை விட்டுத் தூக்க வேண்டும்,” என்று காட்டமாகப் பதிவிட்டிருந்தார்.
வைஃபை பஞ்சாயத்து (The X Outage): சமீபத்தில் எலான் மஸ்க்கின் ‘எக்ஸ்’ தளம் தொழில்நுட்பக் கோளாறால் சிறிது நேரம் முடங்கியது (Outage). இந்த வாய்ப்பை நழுவ விடாத ரயன்ஏர் நிறுவனம், “ஒருவேளை உங்களுக்கு வைஃபை வேண்டுமா எலான் மஸ்க்?” (Perhaps you need Wi-Fi?) என்று கிண்டலாக ட்வீட் செய்தது. இதனால் கடுப்பான மஸ்க், “நான் ரயன்ஏர் நிறுவனத்தையே விலைக்கு வாங்கி, ‘ரயன்’ (Ryan) என்று பெயர் கொண்ட ஒருவரை சி.இ.ஓ-வாகப் போடலாமா?” என்று ஒரு வாக்கெடுப்பை (Poll) நடத்தினார்.
“கிரேட் இடியட்ஸ்” ஆஃபர் (Great Idiots Sale): மஸ்க்கின் இந்த மிரட்டலுக்குப் பயந்து போவதற்குப் பதில், ஓ’லரி அதை வியாபாரமாக்கிவிட்டார். எலான் மஸ்க்கைக் கலாய்க்கும் விதமாக ‘தி கிரேட் இடியட்ஸ் சீட் சேல்’ (The Great Idiots Seat Sale) என்ற பெயரில் விமான டிக்கெட்டுகளை வெறும் 16.99 யூரோவுக்கு விற்கத் தொடங்கியுள்ளார். “எலான் மஸ்க் போன்ற முட்டாள்களுக்காகவே இந்தச் சலுகை. அவர் வாங்கும் முன் நீங்களும் டிக்கெட் புக் பண்ணுங்க!” என்று விளம்பரம் செய்து வருகிறார்.
இன்று டப்ளினில் ‘ஷோ’: இந்தச் சண்டையின் உச்சக்கட்டமாக, இன்று (ஜனவரி 21) டப்ளின் (Dublin) நகரில் ஒரு பிரம்மாண்டமான செய்தியாளர்கள் சந்திப்பிற்கு ஓ’லரி ஏற்பாடு செய்துள்ளார். இதில் எலான் மஸ்க்கின் “ஆன்லைன் நடவடிக்கைகள்” மற்றும் அவரது “ட்விட்டர் கலாட்டாக்களை” (Twitter Tantrums) பற்றிப் பகிரங்கமாகப் பேசப்போவதாக அறிவித்துள்ளார்.
“விமானத்தை எப்படி ஓட்டுவது என்று மஸ்க் எனக்குச் சொல்லித்தர வேண்டாம்; விமான உரிமையாளர் விதிமுறைகள் (Ownership rules) கூட அவருக்குத் தெரியாது,” என்று ஓ’லரி கூறியுள்ளது எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது.
ஒரு பக்கம் ராக்கெட் விடும் எலான் மஸ்க், மறுபக்கம் ஃப்ளைட் விடும் ஓ’லரி… இந்த ‘வானத்துச் சண்டையில்’ வெற்றி யாருக்கு என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!
