அண்ணன் தம்பியாக ஸ்டாலின்- ராகுல்; திமுக- காங். கூட்டணி பற்றி வதந்தி பரப்பினால்.. செல்வப்பெருந்தகை எச்சரிக்கை

Published On:

| By Mathi

Selvaperunthagai DMK Congress

திமுக- காங்கிரஸ் கூட்டணி குறித்து பொய் செய்திகளை- வதந்திகளைப் பரப்புகிறவர்கள் மீது அவதூறு வழக்கு தொடருவது குறித்து ஆலோசித்து வருகிறோம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை எச்சரித்துள்ளார்.

நியூஸ் 18 தமிழ்நாடு டிவி சேனலுக்கு செல்வப்பெருந்தகை அளித்த பேட்டி: நானும் சரி, எங்களுடைய அகில இந்திய பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கரும் சரி, எங்க அகில இந்திய தலைமையும் கூட்டணி குறித்து தெளிவா இருக்குறோம்.

ADVERTISEMENT

திராவிட முன்னேற்றக் கழகத்தோடு கூட்டணி பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால் விஜய்யின் தவெகவுடன் பேசுவதாக வதந்திகளைப் பரப்புவது, கிரிஷ் சோடங்கர் சொல்வதைத் திரித்துச் சொல்வது.. என சிலர் செயல்படுகின்றனர். கிரிஷ் சோடங்கர், எங்கேயுமே நாங்கள் வேறு கட்சியுடன் பேசுகிறோம் என்று சொல்லவில்லை. நானே அதுக்கு சாட்சி, தெளிவாக இருக்கிறேன்.

அடுத்து மான நஷ்ட வழக்குதான்..

ADVERTISEMENT

திமுக கூட்டணியில் நாங்கள் பலமாக இருக்கிறோம், பேசிக்கொண்டிருக்கிறோம் என்றுதான் கிரிஷ் சோடங்கர் சொல்கிறார். இதைத் திருப்பித் திருப்பி குழப்பி வருகிறார்கள் என்றால், யாராவது இனிமேல் தொலைக்காட்சியில சொல்லாததைச் சொன்னால், சொல்லாததை எழுதினால் நாங்கள் மான நஷ்ட ஈடு வழக்கு (Defamation case) கூடப் போடுவதற்குத் தயாராகிக் கொண்டிருக்கிறோம். அந்த நிலைக்கு எங்களை தள்ளிவிடாதீர்கள்.

திமுகவுடன் சித்தாந்த கூட்டணி

ADVERTISEMENT

நான் பலமுறை சொல்லியிருக்கிறேன், திராவிட முன்னேற்றக் கழகத்தோடு காங்கிரஸ் கூட்டணி என்பது வலிமையான கூட்டணி, ஐடியலாஜிக்கல் கூட்டணி (Ideological Alliance). இந்த ஐடியாலஜில இருந்து யாரும் நழுவ முடியாது. இயற்கையான கூட்டணி இது, வெற்றிக் கூட்டணி, தொடர் வெற்றிக் கூட்டணி. இதுல குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள்.

எந்தத் தேர்தல் வந்தாலும் பேச்சுவார்த்தை நடக்கும், முன்னப் பின்ன இருக்கும். அதிகமா கேட்போம், அவங்க கம்மியா சொல்லுவாங்க, கடைசியில ஒரு நிலைக்கு வந்து நிறுத்தப்படும். இதுதான் யதார்த்தம். ஆனா சில பேர் இதுமாதிரி எல்லாம் ஒரு செய்தியைக் கொடுத்து ஒரு ஸ்பெகுலேஷன் பண்ணி மகிழ்ச்சி அடையுறாங்கன்னா அது வருத்தத்திற்குரியது, அதுமாதிரி எல்லாம் தவிர்க்கணும். இது வந்து இந்தத் தேசத்தைக் காக்கின்ற கூட்டணி, தமிழ் மண்ணைக் காக்கின்ற கூட்டணி.

அண்ணன் தம்பியாக ஸ்டாலின் – ராகுல்

ராகுல் காந்தியும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினும் ஒருங்கிணைந்து இந்தப் பணியை மேற்கொண்டு இருக்கிறார்கள். அண்ணன் தம்பி போல் சகோதரர்களாக தமிழ்நாட்டில், இந்தியாவில் பணியாற்றி வருகிறார்கள். ஆக இப்படிப்பட்ட தவறான செய்திகளை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன், மறுக்கிறேன். கிரிஷ் சோடங்கர் , எங்கேயுமே விஜய்யின் தவெகவுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது என சொல்லவில்லை, யாரும் சொல்லவில்லை. நாங்கள் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் மட்டும்தான் பேசிக் கொண்டிருக்கிறோம்.

விஜய்யின் தவெகவுடன் பேசவில்லை

நாங்க இதுவரை யாரும் விஜய்யின் தவெகவுடன் பேசவில்லை, எந்தக் கட்சியோடும் பேசவில்லை. நாங்கள் பேசிக்கொண்டிருப்பது திராவிட முன்னேற்றக் கழகத்தோடு மட்டும்தான். இதைக் குழப்புவதற்கு அவர் பேசினார், இவர் பேசினார், அவர் சொன்னார், இவர் சொன்னார் என்றால் நாங்கள் பதில் சொல்ல முடியாது. ஒவ்வொருத்தருக்கு ஒரு புரிதல் இருக்கிறது, ஒவ்வொருத்தருக்கு ஒரு சில கருத்துக்கள் இருக்கிறது, எதிர்வினை ஆற்றுவார்கள் எல்லாம் செய்வார்கள். ஆனால் எங்களுடைய அகில இந்திய தலைமை தெளிவாக இருக்கிறது.

திமுக கூட்டணியில் பேச்சுவார்த்தை நிலவரம்

திராவிட முன்னேற்றக் கழகத்தோடுதான் பேச வேண்டும் என்று எங்களுடைய குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. திமுக தற்போது தோழமைக் கட்சிகளை அழைத்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். அங்க கூட்டணியில இருப்பதிலேயே காங்கிரஸ் பேரியக்கம்தான் பெரிய கட்சி, இன்று 17 சட்டமன்ற உறுப்பினர்கள், 25 இடத்துல போட்டியிட்டோம். ஆகையால் நிறைவாகக் கூப்பிடுவார்களா, இடையில் கூப்பிடுவார்களா என்று தெரியவில்லை. அவர்கள் எப்பொழுது அழைக்கிறார்களோ அப்பொழுது போய் பேசுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.

ராஜ்யசபா தேர்தல்

ராஜ்யசபா தேர்தல் தொடர்பாக அகில இந்திய தலைமையோடு பேசியிருக்கிறேன். இன்று மாலைக்குள் பேசி ஒரு முடிவெடுப்போம். அதையும் நாங்கள் பத்திரிகையாளர்களிடம் சொல்லுவோம்.

திமுக கூட்டணி தொகுதிப் பங்கீடு

திமுக கூட்டணி தொகுதிப் பங்கீட்டில் எந்த ஒரு நெருக்கடியும் வராது. முதலமைச்சர் ஸ்டாலின் இதைச் சரியாகக் கையாள்வார். எல்லோருக்கும் உரிய மரியாதையைக் கொடுப்பார், எல்லோரையும் அக்காமிடேட் (Accommodate) செய்வார். எந்தப் பிரச்சனையும் வராது, சுமூகமாக முடிப்பார்.

தொகுதிப் பங்கீட்டில் தாமதம் இல்லை

திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் ஒரு தாமதமும் இல்லையே, போன 2021 தேர்தலில் பிப்ரவரி 26-ஆம் தேதிதான் குழுவை போட்டாங்க. இன்னைக்கு தேதி 26. ஆனால் இதுக்கு முன்னாடியே நிறைய கட்சிகளைக் கூப்பிட்டு பேசிட்டாங்க. பிராசஸ் ரொம்ப ஃபாஸ்ட்டா (Process very fast) போயிட்டு இருக்கு. ஆகையால் எங்கள் தரப்பில் எந்தவித தாமதமும் இல்லை. இந்தியா கூட்டணி என்பது முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில செம்மையாக, சரியான முறையில் இந்தத் தேர்தலைச் சந்திக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறோம். காங்கிரஸ் கட்சிக்கான தொகுதிகளை அகில இந்திய தலைமைதான் முடிவு செய்யும். இவ்வாறு செல்வப்பெருந்தகை கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share