கரூர் கூட்ட நெரிசல் மரணங்களால் கெட்ட பெயர், அரசியலில் பின்னடைவு என்று இருந்தாலும் விஜய்யின் சினிமா மார்க்கெட்டில் அது ஒரு துரும்பைக் கூட அசைக்கவில்லை.
(அநேகமாக, ஒருவேளை) இதுதான் விஜய்யின் கடைசி படம் (என்று இப்போதும் நம்பபப்படுகிறது) என்பதால் விஜய் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கி இருக்கும் ஜனநாயகன் படத்தின் வியாபாரம் தங்கம், வைரம், இத்யாதி விலையை விட அதிக உயரத்தில் இருக்கிறது.
படத்தின் தியேட்டரிகல் ரைட்ஸ் ஒரே நபருக்கு வழங்கபடும் வழக்கம் இந்தப் பட விஷயத்தில் உடைக்கப்பட்டுள்ளது.
மொத்தம் ஐந்து விநியோகஸ்தர்களுக்கு பிரித்து விற்கப்பட்டிருக்கிறது.
சேலம், திருச்சி, மதுரை ஏரியாவை ஃபைவ்ஸ்டார் செந்தில் மற்றும் நாராயணசாமி 35 கோடிக்கு வாங்கி இருக்கிறார்கள்.
பிரதாப் என்பவர் வாங்கி இருக்கும் திருநெல்வேலி, கன்னியாகுமரி ஏரியா, எஸ் பிக்சர்ஸ் சீனு வாங்கி இருக்கும் வட ஆற்காடு, தென் ஆற்காடு ஏரியா, மன்னார் வாங்கி இருக்கும் கோவை ஏரியா, ஏ ஜி எஸ் மாலி வாங்கி இருக்கும் சென்னை செங்கல்பட்டு ஏரியா இவற்றின் மொத்த விலை 70 கோடி.
ஆக மொத்தம் 105 கோடி.
தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு படத்தின் தமிழ்நாடு தியேட்டரிக்கல் ரைட்ஸ் 105 கோடிக்கு விற்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை.
வழக்கம்போல் வியாபாரத்தில் பென்ச் மார்க் கிரியேட் செய்திருக்கிறது விஜய் படம்.
தாவணிக் கனவுகள் பூஜை போடப்பட்ட அன்றே ஒரு கோடி ரூபாய்க்கு பிசினஸ் ஆனது அப்போது பெரிய விஷயமாக பேசப்பட்டது. இன்று அதைவிடப் பெரிய சாதனையை செய்துள்ளது ஜனநாயகன்.
ஜனநாயகன் பண நாயகனாகவும் இருக்கிறான்.
தவிர, என்னதான் அரசியல் மாறுபாடு இருந்தாலும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் ஜனாநாயகனை விட்டு விடாது. கொள்கை வேறு வியாபாரம் வேறு என்பது அவர்களுக்குத் தெரியும் என்று கோடம்பாக்கத்தில் ஒரு குரூப் குத்த வச்சு சவால் வீட்டுக் கொண்டிருந்தது.
ஆனால் அது நடக்கவில்லை. ரெட் ஜெயண்ட் கிட்டயே போகவில்லை.
இது அரசியலில் திமுக தரப்பும் விஜய் தரப்பும் ஒன்றை ஒன்று எதிர்ப்பதில் எவ்வளவு சீரியசாக இருக்கிறது என்பதற்கு உதாரணம் என்கிறார்கள்.
- ராஜ திருமகன்
