ஆளுநர் மாளிகை முன்பு வெடிகுண்டு வீசிய ரவுடி கருக்கா வினோத்துக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஒன்றாம் எண் கேட் முன்பு 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மாலை 4 மணியளவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
சென்னையையே பரபரப்பாக்கிய இந்த சம்பவத்தில் ஈடுபட்ட சரித்திர பதிவேடு ரவுடியான கருக்கா வினோத்தை ஆளுநர் மாளிகை முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்தனர்.
சிறையில் இருந்து விடுதலை செய்வதற்கு ஆளுநர் ஒப்புதல் தராததால் தான் பெட்ரோல் குண்டு வீசியதாக ரவுடி வினோத் வாக்குமூலம் கொடுத்தார்.
ஆளுநர் மாளிகை முன்பு நடந்த இந்த சம்பவம் குறித்து சென்னை காவல் ஆணையரிடம் ஆளுநர் மாளிகை புகார் அளித்தது. இந்த வழக்கில் நியாயமான விசாரணை நடைபெறவில்லை என்றும் குற்றம்சாட்டியது.
இதுதொடர்பான வழக்கு பூந்தமல்லி என்.ஐ.ஏ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த விசாரணை நிறைவடைந்த நிலையில், கருக்கா வினோத்திற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இன்று (நவம்பர் 11) உத்தரவு பிறப்பித்துள்ளது.
கருக்கா வினோத்திற்கு 10 ஆண்டு சிறையுடன் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் மாளிகை மட்டுமின்றி இவர் ஏற்கனவே 2021 இல் தேனாம்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் வெடிகுண்டு வீசியிருக்கிறார், அதன் பின் பாஜக அலுவலக கமலாலயத்தில் வெடிகுண்டு வீசியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
