கொடுமை… முதியவர் மீது நாயை ஏவி தாக்குதல் : பாய்ந்த வழக்கு!

Published On:

| By Kavi

சென்னையில் ராட்வீலர் நாயை ஏவி முதியவரை தாக்கிய இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. rottweiler dog attacks elder man

சென்னையில் நாய்களை வளர்க்க கட்டுப்பாடுகள் உள்ளது. ஆனால் செல்லப்பிராணிகளை வளர்க்கும் அதன் உரிமையாளர்கள், கட்டுப்பாடுகளை பின்பற்றாததால் பொதுமக்கள் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது.  

கடந்த 06.05.2024 அன்று சென்னையில் 5 வயது சிறுமியை ராட்வீலர் இன வகையைச் சார்ந்த வளர்ப்பு நாய்கள் கடித்து குதறியது. இதில் அச்சிறுமி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். 

மாங்காடு பகுதியிலும் 11 வயது சிறுவன் ராட்வீலர் நாய் கடியால் பாதிக்கப்பட்டார். இதனால் நாய்களை வளர்ப்பதற்கான கட்டுப்பாடுகளை சென்னை மாநகராட்சி கடுமையாக்கியது.  

வெளியில் நாய்களை நடைப்பயிற்சிக்காக அழைத்து வரும்போது வாயைக் கட்டி அழைத்து வரவேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால் இதை சில உரிமையாளர்கள் பின்பற்றுவதே இல்லை. 

இதுஒருபக்கம் என்றால்  இன்னொரு பக்கம் சென்னை புழல் பகுதியில் சாலையில் சென்ற முதியவரை, அந்த பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் கவியரசன் தனது ராட்வீலர் நாயை ஏவி தாக்கியுள்ளார். 

கணபதி நகரில் வசிக்கும் இவர் ராட்வீலர் நாயுடன் நாள்தோறும் வாக்கிங் சென்று வருகிறார். ஆனால் நாயை கயிறு கட்டாமலும், வாய் பகுதியை மூடாமலும் அழைத்துச் சென்று வருகிறார்.

இந்தநிலையில் நேற்று அதே பகுதியைச் சேர்ந்த மாரியப்பன்(72)  தனது மனைவியுடன் சென்று கொண்டிருந்த போது, இந்த நாய் குலைத்திருக்கிறது. இதனால் அவர், வாயைக் கட்டி அழைத்து வரலாமே… யாரையாவது கடித்துவிட்டால் என்ன ஆவது என கேட்டிருக்கிறார். 

இதனால் ஆத்திரமடைந்த கலையரசன், அந்த நாயை ஏவிவிட்டுள்ளார்.  தனது உரிமையாளரின் பேச்சை கேட்டு அந்த நாய், முதியவரின் மேலே ஏறி தாக்கி, அவரது வேட்டியை இழுத்துவிட்டு அரைநிர்வாணமாக்கியது.  அப்போது அவரது மனைவி, நாயை விரட்ட முயன்று காப்பாத்துங்க என்று கதறிய போது அவரை பார்த்து அந்த நாய் குலைத்துள்ளது.  

முதியவரை தாக்கி உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் நடந்த இந்த  சம்பவம் அந்த பகுதி மக்களுக்கு மிகுந்த மனவருத்தத்தையும் பீதியையும் ஏற்படுத்தியது. இதனால் அங்கு கூடிய சிலர் கவியரசனை தட்டி கேட்டனர். அப்போது அவர்,   எனக்கு காவல்துறை உயர் அதிகாரியையும் வழக்கறிஞர்களையும் தெரியும் எனக் கூறி மிரட்டியிருக்கிறார். அதே பகுதியைச் சேர்ந்த   ரமேஷ் என்ற இளைஞர் அவரிடம் வாக்குவாதம் செய்த போது, அவரிடமும் நாயை ஏவிவிட்டுள்ளார் கவியரசன்.

அப்போது, ராட்வீலர் நாய் ரமேஷின் தொடையில் கடித்துள்ளது. 

இந்த அராஜகத்தை தொடர்ந்து ரமேஷ் அளித்த புகாரின் பேரில் கவியரசன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்

தனக்கு நேர்ந்த இந்த கொடுமை குறித்து இன்று (மார்ச் 21) செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த  72 வயது முதியவர் மாரியப்பன்,  “என் மீது ஏறி அந்த நாய் தாக்கும் போது என் மனைவி காப்பாத்துங்க என்று கத்துகிறார். ஆனால் அவன் எங்களை வேடிக்கை பார்த்து சிரித்துக்கொண்டிருந்தான். வேட்டியை இரண்டு முறை இழுத்துவிட்டுவிட்டது” என்று வேதனையுடன் கூறினார். 

அவரது மனைவி கூறுகையில்,  “மறுக்க மறுக்க நாய் வேட்டியை இழுக்கிறது. அவர் (கணவர்) அப்படியே நடுங்குகிறார். அதை பார்க்கும்போது என்னால் பார்க்க முடியவில்லை” என்று கண்ணீருடன் கூறினார்.  rottweiler dog attacks elder man

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share