சென்னை மாநகராட்சி பட்ஜெட்டை மேயர் பிரியா இன்று (பிப்ரவரி 18) தாக்கல் செய்தார்.
காலை 11 மணிக்கு தொடங்கிய பட்ஜெட் உரையில் மாநகர துறை வாரியான 90 அறிவிப்புகளை வெளியிட்டார்.
பட்ஜெட் உரையை சுமார் 1 மணி நேரம் 36 நிமிடங்கள் வாசித்தார்.
அவர் வெளியிட்ட அறிவிப்பில்,
கல்வி
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மேல்நிலை, உயர்நிலை மற்றும் மையப்பள்ளி என 100 சென்னை பள்ளிகளுக்கு உயர்தர தொழில்நுட்ப வசதியுடன் கூடிய பன்முகசெயல்பாட்டு அச்சுப்பொறி இயந்திரம் ரூ.60 இலட்சம் மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்படும்.
சென்னை மாநகராட்சியில் உள்ள தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 100 மாணவர்களுக்கு மேல் பயிலும் 180 பள்ளிகளில் தற்காலிக உடற்கல்வி ஆசிரியர்கள் பெற்றோர் ஆசிரியர் கழகம் / பள்ளி மேலாண்மைக் குழு (PTA / SMC) மூலம் 10 மாதங்களுக்கு ரூ.3.65 கோடி மதிப்பீட்டில் பணியமர்த்தப்படுவார்கள்.
250 தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள வகுப்பறைகள், மதிய உணவு சமையற்கூடங்கள், ஆய்வகங்கள், அரங்கங்கள், கழிப்பறைகள், பள்ளி சுற்றுச்சுவர்கள் மற்றும் பள்ளி வளாகங்களுக்கு ஒரே மாதிரியான வண்ணக் குறியீடு செய்ய ரூ.20 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
1 முதல் 15 மண்டலங்களில் உள்ள அனைத்து சென்னை மேல்நிலைப் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு மாணவ-மாணவியர்களுக்கு உயர்கல்விக்கான ஒரு வருட சிறப்பு பயிற்சிக்கு ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
1 முதல் 15 மண்டலங்களில் உள்ள சென்னை பள்ளிகளில் மின்வசதிகள், மோட்டார் மற்றும் பம்பு போன்றவைகளில் ஏற்படும் பழுதுகளை சரிபார்ப்பதற்கும் மற்றும் வருடாந்திர பராமரிப்பு பணிகள் ரூ.15 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
பள்ளிகளில் பயிலும் 6 முதல் 9ஆம் வகுப்பு மாணவ-மாணவியர்களுக்கு ரூ.1.90 கோடி மதிப்பீட்டில் யோகா மற்றும் தற்காப்புக்கலைப் பயிற்சி அளிக்கப்படும்.
206 தொடக்க மற்றும் 130 நடுநிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவியர்களுக்கான காலணி வைப்பு அறை ரூ.90 இலட்சம் மற்றும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு தேவையான மேசைகள், நாற்காலிகள் கொள்முதல் செய்ய ரூ.2.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
சென்னை பள்ளிகளில் பழுதடைந்த 95 பள்ளிக் கட்டடங்களை சீரமைத்தல், சிதிலமடைந்த 9 கட்டடங்களை இடித்துவிட்டு புதிய கட்டடங்களைக் கட்டுதல், 113 கூடுதல் வகுப்பறைகள் கட்டுதல் மற்றும் 14 பள்ளிகளில் சுற்றுச்சுவர் கட்டுதல் போன்ற பணிகள் ரூ.40 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
சென்னை நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 8 முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் 24,118 மாணவ- மாணவியர்களுக்கு தமிழ்-ஆங்கில அகராதி ரூ.37 இலட்சம் செலவில் வழங்கப்படும்.
சென்னை பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், உயிரியல், வேதியியல், இயற்பியல், பொறியியல் மற்றும் கணினி அறிவியல் போன்ற பாடங்களில் அவர்களின் கற்றல் திறனை மேம்படுத்திட ஒரு புதிய நவீன அறிவியல் மையம் (Modern Science Centre) உருவாக்கப்படும்.
மாணவ- மாணவியர்களுக்கு உளவியல் ஆலோசனைகள் வழங்க 46 உயர்நிலைப் பள்ளிகளுக்கு தேவையான 17 உளவியல் ஆலோசகர்கள் தொகுப்பூதியம் அடிப்படையில் 10 மாதங்களுக்கு ரூ.59.50 இலட்சம் மதிப்பீட்டில் நியமனம் செய்யப்படுவார்கள்.
மண்டலம் 9ல் தசைத்திறன் குறைபாடுள்ள (Muscular Dystrophy) குழந்தைகளுக்கான உள்ள சிறப்பு சிறப்பு பள்ளியைப் போன்று இதர 14 மண்டலங்களிலும் பொது-தனியார் பங்களிப்பு (PPP) மற்றும் அரசு (Non Governmental Organization) 4 பள்ளிகள் நிறுவப்படும்.
சென்னை பள்ளிகளில் பயிலும் மாணவ- மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வரவும், கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லவும் 11 பேருந்துகள் ரூ.4 கோடி மதிப்பீட்டில் இயந்திரப் பொறியியல் துறையின் மூலம் கொள்முதல் செய்யப்படும்.
பள்ளி செல்லாத மாணவ- மாணவியர்கள், இடை நின்ற மாணவ-மாணவியர்கள் மற்றும் இடம் பெயர்ந்த மாணவர்கள் ஆகியோர்களை கண்டறிந்து அவர்களுக்கான அடிப்படைக் கல்வியைக் கற்பிக்க 3 பள்ளிகளை தேர்ந்தெடுத்து அப்பள்ளியில் மாணவ-மாணவியர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வகுப்பறைகளை ஒதுக்கி பாடப்பயிற்சி (Bridge Course) வழங்கப்படும்.
சுகாதாரம்
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 1 முதல் 15 மண்டலங்களில் உள்ள 360 சுகாதார மையங்களில் கருப்பை வாய் புற்று நோய் உருவாக்கும் எச்.பி.வி. (HPV) வைரஸை கண்டறிய பரிசோதனை மேற்கொள்ள எச்.பி.வி, டி.என்.ஏ (HPV DNA), RTPCR கிட் 50,000 எண்ணிக்கையில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் கொள்முதல் செய்து பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 1 முதல் 15 மண்டலங்களில் உள்ள சுகாதார மையங்களில் பணிபுரியும் 720 செவிலியர்கள் மற்றும் காச நோய் களப்பணியாளர்களுக்கு Tablet ரூ.2.50 கோடி செலவில் கொள்முதல் செய்யப்படும்.
1 முதல் 15 மண்டலங்களில் உள்ள மக்களைத்தேடி மருத்துவப் பிரிவில் பணியாற்றும் 600 களப்பணியாளர்களுக்கு ஒரே மாதிரியான மருத்துவம் சார்ந்த உடைமைகள் வைக்கும் பை (Medical Kit Bag) ரூ.50 இலட்சம் செலவில் வழங்கப்படும்.
1 முதல் 15 மண்டலங்களில் உள்ள சுகாதார மையங்களில் மின்னணு அறிவிப்பு ~ (Digital Boards) 60 சுகாதார மையங்களுக்கும் ரூ.50 இலட்சம் செலவில் அமைக்கப்படும்.
சென்னை மாநகராட்சியின் 1 முதல் 15 மண்டலங்களுக்குட்பட்ட 15 மருத்துவ மண்டலங்களில் உள்ள 15 சுகாதார மையங்களில் 7 நடமாடும் ஊடுகதிர் (X-Ray) இயந்திரத்தின் வழியாக எடுக்கப்படும் ஊடுகதிர்களை செயற்கை நுண்ணறிவு (AI) வழியாக ஆய்வறிக்கை வழங்க ஏதுவாக செயற்கை நுண்ணறிவு மென்பொருள் மற்றும் மென்பொருளை செயல்படுத்குவதற்கான உபகரணங்கள் ரூ.1 கோடி மதிப்பீட்டில் கொள்முதல் செய்து பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள பழுதடைந்த மாவட்ட காசநோய் மருத்துவமனைக்குப் பதிலாக, புதிய கட்டடம் கட்டும் பணிகள் ரூ.5 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
தொற்று நோய் மருத்துவமனையில் புறநோயாளி பிரிவுக்காக ரூ.6 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டப்படும்.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட1 முதல் 15 மண்டலங்களில் உள்ள 360 சுகாதார மையங்களில் உள்ள கட்டடங்களை சீரமைத்தல் மற்றும் பழுதுபார்ப்பு பணிகள் மேற்கொள்வதற்கு ஒரு வட்டாரத்திற்கு ரூ.5 கோடி வீதம் 3 வட்டாரங்களில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் சுகாதார மையங்கள் சீரமைக்கப்படும்.
வெறிநாய்க்கடி நோய்த் தடுப்பூசி மற்றும் அகப்புற ஒட்டுண்ணி நீக்கும் மருந்து செலுத்தும் திட்டத்தை அனைத்து தெரு நாய்களுக்கும் செயல்படுத்த ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.
சென்னை மாநகராட்சியின் பொது சுகாதாரம் மற்றும் மக்கள் நலனை பாதுகாக்க நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பூச்சிகள் மற்றும் கொசுத்தொல்லையை கட்டுப்படுத்த நீர்வழிப்பாதைகள், மழைநீர் வடிகால் கால்வாய்கள் என கொசு உற்பத்தியாகும் இடங்களைக் கண்டறிந்து தரமான பூச்சிக் கொல்லி மருந்துகள் மற்றும் மேம்பட்ட உபகரணங்களைப் பயன்படுத்தி கொசுப்புழு அடர்த்தியை நிகழ்நேர கண்காணிப்பு (Real time Monitoring) செய்வதற்கு மூன்று ஆண்டுகளுக்கு, ஆண்டொன்றிற்கு சுமார் ரூ.25 கோடி ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
திடக்கழிவு மேலாண்மை

சென்னை மாநகராட்சியின், தெற்கு வட்டார பகுதியில் 1000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட காற்றுப்புகும் வகையில் பதனம் செய்யும் உரம் தயாரிக்கும் நிலையம் 20 ஏக்கர் பரப்பளவில் பொது தனியார் பங்களிப்பின் (PPP) கீழ் அமைக்கப்படும்.
கோடைக் காலங்களில் வெயிலின் தாக்கத்தை போக்கவும், நீர்ச்சத்தை பராமரிக்கவும், உடல் வெப்பத்தை தணிக்கவும், பெருநகர சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் அனைத்து நிரந்தர, தற்காலிக மற்றும் வெளிமுகமை தூய்மைப் பணியாளர்களுக்கும் குளிர்ச்சியான மோர் வழங்கும் புதிய திட்டம் தொடங்கப்படும்.
இயந்திரவியல்
சென்னை மாநகராட்சியில் சாலைகளை சுத்தம் செய்யும் பணிக்காக 20 எண்ணிக்கையில் மின்கலத்தில் இயங்கும் சிறிய வகை இயந்திரப் பெருக்கி வாகனங்கள் ரூ.8 கோடி மதிப்பீட்டில் கொள்முதல் செய்து வழங்கப்படும்.
சென்னை மாநகராட்சியில் பேருந்து நிழற்குடைகள் மற்றும் நடைபாதைகளை தண்ணீர் மூலம் சுத்தம் செய்யும் பணிக்காக 10 எண்ணிக்கையில் 2000 லிட்டர் கொள்ளளவு கொண்ட Jet Washer Mounted இயற்கை எரிவாயு (CNG) மூலம் இயங்கும் இலகுரக வாகனங்கள் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்படும்.
பூங்கா மற்றும் விளையாட்டு
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பூங்காக்களில் 200 பூங்காக்களை தற்காலத்திற்கு ஏற்ற வகையில் முதற்கட்டமாக அறிவியல் பூர்வமாக பொலிவேற்றம் செய்வதற்கு ரூ.60 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
சென்னை மாநகராட்சியால் உருவாக்கி பராமரிக்கப்பட்டு வரும் 25 எண்ணிக்கையிலான பூங்காக்களில் நீர் உறிஞ்சுதல் (Sponge Park) அமைப்பு ரூ.5 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
பூங்காக்களில், மழை நீர் சேகரிப்பு (Rain Water Harvesting) திட்டம் ரூ.20 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 5 பூங்காக்களில் சிறப்பு குழந்தைகளுக்கான உபகரணங்கள் உள்ளடக்கிய பூங்காக்களாக ரூ.10 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
மழைநீர் வடிகால்

பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை புனரமைக்கும் பணிகள் ரூ.100 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
நீர்வழி கால்வாய்களில் தடுப்புச்சுவர் இல்லாமல் விடுபட்ட இடங்களில் இணைப்பு வெள்ளத் தடுப்புச் சுவர் அமைக்க ரூ.55 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
பக்கிங்ஹாம் கால்வாய் வழித்தடத்தில் தொடர்ச்சியான நடைபாதை, மிதிவண்டிப் பாதை, மியாவாக்கி குறுங்காடு, குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள், இருக்கை வசதிகளுடன் கூடிய நகர்ப்புற பசுமையாக்கல் திட்டம் (Urban Greening) ரூ. 45 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட கடற்கரைகளை இணைக்கும் வகையிலும், MRTS, மெட்ரோ நிலையம், பேருந்து நிறுத்தங்கள் மற்றும் புறநகர் இரயில் நிலையங்களை இணைக்கும் வகையிலும் சாத்தியமுள்ள வழித்தடங்களில் நடை பாதை பயண மற்றும் மிதிவண்டி பாதை 25 கி.மீ தூரத்திற்கு ரூ.50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
சென்னை பள்ளிகளுக்கு பாதுகாப்பான வழித்தடங்கள் 50 கி.மீ தூரத்திற்கு ரூ.200 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
மின்ட்சாலை – வண்ணாரப்பேட்டை மெட்ரோ மற்றும் சேப்பாக்கம் -மெரினா ஆகிய இடங்களில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் பன்முக போக்குவரத்து ஒருங்கிணைப்பு அமைக்கப்படும்.
மெரினா கடற்கரையில் கலங்கரை விளக்கம் முதல் அண்ணா நினைவிடம் வரை பொது தனியார் பங்களிப்பு (PPP) முறையில் கயிறு வழித்தடம் (Rope way car) அமைக்கப்படும்.

கட்டடத் துறை
சென்னை மாநகராட்சியில் 50 இடங்களில் மயான பூமிகளை மேம்படுத்தும் பணிகள் 5.50 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
சென்னை மாநகராட்சியில் புதியதாக 6 இடங்களில் இரவு காப்பகம் மொத்தம் ரூ 9 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் இடம்பெயரும் தொழிலாளர்கள், வீடில்லாத நபர்கள் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் 200 தற்காலிக / இடைநிலை தங்குமிடங்கள் (கன்டெய்னர்-கொள்கலன் வீடுகள்) ரூ.12 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைவருக்கும் விளையாட்டு, கலை, கலாச்சாரம் மற்றும் பொழுதுபோக்குகளை ஊக்குவிக்கும் நோக்கில், மகிழ்ச்சி மற்றும் பொழுதுபோக்கு என்ற பிரிவு பெருநகர சென்னை மாநகராட்சியில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.
பேருந்து சாலைகள்
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பொது இடங்களில் வழிகாட்டும் மற்றும் அறிவிப்புப் பலகைகள் ரூ.20 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட முக்கிய சாலை சந்திப்புகளை மேம்படுத்த ரூ.10 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
மின் துறை
பெருநகர சென்னை மாநகராட்சியில் ஏற்கனவே இயங்கிவரும் நம்ம சென்னை கைப்பேசி செயலி 1.0ஐ மறுவடிவமைப்பு செய்து நம்ம சென்னை கைப்பேசி செயலி 2.0ஆக (Chennai Mobile App) மேம்படுத்தப்படும் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி www.chennaicorporation.gov.in அதிகாரப்பூ வ இணையதளம் 2.0ஆக மறுவடிவமைப்பு செய்யப்படும். இதற்காக ரூ.2.50 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம்
வெள்ளக் கண்காணிப்பு தொடர்பான பணிகளை மேற்கொள்ள 100 மழைநீர் வெளியேற்றும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் ரூ.2 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.
சென்னை மாநகராட்சியில் உள்ள நீர்நிலைகளை கண்காணிப்பதற்கு செயற்கை நுண்ணறிவு (AI) உதவியுடன் ட்ரோன் ஆய்வு அமைப்பு ரூ.10 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.
வருவாய் துறை
கையடக்க கருவியின் (HHD/POS) மூலம் சொத்துவரி எளிதாக செலுத்தும் வகையில் QR Code வசதியை கையடக்கக் கருவியில் ஏற்படுத்தப்படும்.
சொத்துவரி செலுத்தும் போது வாட்ஸ் ஆப் வழியாக வரி ரசீதினை குறுந்தகவலாக அனுப்பப்படும்.
சென்னை மாநகராட்சியில் உள்ள 10 சமுதாய நலக்கூடங்கள் அனைத்து வசதிகளுடன் ரூ.20 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
மண்டலம் -15ல் ரூ.7 கோடி மதிப்பீட்டில் புதியதாக வணிக வளாகம் கட்டடத்துறை மூலமாக மேற்கொள்ளப்படும்.
கடந்தாண்டு 62 அறிவிப்புகள் மட்டுமே இருந்த நிலையில் இந்தாண்டு 90 அறிவிப்புகளை மேயர் பிரியா வெளியிட்டுள்ளார்.
