யூடியூப் திடீர் முடக்கம்: உலகளவில் லட்சக்கணக்கான பயனர்கள் அவதி

Published On:

| By Pandeeswari Gurusamy

கூகுள் நிறுவனத்திற்குச் சொந்தமான பிரபல வீடியோ பகிர்வு தளமான யூடியூப் இன்று (பிப்ரவரி 18) காலை முதல் உலகளவில் திடீரென முடங்கியது. இதனால் லட்சக்கணக்கான பயனர்கள் வீடியோக்கள் பார்க்க முடியாமல் கடும் அவதிக்குள்ளாகினர்.

அவுட்டேஜ் கண்காணிப்பு தளமான Downdetector தரவின்படி, அமெரிக்காவில் மட்டும் 3.2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பிரச்சினை குறித்து புகார் அளித்தனர். உச்சக்கட்டத்தில் 3.4 லட்சம் வரை புகார்கள் பதிவாகின. இந்தியா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளிலும் இதே போன்ற பாதிப்பு ஏற்பட்டது. இந்தியாவில் சுமார் 19,000-க்கும் மேற்பட்ட பயனர்கள் பிரச்சினை குறித்து தெரிவித்தனர்.

ADVERTISEMENT

பயனர்கள் யூடியூப் முகப்புப் பக்கத்தைத் திறக்கும்போது “Something went wrong” என்ற பிழை செய்தி தோன்றியது. 56% பயனர்கள் செயலி இயங்கவில்லை என்றும், 17% பயனர்களால் இணையதளத்தில் யூடியூப் பயன்படுத்த முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். யூடியூப் டிவியிலும் ஒளிபரப்பில் தடை ஏற்பட்டது.

வீடியோக்கள் ஏற்றப்படாமலும், தேடல் வசதி சரியாக இயங்காமலும் இருந்தது. யூடியூப் ஆப், யூடியூப் மியூசிக், யூடியூப் கிட்ஸ், யூடியூப் டிவி ஆகியவையும் பாதிக்கப்பட்டன. கூகுள் நிறுவனம் இதனை “recommendations system” இல் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு என உறுதிப்படுத்தியது. இதனால் வீடியோக்களை பார்ப்பதில் சிக்கல் ஏற்பட்டதாகவும், சேவையை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றதாகவும் தெரிவித்தது.

ADVERTISEMENT

சுமார் அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த முடக்கம் பின்னர் சரிசெய்யப்பட்டது. யூடியூப் அதிகாரப்பூர்வ அறிவிப்பில், “பிரச்சினை தீர்க்கப்பட்டுவிட்டது. யூடியூப்.காம், ஆப், மியூசிக், கிட்ஸ், டிவி உள்ளிட்ட அனைத்து தளங்களும் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share