ரோந்த்: விமர்சனம்!

Published On:

| By uthay Padagalingam

Ronth Malayalam Movie Review

தொடரும் சஹி கபீரின் ‘போலீஸ்’ கதைகள்! Ronth Malayalam Movie Review

மகேஷிண்ட பிரதிகாரம், தொண்டிமுதலும் த்ரிசாக்‌ஷியும், ஜோஜி படங்களின் இயக்குனராக அறியப்படும் திலேஷ் போத்தன் தொடர்ந்து தயாரிப்பாளராக, நடிகராகப் பல படங்களில் தனது பங்களிப்பைத் தந்து வருகிறார். சென்னையில் கல்லூரி படித்த அனுபவத்தைக் கொண்ட ரோஷன் மேத்யூ மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ், இந்தி படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். ‘கோப்ரா’வில் இவர் வில்லனாகத் தோன்றியிருந்தார். Ronth Malayalam Movie Review

இவர்கள் இருவரும் ஒரு படம் முழுக்க வந்தால் எப்படியிருக்கும்? அது காவல் துறையைச் சேர்ந்தவர்களின் தினசரி வாழ்வனுபவங்களைச் சொல்வதாக இருந்தால் திரையில் நாம் காணும் உலகம் என்னவாக இருக்கும்? தொடர்ச்சியாகக் காவல் துறை சம்பந்தப்பட்ட படங்களையே எழுத்தாக்கம் செய்துவரும் சஹி கபீர் இதனை இயக்கினால் நமக்கு கிடைக்கிற திரையனுபவம் எத்தகையதாக இருக்கும்?

ADVERTISEMENT

இந்த எதிர்பார்ப்புகளைத் தேக்கி நிற்கிறது தற்போது தியேட்டர்களில் வெளியாகியிருக்கும் ‘ரோந்த்’. நம்மூரில் ‘ரோந்து’ என்று சொல்வோமே, அதுதான் இந்த டைட்டிலுக்கான அர்த்தம். அதுவே இப்படத்தின் கதையைச் சொல்லிவிடும்.

ஆம், ஒருநாள் முழுக்க ஒரு நகரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுகிற இரண்டு காவல்துறையினரை மையப்படுத்துகிறது ‘ரோந்த்’.Ronth Malayalam Movie Review

ADVERTISEMENT

சுவாரஸ்யமான கதையா? Ronth Malayalam Movie Review

கன்னூர் வட்டாரத்திலுள்ள தர்மசாலாவில் ஒரு சப் இன்ஸ்பெக்டரும் புதிதாகச் சேர்ந்த ஒரு கான்ஸ்டபிளும் ‘ரோந்து’ பணியில் ஈடுபடுகின்றனர். அந்த சப் இன்ஸ்பெக்டர் சுமார் 25 ஆண்டு கால அனுபவம் உள்ளவர். அந்த கான்ஸ்டபிள் வேலையில் சேர்ந்து ஆறு மாதங்களாகிறது. இவர்களுக்கு இடையே இருக்கிற முரண்கள், தனிப்பட்ட குணாதிசயங்கள் மற்றும் பணி அனுபவம் ஆகியன இவ்வுலகை அவர்கள் காண்கிற பார்வையைத் தீர்மானிக்கின்றன. Ronth Malayalam Movie Review

ஒவ்வொரு தருணத்திலும் ‘உனது போலீஸ் பார்வை இப்படி இருக்க வேண்டும்’ என்று உபதேசிக்கிறார் அந்த சப் இன்ஸ்பெக்டர். ஆனால் ‘எதிலும் நேர்மை வேண்டும்’ என்று வாழும் அந்த கான்ஸ்டபிளுக்கு அது ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது. இருவருக்குள்ளும் மோதல் ஏற்படுகிறது. Ronth Malayalam Movie Review

ADVERTISEMENT

அந்த பகற்பொழுதில் தீப்பற்றுகிற அந்த முரண்கள் அடுத்த நாள் காலையில் கரிந்து கரைந்து போகின்றன. அவர்கள் எதிர்கொள்ளும் மனிதர்களும் வாழ்க்கை பிரச்சனைகளும் அதன் பின்னிருக்கின்றன. Ronth Malayalam Movie Review

அடுத்தடுத்து சில பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் அவர்களை ஒரு பிரச்சனைச் சுற்றி வளைக்கிறது. அவர்களது பணி, தனிப்பட்ட நேர்மையைக் கேள்விக்குள்ளாக்குகிறது. அதன்பின் என்ன நடந்தது என்று சொல்கிறது ‘ரோந்த்’தின் முடிவு.

இக்கதையில் சப் இன்ஸ்பெக்டர் யோஹனனாக திலேஷ் போத்தனும் போலீஸ் ஜீப் டிரைவராக ரோஷன் மேத்யூவும் நடித்துள்ளனர். இவர்களைச் சுற்றி நகர்கிற திரைக்கதையில் இதர பாத்திரங்கள் வந்து போகின்றன.

ஒரு கொலைக்குற்றத்தில் ஈடுபட்டதாகச் சொல்லி யோஹனன் கைதாவதில் இருந்து திரையில் கதை தொடங்குகிறது.

அதனால், காவல் துறையைச் சேர்ந்தவர்களின் தினசரி வாழ்வனுபவங்களைச் சொல்கிற வகையில் அமைந்த நிவின் பாலியின் ‘ஆக்‌ஷன் ஹீரோ பிஜு’ பாணியில் ‘ரோந்த்’ திரைக்கதை அமைந்தாலும், படம் பார்க்கிற நமக்குள் உள்ளூரச் சிறிது சிறிதாக அமிலச் சுரப்பு அதிகமாகிறது. அதுவே, மெதுவாக நகர்கிற திரைக்கதையையும் சுவாரஸ்யமாக உணர வைக்கிறது. Ronth Malayalam Movie Review

யார் இந்த ‘சஹி கபீர்’? Ronth Malayalam Movie Review

என்னதான் நடிப்புக் கலைஞர்களும் தொழில்நுட்பக் கலைஞர்களும் போட்டி போட்டுக்கொண்டு இப்படத்தில் உழைப்பைக் கொட்டியிருந்தாலும், ‘ரோந்த்’ முழுக்க முழுக்க ஒரு இயக்குனரின் படமாகவே அடையாளம் காணப்படும். காரணம், இயக்குனர் சஹி கபீர் திரையில் கதை சொல்லியிருக்கும் விதம் அவரது தனித்துவமான பார்வையை வெளிப்படுத்துகிறது. Ronth Malayalam Movie Review

‘இப்படம் காவல் துறையைச் சேர்ந்தவர்களை நியாயவான்களாகக் காட்டியிருக்கிறதா’ என்றால் ‘ஆம்’ என்று சொல்லலாம். போலவே, அவர்களை மோசமானவர்களாகச் சித்தரித்திருக்கிறதா என்றால், அதற்கும் ‘ஆம்’ என்று சொல்ல முடியும்.

ஒன்றுக்கொன்று எதிரான இரு வேறு கேள்விகளுக்கு எப்படி ஒரே பதிலைச் சொல்ல முடியும். அதற்கேற்றவாறு இக்கதையின் மையப்பாத்திரங்களான யோஹனன், தீனாநாத் மற்றும் இதர பாத்திரங்களை அவர் வடிவமைத்திருக்கிறார்.

இவர்களது குணாதிசயங்களில் உள்ள நல்லது, கெட்டதுகளில் குறிப்பிட்ட சதவிகிதத்தைக் குறைத்தும் அதிகப்படுத்தியும் இதர போலீஸ் பாத்திரங்களை, வடிவமைத்திருக்கிறார். அதுவே, காவல் துறை மீது அவர் முன்வைக்கிற விமர்சனமாகவும் இப்படத்தில் அமைந்திருக்கிறது. Ronth Malayalam Movie Review

’ஈவ் டீசிங் பண்றவங்களை பார்த்து உரக்கக் கத்தாம உபதேசம் பண்ணிட்டு இருக்க’ என்று சொல்கிற யோஹனன், அடுத்த காட்சியில் புகார் தெரிவித்தவரின் வீட்டுக்குள் நுழையவிடாமல் குறுக்கிடும் நபரை தீனாநாத் தாக்க முற்படுகையில் தடுத்து நிறுத்துவார். ‘உன் ஆத்திரத்தால உன்னோட வேலையையும் என் வேலையையும் ஒரே நேரத்துல காலி பண்ணிராத’ என்று சொல்வார்.

அதே யோஹனன், பின்பாதியில் குடும்ப வன்முறையில் மனைவியையும் மகனையும் அடித்து துவைக்கிற ஒரு ஆணை பொழந்து கட்டுவார். அப்போது, அதே தீனாநாத் அவரைத் தடுப்பார். ‘ரெண்டு பேர் வேலையையும் ஒரே நேரத்துல இல்லாம ஆக்கிடாதீங்க’ என்பார்.

இந்த முரணைப் பார்வையாளர்களான நாம் ஏற்றுக்கொள்ள முடிகிற வகையில் கதை சொல்லலை அமைந்திருப்பதுதான் சஹி கபீரின் வெற்றி.

இவர் இயக்கிய ‘இல வீழா பூஞ்சிறா’ மட்டுமல்லாமல், எழுத்தாக்கத்தைக் கையாண்ட ‘ஜோசப்’, ‘நாயாட்டு’, ‘ஆபிசர் ஆன் ட்யூட்டி’ ஆகியனவும் ‘போலீஸ் ஸ்டோரி’ வகையறாதான். இவர் ஒரு காலத்தில் காவல்துறையில் பணியாற்றியவர் என்பதும் இதற்கான காரணமாக இருக்கலாம்.

அதனாலேயே, இவர் கதைகளில் இருக்கிற டீட்டெய்லிங், போலீஸ் பாத்திரங்களின் குணாதிசயங்கள், கிளைமேக்ஸில் நிகழ்கிற திருப்பங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. உண்மைக்கு நெருக்கமாக இருப்பதாக எண்ண வைக்கின்றன.

மெல்லச் சூடேறும் மணற்பரப்பில் நடக்கிற அனுபவத்தைத் தருகிற ‘ரோந்த்’ திரைப்படம் சிலருக்குச் சங்கடத்தைத் தரலாம். மெதுவாக நகர்ந்து எரிச்சலூட்டலாம். இப்படத்தின் குறைகளில் சிலவாக அவற்றைக் கருத வேண்டியிருக்கிறது.

பெரும்பாலும் இரவில் கதை நிகழ்வதாகக் காட்டியிருக்கிறார் இயக்குனர். ஆனால், அக்காட்சிகளை நேரில் பார்த்த உணர்வு நமக்குள் மேலிடுகிறது.

ஒளிப்பதிவாளர் மனீஷ் மாதவன், தயாரிப்பு வடிவமைப்பாளர் திலீப் நாத், படத்தொகுப்பாளர் பிரவீன் மங்கலத், பின்னணி இசை தந்திருக்கும் அனில் ஜான்சன் மற்றும் ஒலிப்பதிவு, டிஐ, விஎஃப்எக்ஸ் கலைஞர்கள் என்று பலரது பங்களிப்பு அதனைச் சாத்தியப்படுத்தியிருக்கிறது.

நாயகர்களாக வரும் திலேஷ் போத்தன், ரோஷன் மேத்யூ தாண்டி திலேஷின் மனைவியாக வருபவர், ரோஷனின் மனைவியாக நடித்துள்ள க்ரிஷா குரூப், துணைக் கண்காணிப்பாளராக வரும் அருண் செருகாவில் எனப் பலரது நடிப்பு இதில் வியக்க வைக்கிறது.

மனநலம் பாதிக்கப்பட்ட மனிதர், வீட்டைத் துறந்து வந்த காதலர்கள், இதர போலீஸ் பாத்திரங்கள் மற்றும் கௌரவ தோற்றத்தில் தலைகாட்டியிருக்கும் ராஜேஷ் மாதவன், சுதி கோப்பா எனப் பலர் இதில் அடக்கம்.

படம் முழுக்க வாக்கி டாக்கி ஒலித்துக்கொண்டே இருக்கிறது. ‘என் வொய்ப் வச்ச மீன் குழம்பை டேஸ்ட் பாருடா’ என்கிற சப் இன்ஸ்பெக்டர், சில நொடிகளில் வாக்கிடாக்கியில் அழைப்பு வந்தவுடன் ஜீப்பில் ஏறியவாறே கைகழுவி விட்டுச் செல்வார்.

கணவர் வீடியோ காலில் வந்தவுடன், சக போலீசாரை வெளியே நிற்குமாறு கேட்பார் ஒரு பெண் போலீஸ்.

தற்கொலைக்கு முயற்சிக்கும் பெண்ணைக் காப்பாற்றச் செல்லும் நாயகர்களில் ஒருவர், அதனைச் செய்ய இயலாமல் போகிறபோது ஸ்தம்பித்துப் போவார். இன்னொருவரோ, வெகு இயல்பாக அப்பெண்ணின் குடும்பத்தினரை ஒரு காரில் ஏற்றி உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைப்பார். ‘வாடா ஒரு பெக் அடிச்சா எல்லாம் சரியாயிரும்’ என்று தனது பதவிக்கான அந்தஸ்தில் இருந்து இறங்கி வருவார்.

இருவரோடும் அமர்ந்து மது அருந்திய இன்னொரு போலீஸ்காரர், பின்னர் இருவர் மீதும் மது போதையில் இருந்ததாகப் புகார் தெரிவிப்பார்.

இப்படி ‘ரோந்த்’ முழுக்க வியாபித்திருக்கும் போலீசாரின் விதவிதமான பிம்பங்கள், காவல் துறை குறித்த நிறை, குறைகளை நம்முள் அடிக்கோடிடுகின்றன. அத்துறை சார்ந்த செய்திகளை உற்றுக் கவனிக்க வைக்கின்றன. அதுவே இப்படத்தின் வெற்றி.

கிளைமேக்ஸ் காட்சியில், ‘உனக்கு எதிரா சாட்சியம் வந்தாச்சு தெரியுமா’ என்கிற மேலதிகாரியிடம், ‘உண்மை என்னன்னு எனக்கும் தெரியும். உங்களுக்கும் தெரியும்’ என்று சொல்லும் திலேஷ் பாத்திரம். உண்மையில் அந்த பாத்திரம் நியாயவானா, இல்லையா என்பதை ரசிகர்கள் உணர்கிற இடம் அது. படத்தில் ‘ஹீரோயிசம்’ வெளிப்படுகிற இடமும் அதுவே. .

இத்தனையும் சொன்னபிறகும் இந்த படத்தை ஒருவரால் கண்டு ரசிக்க முடியும். கிளைமேக்ஸ் பார்த்து முடித்ததும், திரையில் நேரடியாகச் சொல்லப்படாத தகவல்களை மனம் பகுத்துணர இன்னொரு முறை காண்கிற உத்வேகத்தைப் பெற முடியும். அதற்கான உள்ளடக்கத்தை வடிவமைப்பதும் காட்சியாக்கம் செய்வதும் அசாதாரணமானமானது.

அந்த வகையில் இந்த ஆண்டின் குறிப்பிடத்தக்க படங்களில் ஒன்றாகியிருக்கிறது ‘ரோந்து’. குறிப்பிடத்தக்க திரையாளுமையாக ஆகியிருக்கிறார் இதனை எழுதி இயக்கியிருக்கும் சஹி கபீர்..!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share