இந்தியப் பெருங்கடலில் நிலவி வரும் யுத்த பதற்றங்களுக்கு மத்தியில், தொழில்நுட்பக் கோளாறுகளுடன் தத்தளித்த ஈரானிய போர்க்கப்பலான ‘ஐரிஸ் லாவன்’ (IRIS Lavan), இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சி துறைமுகத்தில் தஞ்சம் புக மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
ஈரானிய கடற்படையின் முக்கியமான போர்க்கப்பல்களில் ஒன்றான ஐரிஸ் லாவன், இந்தியப் பெருங்கடலில் சர்வதேச கடற்படை அணிவகுப்பில் பங்கேற்க இந்தியா வந்திருந்தது. எனினும், பிப்ரவரி 28 அன்று கப்பலில் திடீரென தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, கொச்சி துறைமுகத்தில் தஞ்சம் கோரி ஈரான் அவசரக் கோரிக்கை விடுத்தது. இந்தியாவின் கடலோரக் காவல் படை மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் இணைந்து, மார்ச் 1 அன்று இந்தக் கோரிக்கைக்கு அனுமதி வழங்கியது.
மார்ச் 4 ஆம் தேதி ஐரிஸ் லாவன் கப்பல் கொச்சி துறைமுகத்தை வந்தடைந்தது. கப்பலில் இருந்த 183 மாலுமிகளும் தற்போது கொச்சியில் தங்கவைக்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மற்றொரு ஈரானிய போர்க்கப்பலான ‘ஐரிஸ் தேனா’ (IRIS Dena), இந்தியப் பெருங்கடலில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் மூழ்கடிக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஐரிஸ் தேனா கப்பல் இந்தியக் கடற்படைப் பயிற்சியில் பங்கேற்றுவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தபோது அமெரிக்காவால் தாக்கி அழிக்கப்பட்டது. இதில் 80-க்கும் மேற்பட்ட ஈரான் போர் வீரர்கள் உயிரிழந்தனர்.
இதேபோல ‘ஐரிஸ் பூஷெர்’ (IRIS Bushehr) என்ற மற்றொரு ஈரானிய கப்பல், இயந்திரக் கோளாறு காரணமாக இலங்கையிடம் உதவி கோரியது. இலங்கை அரசு ஈரான் போர்க் கப்பலை மீட்டு அதில் இருந்த 208 பேரையும் மீட்டு திருகோணமலை துறைமுகத்தில் தங்க வைத்தது குறிப்பிடத்தக்கது.
