ஆர்.என்.ரவி மாற்றம் வருத்தமான விஷயம்.. மம்தாவுக்கு கவலை வேண்டாம் – ஜோதிமணி எம்.பி

Published On:

| By Pandeeswari Gurusamy

jothimani

மாநில கட்சியை பாஜக கபளீகரம் செய்துதான் ஆட்சிக்கு வருகிறார்கள். அந்த வகையில் அதிமுக என்ற கட்சி தமிழகத்தில் சந்திக்கும் கடைசி தேர்தலாக இது இருக்கும் என காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

கரூரில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்ற “கனவு மெய்ப்படும்” அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, “தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர்.என். ரவி மாற்றப்பட்டிருப்பது எங்கள் கூட்டணிக்கு வருத்தமான விஷயம். அவர் எங்களுக்கு ஒரு நட்சத்திர பேச்சாளராக இருந்தார். அவரது தொடர்ச்சியான தமிழ்நாடு விரோத, தமிழர் விரோத போக்கு தமிழ்நாடு மக்களால் விரும்பப்படாத ஒன்று. தமிழ்நாட்டு மக்களின் சாதனைகளுக்கு தொடர்ந்து எதிராகப் பேசுவது, தமிழ்நாட்டை மோசமான மாநிலமாக சித்தரிப்பது, திருவள்ளுவருக்கு காவி பூசுவது, ஆளுநர் மாளிகையை அதிகாரப்பூர்வமற்ற பாஜக தலைமை அலுவலகமாக செயல்பட வைப்பது போன்ற செயல்பாடுகள் அவரது பெயரை வரலாற்றில் பதிவு செய்யும்.

ADVERTISEMENT

மம்தா பானர்ஜி என்னை கேட்காமல் ஆளுநர் ரவியை தேர்ந்தெடுத்துவிட்டனர் என்று வருத்தம் தெரிவித்துள்ளார். அதில் வருத்தப்பட ஒன்றும் இல்லை. அவர் மகிழ்ச்சியாக இருக்கலாம். தமிழ்நாட்டு ஆளுநராக எங்களுக்கு நட்சத்திர பேச்சாளராக இருந்ததைப் போல, மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸுக்கும் நட்சத்திர பேச்சாளராக உறுதுணையாக இருப்பார்.பாஜக தமிழகத்தில் ஜெயிக்க மாட்டோம் என்ற நிலைப்பாட்டுக்கு வந்துவிட்டது என்பதை இது காட்டுகிறது.

எங்களைப் பொறுத்தவரை கூட்டணி மகத்தான வெற்றி பெறும். பாஜகவும் அதிமுகவும் மிக நிச்சயமாக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்படும்.

ADVERTISEMENT

பீகாரில் நேற்று பாஜக கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளம் தலைவரும் முதலமைச்சருமான நிதீஷ் குமார் பதவி விலகியுள்ளார். அந்த மாநில கட்சியை பாஜக கபளீகரம் செய்துதான் ஆட்சிக்கு வருகிறார்கள். இதுபோல் பல மாநிலங்களில் பாஜக தனது கூட்டணி கட்சிகளை கபளீகரம் செய்துதான் ஆட்சிக்கு வருகிறது.

தமிழகத்தில் அடுத்து அதிமுகவின் முறை. அவர்கள் தேர்தலில் மூன்றாவது இடத்திற்கு செல்வது மட்டுமல்ல, அதிமுக என்ற கட்சி தமிழகத்தில் சந்திக்கும் கடைசி தேர்தலாக இது இருக்கும் என்பதை வருத்தத்துடன் சொல்கிறேன்.” என்றார்.

ADVERTISEMENT

இதைத்தொடர்ந்து விஜய் குறித்த கேள்விக்கு, இளைஞர்களின் ஆதரவு அவருக்கு அதிகம் இருப்பதை பார்க்க முடிகிறது. நிச்சயமாக விஜய் இரண்டாவது இடத்திற்கு வரக்கூடிய வாய்ப்பு உள்ளது என நினைக்கிறேன். பாஜக இருக்கும் கூட்டணிக்கு ஒருபோதும் தமிழக மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்.

திமுக காங்கிரஸ் கூட்டணி குறித்த கேள்விக்கு, ” இந்த முறை திமுகவும் போட்டியிடும் இடங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கூட்டணி என்று வரும்போது எங்களுக்கு நிறைய கருத்துக்கள் உள்ளன. நியாயமான கோரிக்கைகள் உள்ளன. அதிகார பகிர்வு என்பது காங்கிரஸ் கட்சி மட்டுமல்ல, வேறு சில கட்சிகளும் முன்னிறுத்தக்கூடிய சூழல் உள்ளது. கூட்டணி தமிழ்நாடு எதிர்காலம், தமிழ்நாட்டின் வளர்ச்சி, பாரதிய ஜனதா கட்சி போன்ற மோசமான அரசாங்கத்தை நடத்துபவர்களிடமிருந்து தமிழகத்தை காக்க வேண்டிய சூழலில் எல்லா கட்சிகளும் தியாகம் செய்ய வேண்டும். அதில் காங்கிரஸ் கட்சியும் சில தியாகங்களை செய்ய வேண்டியுள்ளது. அதைத்தான் நாங்கள் செய்துள்ளோம் என்று நினைக்கிறேன்.” இவ்வாறு ஜோதிமணி தெரிவித்தார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share