வாக்கு திருட்டு விவகாரம்.. ஒவ்வொரு இந்தியருக்கும் தார்மீக நெருக்கடி- கமல்ஹாசன்

Published On:

| By easwari minnambalam

Rise up India Kamal Haasan MPs letter

வாக்களிப்பின் உண்மைத்தன்மை கேள்விக்குறியாகும்போது, அது வெறும் ஒரு சிறிய அரசியல் சச்சரவு அல்ல, சுதந்திரம், கண்ணியம் மற்றும் நீதியின்பால் நம்பிக்கை கொண்ட ஒவ்வொரு இந்தியருக்குமான தார்மீக நெருக்கடி என மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் மாநிலங்களவை எம்பியுமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியலில் மோசடிகள் நடந்துள்ளதாக குற்றம்சாட்டியதில் இருந்து இந்திய அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. டெல்லியில் நேற்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்திலிருந்து தேர்தல் ஆணையம் நோக்கிச் சென்றனர். அவர்களை தடுத்து நிறுத்தி காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்தியா கூட்டணியின் எம்.பிக்கள் கைதுக்கு கமல் ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் தனது எக்ஸ் தளத்தில் கடிதம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

ADVERTISEMENT

அதில் ” நமது வாக்காளர் பட்டியல் மீது கடுமையான கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. யார் வேண்டுமானாலும் சரிபார்க்கும் வடிவத்தில் வாக்காளர் பட்டியலை வெளியிட ஏன் மறுக்க வேண்டும்? எதிர்க்கட்சித் தலைவர் எடுத்துக் காட்டும் தரவுகள் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் பதிவுகளிலிருந்துதான் எடுக்கப்பட்டுள்ளன எனும்போது, அவரிடமிருந்து எழுத்துப்பூர்வ உறுதிமொழியை ஆணையம் ஏன் கேட்கிறது? மகாராஷ்டிராவிலும் கர்நாடகாவிலும் சந்தேகத்திற்கிடமான சேர்க்கைகள் அம்பலப்படுத்தப்படும்போது, பீகாரில் இப்போது சிறப்புத் தீவிரத் திருத்தம் என்னும் பெயரில் (ஸ்பெஷல் இன்டென்ஸிவ் ரிவிஷன்) பெருமளவிலான நீக்கல்கள் ஏன் செய்யப்படுகின்றன?

என்னுடைய சகோதர் ராகுல்காந்தியும், இந்தியா கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும்”நமது ஜனநாயகம் என்பது லட்சக்கணக்கான இந்தியர்களின் இரத்தத்தாலும் உழைப்பாலும் முத்திரையிடப்பட்ட ஒரு உடன்படிக்கை. போர்கள். கொடும்பஞ்சங்கள். கலவரங்கள், இயற்கைப் பேரழிவுகள் என அபாயம் எவ்வடிவில் நேர்ந்தாலும், நமது வாக்களிக்கும் உரிமையும் அதன் உண்மைத்தன்மையும் அப்படியே நீடிக்கிறது. வாக்களிப்பின் உண்மைத்தன்மை கேள்விக்குறியாகும்போது, அது வெறும் ஒரு சிறிய அரசியல் சச்சரவு அல்ல, சுதந்திரம், கண்ணியம் மற்றும் நீதியின்பால் நம்பிக்கை கொண்ட ஒவ்வொரு இந்தியருக்கும் இஃதொரு தார்மீக நெருக்கடி.

தற்போதைய இந்தியத் தேர்தல் ஆணையம். இதற்கு முன்னால் இதே பதவிகளை வகித்த சிறந்த அதிகாரிகளை நினைவில்கொண்டு, பாரபட்சமற்ற, அச்சமற்ற, அரசியலுக்கு அப்பாற்பட்ட டி.என்.சேஷன் போன்ற தேசப்பற்றுள்ள அதிகாரிகள் முன்னுதாரணமாக வைத்திருந்த தரத்திற்கு உயரவேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன். வாக்குச் செலுத்திய வாக்காளர் பட்டியல்களை இயந்திரத்தால் வாசிக்க முடிகிற வடிவத்தில் வெளியிடுங்கள். அந்தப் பட்டியல்கள் தன்னிச்சையாக ஆய்வு செய்ய அனுமதிக்கப்பட வேண்டும். அதிகாரத்தின் வார்த்தைகளால் சொல்வதை விட. மக்களே உண்மையை நேரடியாகப் பார்க்கட்டும்.

இது ஏதோ ஓர் அரசியல் கட்சியின் பிரச்னை அல்ல. ஒட்டுமொத்த இந்தியாவின் பிரச்னை. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (பா.ஜ.க கூட்டணியில்) உள்ள சகோதரர்கள் உள்பட அனைத்து அரசியல் கட்சிகளையும், வெளிப்படைத்தன்மைக்காக ஒன்றுபடுமாறு நான் அழைக்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

அதில் “நமது ஜனநாயகத்தின் ரூபிகான் (rubicon) கோட்டை யாரும் தாண்ட நாம் அனுமதிக்க மாட்டோம். அது திருத்தவே முடியாத சீரழிவுகளுக்கு இட்டுச் சென்றுவிடும். இந்தியாவே எழுக. சரியான பதில் வேண்டும் என்கிற கோரிக்கையை எழுப்புக அரசியலுக்காக அல்ல, நம் நாட்டின் எதிர்காலத்துக்காக” என்றும் கமல்ஹாசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share