கரூர் துயர சம்பவம் தொடர்பாக நீதிபதியை விமர்சித்த ஓய்வு பெற்ற காவல் அதிகாரிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் தமிழக வெற்றி கழகத்துக்கு சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் நீதிபதி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து தெரிவித்ததாக ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வரதராஜன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அரசியல் உள்நோக்கத்துடன் தனக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக வரதராஜன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முறையீடு செய்தார்.
தொடர்ந்து கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட அவர் ஜாமீன் வழங்க கேட்டு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, கருத்து சுதந்திரம் என்ற பெயரில் நீதித்துறை, தலைவர்கள் மீது அவதூறாக கருத்துக்களை பதிவிடும் போக்கு அதிகரித்துள்ளது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
காவல்துறை சார்பில் கடும் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டதால் வரதராஜனுக்கு ஜாமீன் வழங்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.
இதற்கிடையே கரூர் கூட்ட நெரிசலின் போது ஆம்புலன்ஸுக்கு இடையூறு ஏற்படுத்தி தாக்குதலில் ஈடுபட்ட வழக்கில் தமிழக வெற்றிக்கழக சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் வெங்கடேசன் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.
அவரது ஜாமீன் மனு கரூர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதனை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அவர் திருச்சி சிறையில் இருந்து இன்று விடுவிக்கப்பட்டார்.
அதேபோன்று கரூர் சம்பவம் தொடர்பாக முதல்வரை மிரட்டும் வகையில் சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்டிருந்த நெல்லையைச் சேர்ந்த செல்வின் அந்தோணி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இவர் முன் ஜாமீன் கேட்ட மனு நீதிபதி ஸ்ரீமதி முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி மனுதாரரை வருகிற 22 ஆம் தேதி வரை கைது செய்யக்கூடாது. இந்த மனு தொடர்பாக மானூர் போலீசார் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 22 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
