மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்திய கூட்டணி நக்சலைட்டுகளின் தீவிர ஆதரவாளரான சுதர்சன் ரெட்டியை குடியரசு துணை தலைவருக்கான வேட்பாளராக நிறுத்தி உள்ளதாக கூறினார்.
அமித்ஷாவின் இந்த பேச்சு கடும் கண்டனத்திற்கு உள்ளான நிலையில் ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதிகள் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
குடியரசு துணை தலைவர் ஜெகதீர்ப் தன்கர் தனது பதவியை ஜூலை 21 ராஜினாமா செய்தார்.
இதைத்தொடர்ந்து வரும் செப்டம்பர் 9ம் தேதி குடியரசு துணை தலைவருக்கான தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழகத்தை சேர்ந்த ஆர்எஸ்எஸ் பின்னணி கொண்ட சி.பி.ராதாகிருஷ்ணனும் இந்தியா கூட்டணி சார்பில் முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டியும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் கேரளாவில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அமித்ஷா இந்தியா கூட்டணி நக்சலைட்டுகளின் தீவிர ஆதரவாளரான சுதர்சன் ரெட்டியை குடியரசு துணை தலைவர் வேட்பாளராக தேர்ந்தெடுத்துள்ளது.
சத்தீஸ்கரில் நக்சலைட்களுக்கு எதிராக போராட பழங்குடி இளைஞர்களை கொண்டு அரசாங்கம் உருவாக்கிய ‘சால்வா ஜூடும்’ சட்டவிரோதம் மற்றும் அரசியலமைப்பிற்கு விரோதமானது என நீதிபதி சுதர்சன் ரெட்டி கடந்த 2011ல் வழக்கிய தீர்ப்பை விமர்சித்தார். அவர் நக்சல் சித்தாந்தத்தால் உந்தப்பட்டு இந்த தீர்ப்பை வழங்கினார். அந்த தீர்ப்பு மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் நக்சலைட் இயக்கம் கடந்த 2020ல் முடிவுக்கு வந்திருக்கும். தற்போது இடதுசாரிகளின் அழுத்தத்தின் பேரில்தான் காங்கிரஸ் கட்சி சுதர்சன் ரெட்டியை வேட்பாளராக தேர்ந்தெடுத்துள்ளதாக கடுமையாக விமர்சித்தார்.
அமித்ஷாவின் இந்த பேச்சிற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பல தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அமித்ஷாவின் பேச்சிற்கு முன்னாள் நிதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழு, சட்ட வல்லுநர்களுடன் சேர்ந்து, அமித்ஷாவின் கருத்துகளுக்கு எதிராக கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அந்த அறிக்கையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சல்வா ஜூடும் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை பகிரங்கமாக தவறாக விளக்கியது துரதிர்ஷ்டவசமானது. நீதிமன்றத்தின் தீர்ப்பு எந்த இடத்திலும் நக்சலிசம் அல்லது அதன் கருத்தியலை வெளிப்படையாகவோ அல்லது உரையின் கட்டாய உள்ளார்ந்த குறிப்பு மூலமோ ஆதரிக்கவில்லை. இந்திய துணை ஜனாதிபதி பதவிக்கான பிரச்சாரம் கருத்தியல் ரீதியாக இருக்கலாம் என்றாலும், அது நாகரிகமாகவும், கண்ணியத்துடனும் நடத்தப்பட வேண்டும்.
வேட்பாளர்களின் கருத்தியலை விமர்சிப்பது தவிர்க்கப்பட வேண்டும். உயர்ந்த அரசியல் பதவியில் இருப்பவர் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை தவறாக விளக்குவது, நீதிபதிகளின் மனதில் பயத்தை ஏற்படுத்தி, நீதித்துறையின் சுதந்திரத்தை பாதிக்கும்” என குறிப்பிட்டுள்ளனர்.
அந்த அறிக்கையில் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குரியன் ஜோசப், மதன் பி லோகூர், ஜே செல்லமேஸ்வர், ஏ.கே.பட்நாயக், அபய் ஓகா, விக்ரம்ஜித் சென் மற்றும் கோபால கவுடா ஆகியோருடன் முன்னாள் தலைமை நீதிபதிகள் மற்றும் எஸ்.முரளிதர், கோவிந்த் மாத்தூர், சஞ்சிப் பானர்ஜி மற்றும் அஞ்சனா பிரகாஷ் போன்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்.