அதிமுகவில் மீண்டும் இணைந்த வெல்லமண்டி நடராஜனுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அமைப்புச் செயலாளர் பதவி வழங்கி உள்ளார்.
அதிமுகவில் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கட்சியில் குழப்ப நிலை ஏற்பட்டது. இதையடுத்து, ஓ.பன்னீர்செல்வம் தரப்பைச் சேர்ந்த பல ஆதரவாளர்களை எடப்பாடி பழனிசாமி தரப்பு கட்சியில் இருந்து நீக்கியது. அந்த வரிசையில், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி என். நடராஜனும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
இதன் பின்னர், வெல்லமண்டி நடராஜன் ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்பட்டு வந்தார். 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தனது அரசியல் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தாததால், அவருடைய பல ஆதரவாளர்கள் பிரிந்து திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் இணைந்தனர்.
இந்நிலையில், திடீர் திருப்பமாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பிப்ரவரி 27-ஆம் தேதி தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இதைத் தொடர்ந்து, அவரது ஆதரவாளரான வெல்லமண்டி என். நடராஜன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கட்சியில் அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.
கடந்த 1972-ஆம் ஆண்டு முதல் அதிமுகவில் செயல்பட்டு வரும் வெல்லமண்டி நடராஜன், மாவட்டச் செயலாளராக ஐந்து முறைவும், அவைத் தலைவராக 16 ஆண்டுகளும் பதவி வகித்தவர். அவருக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அமைப்புச் செயலாளர் பதவியை வழங்கியுள்ளார்.
