இந்தியப் பட்டய கணக்காளர் கழகத்தின் தேர்வுகள் பொங்கல் பண்டிகை நாட்களில் நடத்தப்படுவதால் அவற்றை ஒத்தி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இது தொடர்பாக சு.வெங்கடேசன் எம்.பி. தமது எக்ஸ் பக்கத்தில், அகில இந்தியத் தேர்வுகளுக்கு தேதிகள் நிர்ணயிக்கும் அமைப்புகள் ஏன் எப்போதுமே தமிழ்நாட்டின் உணர்வுகளை கணக்கில் கொள்வதில்லை என்ற கேள்வி எழுகிறது. பொங்கல், திருவள்ளுவர் தினம், உழவர் திருநாள் (15, 16, 17 ஜனவரி 2026) நாட்களில் இந்தியப் பட்டய கணக்காளர் கழகம் இடையீட்டு, இறுதித் தேர்வுகளை அறிவித்துள்ளது. இது தேர்வர்களுக்கு கடும் சிரமங்களை உருவாக்குமென என்னிடம் முறையீடுகள் வந்தன. தமிழ் மக்களின் பண்பாட்டு திருவிழாவாக, விவசாயப் பெருங்குடி மக்களின் உணர்ச்சிமிக்க பெரு விழாவாக திகழும் பொங்கல் திருநாள் நாட்களில் அறிவிக்கப்பட்ட தேர்வுகளை மாற்றி அட்டவணையை அறிவிக்குமாறு கேட்டு இந்தியப் பட்டய கணக்காளர் கழக தலைவர் சரண் ஜோத் சிங் நந்தாவுக்கு கடிதம் எழுதியுள்ளேன் என தெரிவித்துள்ளார்.
