தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும் பாஜகவின் சதித் திட்டத்துக்காகவே 1 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம் சாட்டி உள்ளார்.
இது தொடர்பாக திருமாவளவன் கூறியுள்ளதாவது: தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டிருக்கும் வரைவு வாக்காளர் பட்டியலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஏற்கனவே எச்சரித்தது போல சுமார் ஒரு கோடி வாக்குகள் நீக்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மோடி அரசின் கைப்பாவை ஆகிவிட்டத் தேர்தல் ஆணையம் செயல்படுத்தும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் ( எஸ்.ஐ.ஆர்) என்பதே வாக்குரிமையைப் பறிப்பதற்கான சதிதான் என்று தொடர்ந்து எச்சரித்து வந்தோம். அது இப்போது உண்மையாகி உள்ளது.
வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டு வாக்குரிமைப் பறிக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை எஸ்.ஐ.ஆர் நடத்தப்படும் 12 மாநிலங்களில் தமிழ்நாட்டில்தான் அதிகம். இதிலிருந்தே சனாதனவாதிகள் தமிழ்நாட்டைக் குறிவைத்து களம் இறங்கியிருப்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.
தமிழ்நாட்டில் நீக்கம் செய்யப்பட்டுள்ள 97.37 இலட்சம் வாக்காளர்களில் இதில் இறந்து போனவர்கள், இரு முறை பதிவானவர்கள் என்பதைத் தவிர்த்து 66 லட்சம் பேர் அவரவர் முகவரியில் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ானால், அவர்கள் தகுதியுள்ள வாக்காளர்களேஆவர். அவர்களுடைய வாக்குகளைப் பட்டியலிலிருந்து நீக்கம் செய்வது சட்டத்துக்குப் புறம்பானதாகும். எனவே, இடமாற்றம் செய்யப்பட்டு குறிப்பிட்டமுகவரியில் இல்லையென நீக்கம் செய்யப்பட்டுள்ள 66 இலட்சம் வாக்காளர்களையும் மீண்டும் பட்டியலில் இணைக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை வலியுறுத்துகிறோம்.
மோடி அரசாங்கம் 2021 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் ஒரு திருத்தத்தைக் கொண்டு வந்தது. அதன்படி, வாக்காளர் அடையாள அட்டைகள் அனைத்தும் ஆதார் அட்டைகளுடன் இணைக்கப்பட்டன. அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டையை இணைப்பது கட்டாயம் அல்ல என்று அந்நீதிமன்றம் தெரிவித்தது. ஆனால் அந்தத் தீர்ப்பு வருவதற்கு முன்பாகவே ஒட்டுமொத்த வாக்காளர்களுடைய அடையாள அட்டைகளும் ஆதார் அட்டைகளுடன் இணைக்கப்பட்டு விட்டன. எனவே, இப்போது முகவரி மாறிச் சென்றிருக்கிறவர்கள் என்று நீக்கம் செய்யப்பட்டுள்ள 66 இலட்சம் பேர்களின் வாக்காளர் அட்டைகளும் ஆதார் அட்டைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. அவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டிருப்பதால் அவர்களது ஆதார் அட்டைகளும் ரத்தாகும் ஆபத்து உள்ளது. இது வாக்குரிமையோடு சேர்த்துக் குடியுரிமையையும் ரத்து செய்வதாகும். இதைப்பற்றித் தேர்தல் ஆணையம் விளக்கமளிக்க வேண்டும்.
இறந்து போனவர்களெனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளவர்களில், பலர் உயிரோடிருப்பதாகத் தகவல்கள் வெளியாகிவருகின்றன. அதுபோலவே ஒரு வாக்குச் சாவடியில் பதிவு செய்திருப்பவர்களைத் தேர்தல் அதிகாரிகள் நீக்கியிருப்பதும் தெரியவந்துள்ளது. மாஞ்சோலையில் பதிவு செய்திருந்த 1857 வாக்குகள் புலம்பெயர்ந்து சென்றுவிட்டார்கள் என்ற தவறான காரணம் கூறி அதிகாரிகளால் நீக்கப்பட்டுள்ளன. அவர்கள் அனைவரும் எஸ்சி வகுப்பைச் சேர்ந்தவர்களாவர்.
தகுதிவாய்ந்த வாக்காளர்களை நீக்குவது, பாஜகவுக்கு சாதகமாகப் போலி வாக்காளர்களை சேர்ப்பது என்ற தந்திரத்தின் மூலம்தான் பீகாரில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. அதே தந்திரத்தைப் பயன்படுத்தித் தமிழ்நாட்டிலும் ஆட்சியைப் பிடிக்கலாமென பாஜக நினைத்துக்கொண்டுள்ளது. இந்த சதித் திட்டத்தை முறியடிப்பதற்கு அனைத்துக் கட்சிகளும் இன்னபிற சனநாயக சக்திகளும் முன்வரவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர்., எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில், வீடுதோறும் கணக்கெடுப்பு முடிக்கப்பட்டு, நேற்று டிசம்பர் 19ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில், தமிழகத்தில் 97.38 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி கடந்த அக்., 27ல் துவங்கியது. முதல் கட்டமாக, வீடு வீடாக எஸ்.ஐ.ஆர்., படிவங்கள் வழங்கப்பட்டு, வாக்காளர்கள் கணக்கெடுக்கப்பட்டனர்.
எஸ்.ஐ.ஆர்., கணக்கெடுப்புக்கு பின், தயாரிக்கப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
கடந்த அக்டோபர், 27ம் தேதியின்படி, மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை, 6 கோடியே 41 லட்சத்து 14,587.
தற்போது வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில், 5 கோடியே 43 லட்சத்து 76,755 வாக்காளர்கள் உள்ளனர்.
வாக்காளர் கணக்கெடுப்பு பணியின்போது, வாக்குச்சாவடி அலுவலர்கள் குறைந்தபட்சம் மூன்று முறை, வீடுதோறும் சென்று விசாரணை மேற்கொண்டனர் என்றும் அதன் அடிப்படையில், இடம் பெயர்ந்தவர்கள், இறந்தவர்கள் மற்றும் இரட்டை பதிவு உள்ளவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு உள்ளனர் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
இறந்தவர்கள் 26 லட்சத்து 94,672; இடம் பெயர்ந்தவர்கள், முகவரியில் இல்லாதவர்கள் 66 லட்சத்து 44,881; ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பெயர் இருந்தவர்கள் 3 லட்சத்து 39,278 பேர் என, மொத்தம் 97 லட்சத்து 37,831 பேர், பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பீகார் மாநிலத்தில் நடந்தது போலவே தமிழ்நாட்டிலும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிகளில் குளறுபடிகள் ஏற்படும் என்று முன்பே நாம் எச்சரிக்கை செய்துததுதான் நடந்திருக்கிறது.
இதனை எதிர்பார்த்துதான் உச்ச நீதிமன்றத்தில் திமுக மற்றும் மறுமலர்ச்சி திமுக சார்பிலும் எஸ் ஐ ஆர் பணிகளுக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டது.
தமிழ்நாட்டின் வாக்காளர்களில் இடம்பெயர்ந்தவர்கள், முகவரியில் இல்லாதவர்கள் என்று 64 லட்சத்து 44 ஆயிரம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருப்பது ஐயப்பாட்டைஎழுப்புகிறது.
தகுதி உள்ள வாக்காளர்கள் பெயர், பட்டியலில் விடுபட்டு இருந்தால் உடனடியாக படிவம் 6 ஐ பூர்த்தி செய்தும், பெயர் சேர்ப்புக்கு ஆட்சேபனை இருப்பின் படிவம் 7 , முகவரி மாற்றத்திற்கு படிவம் 8 ஆகியவற்றை ஜனவரி 18ஆம் தேதிக்குள் வாக்குச்சாவடி அலுவலரிடம் வழங்க வேண்டும் .
சட்டமன்றத் தேர்தல் களத்தில் தேர்தல் ஆணையத்தையும் எதிர்கொள்ள வேண்டிய நிலை திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு இருக்கிறது. இதனை கருத்தில் கொண்டு ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் நீக்கப்பட்டு இருக்கும் வாக்காளர்கள் குறித்து தீவிரமாக கள ஆய்வு செய்யும் கடமையை மறுமலர்ச்சி திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்கள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் அனைவரும் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன்: இந்தியத் தேர்தல் ஆணையம் கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி அறிவித்த வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கை நிறைவடைந்து, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
முந்தைய வாக்காளர் பட்டியலுடன் ஒப்பிடும் போது, 97 லட்சத்து 28 ஆயிரம் வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்படாமல் நீக்கப்பட்டுள்ளனர். இதில் குறிப்பிட்ட முகவரியில் வசிக்காதவர்கள் என்கிற முறையில் 66 லட்சத்துக்கும் அதிகமானோர் நீக்கப்பட்டுள்ளனர். இது நீக்கப்பட்ட வாக்காளர்களில் 68 சதவீதமாக இருக்கிறது. நீக்கம் செய்யப்பட்டவர்கள் குறிப்பிட்ட முகவரியில் வசிக்காதவர்கள் என்பதை எந்த அடிப்படையில் உறுதி செய்யப்பட்டது என்பதை தேர்தல் ஆணையம் விளக்க வேண்டும்.
நீக்கம் செய்யப்பட்ட வாக்காளர்கள் மீண்டும் பெயரை சேர்க்க வேண்டும் என்று உரிமை கோரி முறையிடும் போது, அதனை ஏற்று, வாக்காளர் பட்டியலில் அவரது பெயரை சேர்க்க ஆணையம் உறுதியளிக்க வேண்டும்.
ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பெயர் இடம்பெற்றிருந்த வகையில் 3.98 லட்சம் பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் குறிப்பிட்ட ஒரு தொகுதியில், குறிப்பிட்ட வாக்கு சாவடியில் மட்டும் அவரது பெயரை சேர்த்து, கூடுதலாக இடம் பெற்றுள்ள பகுதியில் நீக்கம் செய்யாமல், மொத்தமாக நீக்கம் செய்தது ஏன்? என்ற வினா எழுகிறது.
நாடாளுமன்ற ஜனநாயகத்தின் உயிர் நாடி, வாக்காளர்கள் என்பதை கருத்தில் கொண்டு, இறந்தவர்கள் தவிர, உயிருடன் வாழ்ந்து வரும், எவர் ஒருவர் பெயரும் மறுக்கப்படாமல் வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பதில் தேர்தல் ஆணையம் கூடுதல் அக்கறையும், முனைப்பும் காட்ட வேண்டும்.
ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், பாஜக, ஆர்.எஸ்.எஸ் தலைவர்களும் பேசி வரும் செய்தி, சிறப்புத் தீவிர திருத்த முறையில் பெரிய தவறு நடக்குமோ? என்ற ஆழ்ந்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. தலைமைத் தேர்தல் ஆணையர் வெளியிடும் தகவல்களும், தேர்தல் ஆணையம் மீதான சந்தேக நிழலை விலக்க முடியவில்லை.
ஜனநாயகத்தில் இறுதி எஜமானர்கள் வாக்காளர்களும், குடிமக்களும் என்கிற முறையில் எச்சரிக்கையாக இருந்து, சதிகளை முறியடித்து, ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பத்தில் தேர்தல் ஆணையம் வெளிப்படையாக நடந்துகொள்ள வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்: தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி, மாநிலத்தின் மொத்த வாக்காளர்கள் 6 கோடியே 41 லட்சம் பேர்.
ஆனால், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இருந்த எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது, தற்போது சுமார் 97 லட்சத்து 37 ஆயிரம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் போது, தமிழ்நாட்டில் ஏறத்தாழ ஒரு கோடி வாக்காளர்களின் பெயர்களைத் தேர்தல் ஆணையம் நீக்கப்போகிறது’ என்று எச்சரித்தோம்.
உங்களுக்கு ஓட்டு இல்லை என்றால், அங்கே ஜனநாயகம் இருக்காது; ஓட்டுரிமை இல்லாவிட்டால் நம்மை யாரும் மதிக்கமாட்டார்கள்.
