சாதியை காரணம் காட்டி கோயிலுக்குள் நுழைய மறுப்பதா?: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முக்கிய உத்தரவு!

Published On:

| By Kavi

சாதியை காரணம் காட்டி கோயிலுக்குள் நுழைவதை யாரேனும் தடுத்தால் வழக்கு தொடரப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. Refusing to enter a temple on the grounds of caste

 அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தாலுகா, புதுக்குடி கிராமத்தில் அய்யனார் கோயில் உள்ளது. 

இங்கு பட்டியல் இனத்தவர்களால் நிறுவப்பட்ட சிலைகளை ஒரு பிரிவினர் இடித்து தள்ளி விட்டதாகவும், கோயிலில் அமைக்கப்பட்டுள்ள பெரிய இரும்பு கதவுக்கு பின் இருந்துதான் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவதாகவும் கூறி அந்த பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். 

அதில், “ஜூலை 16ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடைபெறும் தேர்திருவிழாவில் பட்டியல் இனத்தவர்கள் பங்கேற்கவும், கோயிலின் உள்ளே செல்ல அனுமதிக்கவும் உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று (ஜூலை 17) விசாரணைக்கு வந்தது. 

அப்போது சட்டத்தின் ஆட்சி நடக்கும் நாட்டில் சாதி ரீதியான பாகுபாட்டை அனுமதிக்க முடியாது. அய்யனார் கோயிலுக்கு பட்டியலின மக்கள் செல்வதை யாரும் தடுக்கவில்லை என்பதை அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உறுதி செய்ய வேண்டும். 

கோயிலில் அனைத்து தரப்பு மக்களும் தரிசனம் செய்வதையும், விழாக்களில் பங்கேற்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கும், உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியருக்கும் உத்தரவிட்டார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ். 

மேலும் அவர், பல்வேறு தலைவர்களின் நீண்ட போராட்டத்துக்குப் பிறகு ஆலய நுழைவுச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தை அமல்படுத்த வேண்டியது அதிகாரிகளின் கடமை. சாதி அடிப்படையில் கோயிலுக்குள் நுழைவதை யாரேனும் தடுத்தால் அவர்களுக்கு எதிராக வழக்கு தொடர வேண்டும் என்று காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்தார். Refusing to enter a temple on the grounds of caste

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share