கோடை துவங்கிவிட்டது. வியர்வையும், கசகசப்பும், களைப்புமாய் இருக்கும் முகம் ஃப்ரெஷ்ஷாக, சோப் பயன்படுத்துவதைவிட ஃபேஸ் வாஷ் பயன்படுத்துவது முகத்துக்கு நல்லது.
சந்தையில் குவிந்துகிடக்கும் ஃபேஸ் வாஷ்களில் அதிக ரசாயனங்கள் மற்றும் வாசனைகள் கலந்திருப்பதைத் தவிர்க்கவும். மிதமான ஃபேஸ் வாஷ்களே சிறந்தவை. எண்ணெய் சருமம், வறண்ட சருமம், நார்மல் சருமம் என ஒவ்வொரு சருமத்துக்கும் பிரத்யேகமான ஃபேஸ் வாஷ்கள் கிடைக்கின்றன. Face Wash for Summer
12 வயதுக்கு மேல் ஃபேஷ் வாஷ் பயன்படுத்தலாம். பருக்கள் நிறைந்த சருமத்துக்கு ஆக்னி ப்ரோன் (Acne prone) ஃபேஸ் வாஷ் சிறந்தது. பருக்கள் கொண்ட முகம் உடையவர்கள், ஸ்கரப் கீரீம்களைப் பயன்படுத்தக் கூடாது. ஒரு நாளைக்கு மூன்று முறை ஃபேஸ் வாஷ் பயன்படுத்தலாம். முகத்தைக் கழுவிய பிறகு, சன் ஸ்கிரீன் அல்லது மாய்ஸ்சரைசர் என அவரவர் சருமத்துக்கு ஏற்ற க்ரீம்களைப் பூசிக்கொண்டு வெயிலில் செல்லலாம்.
வெளியில் சென்றுவிட்டு வருபவர்கள், முதலில் க்ளென்சரால் முகத்தில் உள்ள அழுக்கு, தூசுக்களை நீக்க வேண்டும். க்ளென்சர் அழுக்கு, தூசை நீக்குமே தவிர, முகத்துக்குப் புத்துணர்வு தராது. மேலும், வழவழப்பும் முகத்தில் ஒட்டி இருக்கும் என்பதால், க்ளென்சிங் செய்த பிறகு, ஃபேஸ் வாஷ்கொண்டு முகத்தைக் கழுவி விட வேண்டும்.
குளிர்ந்த அல்லது மிதமான நீரில் முகம் கழுவுவது நல்லது. மிகவும் சூடான நீரில் முகம் கழுவக் கூடாது. அடிக்கடி நீரில் முகத்தைக் கழுவினால், எந்தவிதத் தொற்றுகளும் தூசுகளும் சருமத்தை அண்டாது. முகத்தை அழுத்தமாகத் தேய்க்காமல், மசாஜ் செய்வதுபோல மென்மையாகத் தேய்த்துக் கழுவ வேண்டும். துடைக்கும்போதும், துணியால் முகத்தை ஒற்றி எடுப்பதே நல்லது. Face Wash for Summer