மீண்டும் மீண்டும் சிறுநீரக் கல் வராமல் தடுப்பது எப்படி என மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளதைப் பார்க்கலாம்.
சிறுநீரகக் கல் காரணமாக உலக அளவில் கோடிக்கணக்கான மக்களுக்கு பாதிப்பு அடைந்து வருகிறார்கள். சிறுநீரகக் கல் என்பது ஒரு கடுமையான வலி மிகுந்த நிலைக்கு நம்மை இட்டுச் செல்லும். ஆண்கள், பெண்கள் இருவருக்கும் சிறுநீரக் கல் உருவாகலாம் என்றாலும் ஆண்கள் தான் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். சிறுநீரக் கல் கடுமையான வலியை ஏற்படுத்தி நமது அன்றாட வாழ்க்கையை மோசமாக்குகிறது. மேலும், சிறுநீரக் கல் காரணமாக வலி ஏற்படுவது அதுதான் கடைசி முறை என்றும் நாம் முடிவுக்கு வந்துவிட முடியாது.
ஒருவருக்கு சிறுநீரகத்தில் ஏற்பட்ட கல் வெளியேறிய பிறகு ஐந்து ஆண்டுகளுக்குள் மீண்டும் வருவதற்கான வாய்ப்புகள் 35 முதல் 50 சதவிகிதம் வரை உள்ளன. மீண்டும் மீண்டும் சிறுநீரகக் கல் உருவாவதற்கான காரணமும், அதனை எப்படி தடுப்பது என்பது குறித்தும் விரிவாக பார்க்கலாம்.
சிறுநீரகக் கற்கள் எப்படி உருவாகின்றன?
இரத்த ஓட்டத்தில் சோடியம், பொட்டாசியம், கால்சியம் போன்ற முக்கிய தாதுக்களை சிறுநீரகம் ஒழுங்குபடுத்தும் அதே சமயம், உடலில் இருந்து கழிவுகளை சிறுநீர் வழியாக வடிகட்டுவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. சிறுநீரில் போதிய அளவில் நீர்த்தன்மை இல்லாத நிலையில், தாதுக்கள் மற்றும் உப்பு ஆகியவை படிகமாக மாறும்போது சிறுநீரகக் கற்கள் உருவாகின்றன. சிறுநீரகக் கற்கள் என்பவை கால்சியம் கற்கள் (பரவலாக உள்ளது), ஸ்ட்ரூவைட் கற்கள் (சிறுநீர் பாதை நோய்த்தொற்றுடன் தொடர்புடையவை), யூரிக் அமில கற்கள், சிஸ்டைன் கற்கள் ஆகியவை ஆகும்.
சிறுநீரகக் கல் அறிகுறிகள்
- விலா எலும்புகளுக்குக் கீழே முதுகு அல்லது பக்கவாட்டில் கடுமையான வலி. இது அடிவயிறு அல்லது இடுப்பு வரை பரவ வாய்ப்புள்ளது.
- சிறுநீர் கழிக்கும் போது வலி அல்லது எரிச்சல் உணர்வு.
- இளஞ்சிவப்பு, மேகமூட்டமான அல்லது துர்நாற்றம் வீசும் சிறுநீர்
- சிறுநீர் கழிக்க தொடர்ந்து தூண்டுதல், குமட்டல், வாந்தி (சில சமயங்களில் காய்ச்சல் மற்றும் குளிர்)
இந்த அறிகுறிகளை தொடக்கத்திலேயே கண்டறிவது சிக்கல்களை தடுக்கவும், சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கவும் உதவும்.
மீண்டும் மீண்டும் சிறுநீரகக் கற்கள் வராமல் தடுப்பது எப்படி?
- தினமும் அதிகளவில் தண்ணீர் குடித்துக்கொண்டே இருங்கள். அதிகளவில் சிறுநீரை நீர்த்துப்போகச் செய்து தாது படிவதை குறைக்கிறது.
- கால்சியல் நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள். பால் பொருட்கள் உள்பட கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவது கல் உருவாவதை தடுக்க உதவும்.
- உணவில் உப்பை குறைத்துக்கொள்ள வேண்டும். சோடியத்தை குறைக்கும்போது சிறுநீரகக் கல் உருவாகும் அபாயம் தடுக்கப்படுகிறது.
- இறைச்சிகளை மிதமாக எடுத்துக்கொள்ளவும். ஏனெனில் அதிகப்படியான இறைச்சி, கோழி இறைச்சி மற்றும் கடல் உணவுகள் யூரிக் அமிலத்தின் அளவை அதிகரிக்கும்.
- சில மருந்துகள், மாத்திரைகள் சிறுநீரகக் கல் அபாயத்தை அதிகரிக்கக் கூடும். ஆகவே, மருந்து எழுதும்போது மருத்துவரிடம் சிறுநீரகக் கல் பிரச்னையை கூறினால் வேறு மருந்து தர வாய்ப்புள்ளது
- செரிமான மற்றும் சிறுநீர் பாதை தொடர்புடைய பிரச்னைகளுக்கு சிறுநீரகக் கல் காரணமாக இருக்கலாம். ஆகவே, அடிப்படை பிரச்னைகளை கண்டுபிடியுங்கள்.
- சிறுநீரக கல் வருவதைத் தடுக்க சிறுநீரக நோய் சிகிச்சை நிபுணரிடம் காட்டி ஆலோசனை பெறுவது நல்லது.
