நீண்ட நாட்களாகக் கடன் வட்டி குறையாதா என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த மக்களுக்கு, ஒரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது ரிசர்வ் வங்கி (RBI). நேற்று (வெள்ளிக்கிழமை) ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா (Sanjay Malhotra) தலைமையில் நடைபெற்ற நிதிக் கொள்கைக் கூட்டத்தில், வட்டி விகிதத்தைக் குறைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
என்ன அறிவிப்பு? வ வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கான வட்டி விகிதம் (Repo Rate) 0.25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் ரெப்போ வட்டி விகிதம் 5.50 சதவீதத்தில் இருந்து 5.25 சதவீதமாகக் குறைந்துள்ளது. கடந்த 6 மாதங்களில் முதல்முறையாக வட்டி குறைக்கப்பட்டுள்ளது இதுவே.
இந்த அறிவிப்பால் சாமானிய மக்களுக்கு என்ன லாபம்? என்ன நஷ்டம்? ஒரு மினி அலசல்:
லாபம் (The Plus):
- EMI குறையும்: ரெப்போ வட்டி குறைந்தால், வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கடனுக்கான வட்டியைக் குறைக்க வேண்டும். இதனால், நீங்கள் வாங்கியுள்ள வீட்டுக் கடன் (Home Loan), வாகனக் கடன் மற்றும் தனிநபர் கடனுக்கான வட்டி குறைய வாய்ப்புள்ளது. உங்கள் மாதத் தவணை (EMI) தொகை குறையும் அல்லது கடன் காலம் குறையலாம்.
- புதிய கடன் வாங்குவோர்: புதிதாகக் கடன் வாங்கத் திட்டமிடுபவர்களுக்கு, குறைந்த வட்டி விகிதத்தில் கடன் கிடைக்கும். இது சொந்த வீடு கனவில் இருப்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி.
- தொழில் வளர்ச்சி: வட்டி குறைவதால் சந்தையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். சிறு மற்றும் குறுந்தொழில் செய்வோர் குறைந்த வட்டியில் கடன் பெற்றுத் தொழிலை விரிவுபடுத்த முடியும்.
நஷ்டம் (The Minus):
- சேமிப்புக்கு ஆபத்து: கடன் வட்டி குறைந்தால், மறுபக்கம் டெபாசிட் வட்டியும் குறையும். வங்கியில் ஃபிக்ஸட் டெபாசிட் (FD) போட்டு, அதில் வரும் வட்டிப் பணத்தை நம்பி வாழும் முதியவர்கள் மற்றும் பென்ஷனர்களுக்கு இது வருமான இழப்பை ஏற்படுத்தும்.
- ரூபாய் மதிப்புச் சரிவு: வட்டி விகிதம் குறைக்கப்பட்டதால், ஏற்கனவே 90-ஐ தொட்டுள்ள டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மேலும் சரிய வாய்ப்புள்ளது.
- விலைவாசி பயம்: ரூபாய் மதிப்பு சரிந்தால், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எலக்ட்ரானிக் பொருட்கள், தங்கம் மற்றும் பெட்ரோல் விலை உயரக்கூடும்.
ஏன் இந்த முடிவு? (The ‘Goldilocks’ Factor) இந்தியாவின் பணவீக்கம் (Inflation) வெறும் 2.2% ஆகக் குறைந்துள்ளதும், பொருளாதார வளர்ச்சி (GDP) 8% ஆக உயர்ந்துள்ளதும் தான் இந்த முடிவுக்குக் காரணம். இதைத் தான் பொருளாதார நிபுணர்கள் “கோல்டிலாக்ஸ் பொருளாதாரம்” (Goldilocks Economy) என்கிறார்கள். அதாவது, அதிக சூடும் இல்லாமல், அதிகக் குளிரும் இல்லாமல் சரியான பதத்தில் பொருளாதாரம் இருப்பதாக அர்த்தம்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியப் பொருட்களுக்கு 50% வரி விதித்துள்ள சூழலில், இந்தியப் பொருளாதாரத்தைத் தாங்கிப் பிடிக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மொத்தத்தில்… கடன் வாங்கியவர்களுக்கு இது ஒரு ‘ஜாக்பாட்’ செய்தி. ஆனால், வங்கியில் பணத்தைப் போட்டு வைத்திருப்பவர்களுக்குச் சற்று கசப்பான செய்தி!
