பெரும்பாலானோர் எண்ணெய் இல்லாத உணவுகள் சாப்பிட விரும்புகின்றனர். ஆனால், சுவைக்காக எண்ணெய் சேர்த்துக்கொள்ள வேண்டிய தேவை வந்துவிடுகிறது. எண்ணெய் இல்லாமல் சமைப்பது எடை குறைப்பு, இதய ஆரோக்கியம், கொழுப்புக் கட்டுப்பாடு, மற்றும் ஒட்டுமொத்த உடல் நலத்திற்கு நல்லது. ஏனெனில் இது கலோரிகளைக் குறைக்கிறது. உடல் எடை அதிகரிப்பு, இதய நோய், மற்றும் பிற கொழுப்பு தொடர்பான பிரச்சனைகளைத் தடுக்க உதவுகிறது. ஆனால் ஆரோக்கியமான வாழ்விற்கு மிதமான எண்ணெய் பயன்பாடும் முக்கியம்.
சிக்கன் சமைக்கும்போதுதான் நமக்கு அதிகளவில் எண்ணெய் தேவைப்படுவது போல இருக்கும். இங்கு ஒரு சொட்டு எண்ணெய் கூட பயன்படுத்தாமல் சுவையான சிக்கன் குழம்பு செய்யலாம், அதே சுவையுடனும் இருக்கும். வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு பேஸ்ட், மசாலாப் பொருட்களுடன் கொத்தமல்லி, தயிர், பாதாம் போன்றவற்றைச் சேர்த்து ஆரோக்கியமான, சுவையான கறி குழம்பை உருவாக்கலாம். எப்படி செய்வது என பார்க்கலாம் வாருங்கள்.
சிக்கன் குழம்பு செய்முறை
வெங்காயம், பூண்டு, இஞ்சி உள்ளிட்ட மசாலா பொருட்களை வதக்குவதன் நோக்கம் பச்சை வாசனையை நீக்கி, சுவையை அதிகரிப்பதற்காகவே. ஆனால், நாம் இங்கு பச்சை வாசனையைத் தவிர்க்க இந்த செய்முறைக்கு பதிலாக அவற்றை தண்ணீரில் கொதிக்க வைக்கப் போகிறோம். நறுக்கிய வெங்காயம், பூண்டு மற்றும் இஞ்சியை தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும். அடுத்து நறுக்கிய சிக்கன் துண்டுகளை தயிரில் ஊற வைக்க வேண்டும். அப்போது, கோழிக் கறி இன்னும் மென்மையாக மாறும். கூடவே சமைத்த வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது ஆகியவற்றை மசாலாவுடன் சேர்த்து கோழிக் கறியுடன் குறைந்தது சில மணி நேரங்கள் வரை ஊற வைக்க வேண்டும்.
அதன்பிறகு சிக்கன் துண்டுகளை தனியாக எடுத்து வாணலியில் இட்டு மிதமான வெப்பத்தில் 3 – 4 நிமிடங்கள் வரை வதக்க வேண்டும். சிக்கனில் பழுப்பு நிறம் தோன்றியதும் நாம் வாணலியை எடுத்துவிடலாம். அடுத்து வறுக்கப்பட்ட சிக்கன், ஊற வைத்த பொருட்கள் என அனைத்தையும் வாணலியில் சேர்த்து கிரேவி பதம் வரும் வரை வாணலியில் கொதிக்க வைக்க வேண்டும். இப்படி செய்தால் எண்ணெய் இல்லாமல் அதே சுவையில் இருக்கும் சிக்கன் குழம்பு ரெடி.
