ஜம்மு காஷ்மீர் பிரச்சனையில் தலையிட தயார்: அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப்

Published On:

| By Minnambalam Desk

ஜம்மு காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் இந்தியா- பாகிஸ்தான் இடையேயான பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா தயாராக உள்ளதாக அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் விவகாரம் என்பது இந்தியா- பாகிஸ்தான் பிரிவினை காலத்தில் இருந்தே இருந்து வருகிறது. ஆனால் இதுவரை ஜம்மு காஷ்மீர் பிரச்சனையில் 3-வது நாட்டின் தலையீட்டை இந்தியா ஒருபோதும் அனுமதித்தது இல்லை.

இந்த நிலையில் இந்தியா- பாகிஸ்தான் இடையேயான மோதலைத் தடுக்கும் வகையில் அமெரிக்கா தலையிட்டுப் பேச்சுவார்த்தை நடத்தியது. இதனையடுத்து இந்தியாவும் பாகிஸ்தானும் போர் நிறுத்தத்தை கடைபிடிக்க ஒப்புக் கொண்டதாக அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். டிரம்ப்பின் இந்த அறிவிப்புக்குப் பின்னரே மத்திய அரசும், பாகிஸ்தான் மீதான அனைத்து தாக்குதளையும் நிறுத்துவதாக அறிவித்தது.

இந்தியா- பாகிஸ்தான் இடையேயான மோதல் முடிவுக்கு வந்த போதும், இந்தியாவின் விவகாரங்களில் அமெரிக்கா தலையிட்டிருப்பது பெரும் சர்ச்சையாக விவாதிக்கப்பட்டு வருகிறது. அமெரிக்காவின் இத்தலையீடு குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தொடர்ச்சியாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த பின்னணியில் இன்று அமெரிக்கா அதிபர் டொனால் டிரம்ப் தமது எக்ஸ் பக்கத்தில் மற்றொரு பதிவை பகிர்ந்துள்ளார். அதில், இந்தியா- பாகிஸ்தான் நாடுகளின தலைமைத்துவம் குறித்து பெருமிதம் அடைகிறேன். வரலாற்று சிறப்பு வாய்ந்த போர் நிறுத்த முடிவுக்கு அமெரிக்கா உதவி செய்ததில் எங்களுக்கும் பெருமை என குறிப்பிட்டுள்ள டொனால்ட் டிரம்ப், ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் தீர்வை ஏற்படுத்த இந்தியா- பாகிஸ்தானுடன் இணைந்து பணியாற்ற தயார் எனவும் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் பிரச்சனையில் அமெரிக்கா நேரடியாக தலையிட விரும்புகிறது என்பதையே டொனால்ட் டிரம்ப் வெளிப்படுத்தி இருக்கிறார். ஜம்மு காஷ்மீர், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி; 3-வது நாடு ஒன்றின் எந்தவித தலையீட்டுக்கும் ஒருபோதும் அனுமதியே கிடையாது என்கின்ற இந்தியாவின் நீண்டகால நிலைப்பாட்டை டொனால்ட் டிரம்ப்பின் இந்த பதிவு கேள்விக்குறியாக்குகிறது என்கின்றனர் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள். இதனால்தான் நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வை உடனே கூட்டி விவாதிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்துகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share