‘8 தோட்டாக்கள்’ மற்றும் ‘குருதி ஆட்டம்’ ஆகிய படங்களை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சித்தார்த்தின் 40-வது படமாக உருவாகியுள்ளது ‘3 BHK’. ravi mohan emtional speech at 3bhk movie show
வரும் ஜூலை 4ஆம் தேதி வெளியாகும் இப்படத்தில் சரத்குமார், தேவயானி, யோகி பாபு, மீதா ரகுநாத், சைத்ரா ஆசர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அமீர் ராம்நாத் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில் 3 BHK திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று (ஜூன் 26) வெளியாகி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.
அதனை முன்னிட்டு சென்னையில் இன்று பிரபல திரையரங்கில் நடைபெற்ற படவிழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரவி மோகன் கலந்து கொண்டார்.
விழாவில் அவர் பேசுகையில், “இயக்குநர் பாலுமகேந்திராவின் வீடு திரைப்படம் நம்ம எல்லோருக்கும் எப்படி பிடிக்குமோ, அதே மாதிரி இந்த ’3 BHK’ படமும் எல்லோருக்கும் பிடிக்கும். இந்த படம் எல்லோரையும் பேச வைக்கும். இந்த படத்தின் இயக்குநர் பாலு மகேந்திரா சாரை விடவும் பெரிய இயக்குநராக வரனும்னு நான் ஆசைப்படுகிறேன்.
இன்னைக்கு எந்த ஹீரோவும், இன்னொரு ஹீரோவுக்கு ரிலீஸுக்கு முன்னாடி படம் போட்டு காட்டுறது இல்ல. ஆனால் நானும் சித்தார்த்தும் எப்போது நண்பர்களாக ஆனோம் என்று தெரியல. பல கதைகள் கேட்டு ஒன்னா வளர்ந்துட்டோம். இந்த படத்துல சின்ன வயசு பையனா மாறி நடிக்கனும். அதை சித்தார்த் சிறப்பாக நடித்திருக்கிறார்.
நான் என் லைஃப்ல பிறந்ததுல இருந்து வாடகை வீட்டுல இருந்ததே கிடையாது. ஆனா இப்போ வாடகை வீட்டுல தான் இருக்கேன். அதனால எனக்கு ’3 BHK’ ரொம்ப கனெக்ட் ஆச்சி. இந்த படம் பாத்த அப்புறம், நான் அடுத்தக்கட்டத்துக்கு போகப் போறேனு நம்பிக்கை வந்துருக்கு. அப்படிப்பட்ட இன்ஸ்பிரேஷன் இந்த படம் கொடுத்துருக்கு. படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்” என ரவி மோகன் பேசினார்.