டாம்க்ரூஸ் Ranveer Singhs Dhurandhar First Look
’தெய்வத் திருமகள்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சாரா அர்ஜுன். விக்ரமின் அபாரமான நடிப்புக்காகவும், அவரது மகளாக நடித்த சாராவின் சுட்டித்தனத்திற்காகவும் அப்படத்திற்கு ரசிகர்கள் ஆனவர்கள் பலர். பிறகு ’சித்திரையில் நிலாச்சோறு’, ‘சைவம்’, ’விழித்திரு’ படங்களில் அவர் தோன்றினார்.
ஒரு இடைவெளிக்குப்பின் ‘பொன்னியின் செல்வன் 1 & 2’இல் ஜூனியர் நந்தினி ஆக நடித்திருந்தார். ‘அடுத்து ஹீரோயினா நடிச்சிருவார் போலயே’ என்ற எண்ணத்தை அந்த படத்தில் ஏற்படுத்தியிருந்தார் சாரா அர்ஜுன்.
அந்த எதிர்பார்ப்பு இப்போது பூர்த்தி ஆகியிருக்கிறது. பிரமாண்ட பட்ஜெட்டில் தயாராகிற ஒரு திரைப்படத்தில் நாயகி ஆகிற வாய்ப்பு அவருக்குக் கிட்டியிருக்கிறது.
அந்த படத்தின் பெயர் ‘துரந்தர்’. ரன்வீர் சிங் இதன் நாயகன். இப்படத்தில் அவர் இந்திய உளவாளியாக நடிக்கிறார். Ranveer Singhs Dhurandhar First Look
ரன்வீர் ஜோடியாக நடிக்கிற சாரா, அங்குள்ள அரசியல் கட்சித்தலைவரின் வாரிசாக வருகிறார் என்பதாகக் கதை சொல்கிறது ‘துரந்தர்’ பர்ஸ்ட் லுக். ரன்வீர் சிங் பிறந்தநாளையொட்டி, இன்று அது வெளியாகியிருக்கிறது.
‘ஆக்ஷன் ஸ்பை த்ரில்லர்’ வகைமையில் அமைந்த இப்படத்தில் பாகிஸ்தானுக்கு ரகசியமாகச் சென்று சாகசங்களில் ஈடுபடுபவராக வருகிறார் ரன்வீர். அதற்கேற்ப, பர்ஸ்ட் லுக்கில் ஆக்ஷன் படுபயங்கரமாக வெளிப்பட்டிருக்கிறது.
இந்த படத்தில் மாதவன், சஞ்சய் தத், அக்ஷய் கன்னா, அர்ஜுன் ராம்பால் உட்படப் பலர் நடித்திருக்கின்றனர். ஆதித்ய தார் இதனை இயக்கியிருக்கிறார். சாஸ்வத் சச்தேவ் இதற்கு இசையமைத்திருக்கிறார்.
வரும் டிசம்பர் 5ஆம் தேதியன்று உலகம் முழுக்க வெளியாகிறது ‘துரந்தர்’. அன்றைய தினம் சாராவின் பயணம் இந்தி திரையுலகிலா அல்லது பல மொழிப் படங்களிலும் அமையுமா என்பது தெரிந்துவிடும்.
இன்னொரு முக்கியமான விஷயம், இந்தப் படத்தில் அஜித் தோவல் எனும் பாத்திரத்தில் மாதவன் நடிப்பதாகத் தகவல். அதனால், இப்படம் உண்மைக்கதையா இது என்கிற கேள்வி தற்போது விஸ்வரூபமெடுத்திருக்கிறது.


