டாம்க்ரூஸ் Baa Baa Ba Movie Official Teaser
மலையாளத் திரையுலகில் காமெடி கலந்த ஆக்ஷன் பாத்திரங்களில் நடித்து தனக்கென்று தனிப்பட்ட ரசிகர்களைப் பெற்றவர் திலீப். நடிகை பாலியல் அத்துமீறல் வழக்கில் சிக்கியபிறகு, அவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் பேமிலி ட்ராமா, ஆக்ஷன் படங்களாகவே அமைந்து வருகின்றன. ஆனால் திலீப் காமெடியில் அதகளம் செய்த சிஐடி மூசா, பாடிகார்டு, மீசா மாதவன், இ பறக்கும் தளிகா போன்ற படங்களைப் போன்று மீண்டும் அவர் நடிக்க மாட்டாரா என்று ரசிகர்கள் ஏங்கி வந்தனர்.
’அந்த ஏக்கம் தீர்ந்துவிடுமோ’ என்கிற எண்ணத்தை விதைத்திருக்கிறது திலீப்பின் புதிய படமான ‘ப. ப. ப.’ டீசர். கோகுலம் மூவிஸ் தயாரித்திருக்கிற இப்படத்தைப் புதுமுக இயக்குனரான தனஞ்ஜெய் சங்கர் இயக்கியிருக்கிறார். இந்த டைட்டிலுக்கு ‘பயம் பக்தி பகுமானம்’ என்று விளக்கம் இருக்கிறதாம்.
ஷான் ரஹ்மான் இதற்கு இசையமைத்திருக்கிறார். வெற்றிகரமான இயக்குனர் – நடிகராக இருந்துவரும் வினீத் சீனிவாசன் மற்றும் அவரது சகோதரர் தியான் சீனிவாசன் இருவரும் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். பாலு வர்கீஸ், பைஜு சந்தோஷ், சித்தார்த் பரதன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்தில் சரண்யா பொன்வண்ணன், ரெடின் கிங்ஸ்லி என்று சில தமிழ் முகங்களும் உண்டு. சாண்டி மாஸ்டர் இப்படம் வழியே மலையாளத்தில் அறிமுகமாகிறார். Baa Baa Ba Movie Official Teaser
சில நட்சத்திர நடிகர்களின் படங்களை அவர்களது ரசிகர்களாக இருந்தவர்கள் இயக்குகிறபோது, ‘இது ஒரு ஃபேன்பாய் சம்பவமாக இருக்குமா’ என்ற கேள்வி சமூகவலைதளங்களில் எழுப்பப்படுவதுண்டு. அப்படியொன்றாகக் காட்சியளிக்கிறது ‘ப.ப.ப.’டீசர். அந்தளவுக்கு ‘விண்டேஜ் திலீப்பை காணலாம்’ என்கிற எதிர்பார்ப்பை விதைத்திருக்கிறது. Baa Baa Ba Movie Official Teaser
‘மாஸ் ஆக்ஷன் காமெடி’ வகைமையில் அமைந்துள்ள இப்படத்தில் மோகன்லால் ‘கௌரவமாக’த் தலைகாட்டப் போகிறார் என்ற தகவல் மலையாளத் திரையுலகில் உலவுகிறது. கிட்டத்தட்ட ‘ஓணம் வெளீயீடாக’ இப்படம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிற நிலையில், அதையொட்டி மோகன்லாலின் இருப்பு இப்படத்தில் வெளிப்படுத்தப்படலாம் அல்லது தியேட்டரில் முதல் காட்சியின்போது அந்த ஆச்சர்யத்தை ரசிகர்கள் பெறலாம் அல்லது வெறும் வதந்தியாக ஏமாற்றம் தரலாம். இம்மூன்றில் ரசிகர்களுக்கு எதனைத் தரப் போகிறது ‘ப. ப. ப.’?!
