பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையே அதிகார மோதல் வெடித்துள்ளது. இந்தநிலையில், ராமதாஸ் ஆதரவாளரான சேலம் மேற்கு பாமக சட்டமன்ற உறுப்பினர் அருளை கட்சியில் இருந்து நீக்கி அன்புமணி கடந்த ஜூன் 30-ஆம் தேதி உத்தரவிட்டார். இந்தநிலையில், அருளை நீக்கும் அதிகாரம் எனக்கு மட்டும் தான் உள்ளது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், “பாமக சட்டமன்ற உறுப்பினர் அருளை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை. அருளை நீக்க நிறுவனர், தலைவரான எனக்கு தான் அதிகாரம் உள்ளது.
பாமக கொறடாவாக அருள் இருக்கிறார். அருளை நீக்க வேண்டும் என்றால், பாமக சட்டமன்ற குழு தலைவர் ஜி.கே.மணி, என்னுடைய அனுமதியை பெற்று சபாநாயகருக்கு சிபாரிசு செய்ய வேண்டும். சபாநாயகர் தான் அவரை எம்.எல்.ஏ பதவியில் இருந்து நீக்க முடியும். மேலும், அவருக்கு இணை பொதுச்செயலாளர், நிர்வாகக் குழு உறுப்பினர் பொறுப்பையும் கொடுத்திருக்கிறேன்” என்றார்.
தொடர்ந்து, பாமகவை வழிநடத்துவதற்கு தலைவர், பொருளாளர், பொதுச்செயலாளருக்கு தான் அதிகாரம் இருப்பதாக அன்புமணி பேசியிருக்கிறாரே என்ற கேள்விக்கு பதிலளித்த ராமதாஸ்,
“ஒற்றை மனிதனாக 96,000 கிராமங்களுக்கு சென்று இந்த கட்சியை வளர்த்தேன். இன்றும் ஊமை ஜனங்களுக்காக நான் பாடுபட்டு வருகிறேன். இதுபோன்று மன வேதனையான சில செயல்களை அன்புமணி செய்கிறார். ஆனால், அதையெல்லாம் புறந்தள்ளிவிட்டு தொடர்ந்து நான் இந்த கட்சியை வழிநடத்துவேன்” என்றார் ராமதாஸ்.
திமுக, அதிமுக கட்சிகளுடன் பாமக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துகிறதா என்ற கேள்விக்கு, “பாமகவில் நிர்வாக குழு, செயற்குழு, பொதுக்குழு கூடி எந்த கட்சியோடு இணையலாம் என்று முடிவு செய்யப்படும். திமுக, அதிமுகவோடு பாமக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்பதெல்லாம் வதந்தி” என்றார். Ramadoss says Anbumani has no power