அன்புமணி கூட்டிய பாமக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில், நீதிபதி நேரில் வர அழைப்பு விடுத்திருந்த நிலையில், உயர் நீதிமன்றத்துக்கு வர இயலாது என ராமதாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாமக பொதுக்குழு கூட்டம் ஆகஸ்ட் 9ஆம் தேதி (நாளை) அன்புமணி தலைமையில் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியிருந்தது.
இதனை எதிர்த்து பாமக நிறுவனர் ராமதாஸ் சார்பில் நியமிக்கப்பட்ட மாநில பொதுச்செயலாளர் முரளி சங்கர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன்பு இன்று காலை விசாரணைக்கு வந்தது.
அப்போது கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இருவரிடம் தனித்தனியாக பேச வேண்டும் என்றும், இருவரும் இன்று மாலை 5.30 மணிக்கு, வழக்கறிஞர்கள் இன்றி நீதிபதி அறைக்கு வர வேண்டும் என்று தன்னுடைய விருப்பத்தின் பேரில் அழைப்பு விடுத்திருந்தார்.
அதனை ஏற்று அன்புமணி இன்று மாலை நீதிமன்றத்துக்கு வருவார் என அவரது வழக்கறிர் பாலு நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
ஆனால், உடல்நிலை காரணமாக இன்று உயர் நீதிமன்றத்துக்கு தன்னால் வர முடியாது என்று ராமதாஸ் சார்பில் எழுதப்பட்ட கடிதம் நீதிபதியிடம் அளிக்கப்படும் என அவரது தரப்பு வழக்கறிஞர் வி.எஸ்.கோபு தெரிவித்துள்ளார்.
ராமதாஸ் தன்னால் நீதிமன்றத்திற்கு வர முடியாத நிலையில், அன்புமணி அறிவித்திருந்த பொதுக்குழு கூட்டம் நாளை நடைபெறுமா என கேள்வி எழுந்துள்ளது.
