அன்புமணி தனிகட்சி ஆரம்பித்து கொள்ள வேண்டும். அது அன்புமணிக்கும் நல்லது அவரை சுற்றி இருப்பவர்களுக்கும் நல்லது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
திண்டிவனம் அருகே தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று (அக்டோபர் 16) செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், ‘உடல் பரிசோதனைக்காக மருத்துவமனையில் சேர்ந்தேன். அப்போது எந்த குறையும் இல்லை என கூறி மருத்துவர்கள் அனுப்பி வைத்தார்கள். புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கட்சியை தவிர எல்லா கட்சியினரும் தன்னிடம் உடல் நலம் குறித்து விசாரித்தனர்.
மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றபோது நான் ஐசியுவில் இல்லை. ஐசியு வார்டுக்கும் போகவில்லை’ என்றார்.
‘ஐயாவுக்கு ஏதாவது ஆனால் சும்மா விடமாட்டேன்… வேடிக்கை பார்க்க மாட்டேன். அவரை வைத்து டிராமா பண்னிட்டு இருக்காங்க’ என்று அன்புமணி தெரிவித்த கருத்துக்கு பதிலளித்த ராமதாஸ், ‘படிக்காத மாடு மேய்க்கும் சிறுவன் கூட இப்படிபட்ட சொற்களை கொட்டி இருக்க மாட்டான். அன்புமணிக்கு தலைமை பண்பு இல்லை என ஏற்கனவே நிர்வாக குழு கூட்டத்தில் கூறினேன். அது இப்போதும் அவரது பேச்சின் மூலம் தெரியவருகிறது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு விரைவில் குணமடைய வேண்டுமென கட்சி தலைவர்கள் வாழ்த்து கூறியது மகிழ்ச்சியாக இருந்தது. தொற்று ஏற்படுமளவுக்கு எனக்கு வியாதி இல்லை’ என தெரிவித்தார்.
மேலும் அவர், ‘பாமக கட்சிக்கும் கொடிக்கும் அன்புமணிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது, அன்புமணி தனிகட்சி ஆரம்பித்து கொள்ள வேண்டும். அதுதான் அன்புமணிக்கும் நல்லது, அவரை சுற்றி இருப்பவர்களுக்கும் நல்லது.
புதிய கட்சி தொடங்கினால் பொறுப்புகள் தான் கிடைக்கும். சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி கிடைக்காது. மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். அது ஒரு போலியான அமைப்பாக தான் இருக்கும்.
பாமக கட்சி கொடி கட்சி பெயரை அன்புமணி பயன்படுத்த கூடாது. தன்னுடைய பெயரின் தலைப்பெழுத்தினை மட்டுமே அன்புமணி பயன்படுத்தி கொள்ள வேண்டும். தனி மனித உழைப்பினால் 96 ஆராயிரம் கிராமங்களுக்கு சென்று காடுமேடு அலைந்து திரிந்து உருவாக்கப்பட்டது பாமக ’ என்று கூறினார்.