பாமகவின் (செயல்) தலைவர் அன்புமணி மேற்கொண்டு வரும் நடைபயணத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தமிழக உள்துறை செயலாளரிடம் மனு கொடுத்துள்ளார் (Ramadoss Vs Anbumani).
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பிறந்த நாளான ஜூலை 25-ந் தேதியன்று தமது 100 நாட்கள் நடைபயணத்தை அன்புமணி ராமதாஸ் தொடங்கினார். “உரிமை மீட்க… தலைமுறை காக்க” என்ற பெயரில் இந்த நடைபயணத்தை நடத்தி வருகிறார் அன்புமணி.

ஆனால், பாமகவின் நிறுவனத் தலைவரான தமது ஒப்புதல் இல்லாமல் நடைபயணம் மேற்கொள்கிறார் அன்புமணி; இந்த நடைபயணத்தில் பாமக பெயர், கட்சி கொடி ஆகியவற்றை அன்புமணி பயன்படுத்தக் கூடாது; சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் அன்புமணி பயணத்தை தடை செய்ய வேண்டும் என டாக்டர் ராமதாஸ் ஏற்கனவே டிஜிபியிடம் மனு கொடுத்திருந்தார்.
பாமகவில் இருந்து நீக்கப்படாத அன்புமணி, அக்கட்சியின் கொடி- பெயரை பயன்படுத்த எப்படி தடை விதிக்க முடியும்? அதை தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றம்தான் முடிவு செய்ய முடியும் என கூறி ராமதாஸ் கோரிக்கையை போலீசார் நிராகரித்துவிட்டனர். இருப்பினும் அன்புமணியின் பயணத்தின் போது ஏற்படும் சூழ்நிலைகளைப் பொறுத்து போலீசார் முடிவெடுக்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
இந்த நிலையில் தமது அனுமதி இல்லாமல் அன்புமணி நடைபயணம் மேற்கொள்வதால் கட்சி நிர்வாகிகளிடையே குழப்பம், மோதல் ஏற்பட்டு வருகிறது. ஆகையால் அன்புமணியின் நடைபயணத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று உள்துறை செயலாளரிடம் ராமதாஸ் மனு கொடுத்துள்ளார்.