முதல்வர் ஸ்டாலினை தொடர்பு கொண்டு பாமக நிறுவனர் ராமதாஸ் நலம் விசாரித்துள்ளார்.
உடல்நலக் குறைவு காரணமாக கடந்த வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல்வர் ஸ்டாலின் ஆறு நாட்கள் சிகிச்சைக்கு பிறகு டிஸ்சார்ஜ் ஆனார்.

இதையடுத்து ஒரு சில நாட்கள் வீட்டில் ஓய்வில் இருந்த முதல்வர் நேற்று (ஜூலை 31) முதல் தனது வழக்கமான பணிகளை மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் முதல்வரை நேரில் சந்தித்தும் தொலைபேசி வாயிலாகவும் நலம் விசாரித்து வருகின்றனர்.
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் முதல்வர் வீட்டுக்கு சென்று அவரிடம் நலம் விசாரித்தனர்.
இந்த நிலையில் இன்று (ஆகஸ்ட் 1) பாமக நிறுவனர் ராமதாஸ் முதல்வரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு நலம் விசாரித்துள்ளார்.
அப்போது, ‘உங்களுடன் நாங்களும் இருக்கிறோம்’ என்று ராமதாஸ் சொன்னதாக தகவல்கள் வந்தன.
இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராமதாஸ், “தமிழக முதலமைச்சரிடம் நலம் விசாரித்தேன். அவர் நன்றாகவே இருக்கிறார். மருத்துவர்களிடமும் விசாரித்தேன். அவர் விரைவில் குணமடைவார், குணமடைய வேண்டும் என்று என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்தேன்.” என்று கூறினார்.
அப்போது உங்களுடன் நாங்களும் இருக்கிறோம் என்று நீங்கள் சொன்னதாக சொல்கிறார்களே என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு,
நான் சொல்லவில்லை.. நீங்கள்தான் சொல்கிறீர்கள். இதை 100 முறை கூட சொல்வேன் என்று பதிலளித்தார்.
வரக்கூடிய தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு… ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை. அதுவும் நம்முடைய தமிழக முதலமைச்சருக்கு உடல்நிலை சரியில்லை. அதனால் அவரை தொடர்பு கொண்டு விரைவில் குணமடைய வேண்டும் என்று வாழ்த்தினேன். அது என்னுடைய வழக்கம். அதற்கும் கூட்டணிக்கும் சம்பந்தமே இல்லை என்று கூறினார் ராமதாஸ்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், முதல்வரிடம் அடுத்தடுத்து அரசியல் கட்சித் தலைவர்கள் பேசுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.