கடைசி நேர ட்விஸ்ட் … ராஜ்யசபா தேர்தலுக்கு வேட்பாளரை களமிறக்கிய ராமதாஸ் : ஆனால்..?

Published On:

| By Kavi

பாமக நிறுவனர் ராமதாஸின்  உதவியாளர் சாமிநாதன் ராஜ்யசபா தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். 

பாமக நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகனும் கட்சியின் தலைவருமான அன்புமணிக்கும் இடையே, பாமக யாருக்கு சொந்தம் என மோதல் போக்கு நீடித்து வருகிறது.  பாமக தனக்கே சொந்தம் என சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில்  ராமதாஸ் தொடர்ந்த வழக்கு நிலுவலையில் உள்ளது. 

ADVERTISEMENT

இந்தசூழலில் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளதால் அன்புமணி தரப்பு பாமக அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளது. இந்த கூட்டணியில் பாமகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் போட்டியிட இன்று (மார்ச் 5)  அன்புமணி ராமதாஸ் வேட்புமனு தாக்கல் செய்தார்.

இதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து வாழ்த்து பெற்றார். 

ADVERTISEMENT

இந்தநிலையில் திடீர் ட்விஸ்ட்டாக  ராமதாஸ் தரப்பில் அவரது ஆதரவாளர் சாமிநாதன் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளார்.  

மாநிலங்களவை தேர்தலுக்கு வேட்பு மனுவைத் தாக்கல் செய்ய, குறைந்தது 10 எம்.எல்.ஏ.க்கள் முன்மொழிந்து கையெழுத்திட வேண்டும். அதுபோன்று 34 அல்லது 35 எம்.எல்.ஏ.க்களின் வாக்குகள் தேவைப்படும். ஆனால் ராமதாஸ் தரப்பிடம்  ஜி.கே. மணி, அருள் ஆகிய இரண்டு எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே உள்ளனர். 

ADVERTISEMENT

எனவே போதிய எம்.எல்.ஏ.க்கள் கையெழுத்து இல்லாமல் தாக்கல் செய்யப்பட்ட இவரது வேட்புமனு தள்ளுபடி செய்யவே அதிகம் வாய்ப்பிருப்பதாகவும், அன்புமணிக்கு போட்டியாகவே ராமதாஸ் தரப்பில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன.

வேட்புமனு தாக்கல் செய்வதற்கான நேரம் முடிவதற்கு (4 மணி) கடைசி ஒரு  நிமிடத்தில் சாமிநாதன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். 

முன்னதாக தைலாபுரத்தில் ஜி.கே.மணி, அருள் உள்ளிட்டோருடன் ராமதாஸ் ஆலோசனை செய்திருக்கிறார். அதைத்தொடர்ந்து இவர்கள் சாமிநாதனுடன் சென்னை வந்து வேட்புமனுவில் கையெழுத்திட்டதாக ராமதாஸ் தரப்பு தகவல்கள் கூறுகின்றன.

இந்த சாமிநாதன் அன்புமணியின் செயலாளராக இருந்தவர்.  பின்னர் ராமதாஸ் தரப்பிடம் வந்தபிறகு, அன்புமணி மற்றும் அவரது மனைவியால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக டிஜிபியிடம் புகார் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share