அன்புமணி நடத்திய பொதுக்குழு கூட்டம் சட்டவிரோதமானது. அவரை கட்சியில் இருந்து நீக்க அல்லது சஸ்பெண்ட் செய்ய குழு அமைக்கப்பட்டு உள்ளதாக தேர்தல் ஆணையத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
தமிழக அரசியலில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி இடையே நடந்துவரும் மோதல் கவனிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து இருவரும் மோதல் போக்கை கடைபிடித்து வரும் நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவுடன் கடந்த 9 ம் தேதி மாமல்லபுரத்தில் பாமகவின் பொதுக்குழு கூட்டத்தை நடத்தி முடித்தார் அன்புமணி.
அப்போது அன்புமணியின் தலைவர் பதவியை மேலும் ஓராண்டு காலம் நீட்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், ராமதாஸின் உதவியாளர் சுவாமிநாதன் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு இன்று கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.
அதில், “கட்சியின் பெயரில் தனிப்பட்ட லாபத்துக்காக அன்புமணி செயல்பட்டு வருகிறார். அன்புமணியை கட்சியில் இருந்து நீக்க அல்லது சஸ்பெண்ட் செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. கட்சி விதி 13ன் படி பொதுக்குழு, செயற்குழுவுக்கு கட்சி நிறுவனரே ஒப்புதல் தரவேண்டும். ஆனால் அவரின் ஒப்புதல் இன்றி தன்னிச்சையாக பொதுக்குழு கூட்டம் நடந்துள்ளது. இது சட்டவிரோதமானது.
அதில் தன்னைத்தானே தலைவர் என அறிவித்தது செல்லாது. ராமதாஸ் கட்சியின் தலைவராக பதவியேற்றதில் இருந்து அன்புமணிக்கு எந்த அதிகாரமும் இல்லை. தலைவர் பதவிக்காலம் முடிந்த நிலையில், நிறுவனரின் ஒப்புதல் இல்லாமல் ஓராண்டு நீட்டிக்கப்பட்டதாக தீர்மானம் நிறைவேற்றப்ப்பட்டுள்ளது கட்சிகளின் விதிகளுக்கு முரணானது.
எனவே கட்சி நிறுவனருக்கு அழைப்பு விடுக்காமல் நடத்தப்பட்ட பொதுக்குழு கூட்டம் செல்லாது அறிவிக்க வேண்டும். மேலும் தொடர்ந்து கட்சிக்கு எதிராக சட்டவிரோத செயலில் ஈடுபட்டு வரும் அன்புமணியிடம் விளக்கம் கோரி தேர்தல் ஆணையம் சம்மன் அனுப்பி விசாரணை நடத்த வேண்டும்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.