பாமக ஒழுங்கு நடவடிக்கை குழுவின் 16 குற்றச்சாட்டுக்கள் குறித்து வரும் 31ஆம் தேதிக்குள் அன்புமணி விளக்கமளிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் பேட்டியளித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸுக்கும், மகன் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே மோதல்போக்கு தொடர்ந்து வருகிறது. இந்தநிலையில் புதிதாக 8 பேர் கொண்ட ஒழுங்கு நடவடிக்கை குழுவை ராமதாஸ் அமைத்தார். இக்குழு, கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் குறித்து விசாரணை செய்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டார்.
தொடர்ந்து கடந்த 17ஆம் தேதி வானூர் அடுத்த பட்டனூர் பகுதியில் பாமகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது.
இந்த பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அறிக்கை ஒன்றை ராமதாஸிடம் பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு அளித்தது.
அந்த அறிக்கையில்…அன்புமணி தொடர்ந்து கட்சிக்கும்,ராமதாஸிற்கும் எதிராக செயல்பட்டு கட்சிக்கு களங்கத்தையும், பிளவையும் ஏற்படுத்தி வருகிறார். ராமதாஸ் அமரும் இடத்திற்கு அருகில் ஒட்டு கேட்கும் கருவியை வைத்தது, தன்னிச்சையாக பொதுக்குழு கூட்டம் நடத்தியது, அவர் நடத்திய பொதுக்குழு கூட்டத்தில் காலி நாற்காலி போட்டு ராமதாசை அவமானப்படுத்தியது, பனையூரில் தனி அலுவலகம் அமைத்தது, ராமதாஸிடம் உரிய அனுமதி பெறாமல் நடை பயணம் நடத்தி வருவது, ராமதாஸ் கூட்டிய கூட்டத்திற்கு மாவட்டச் செயலர்களை வரவிடாமல் தடுத்தது உள்ளிட்ட 16 குற்றச்சாட்டுகளை அன்புமணி மீது முன் வைத்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க பாமக ஒழுங்கு நடவடிக்கை குழுவால் பரிந்துரை செய்யப்பட்டது.
அதன் அடிப்படையில் ஒழுங்கு நடவடிக்கை குழு கூறியுள்ள 16 குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் கேட்டு அன்புமணிக்கு நேற்று ராமதாஸ் நோட்டீஸ் அனுப்பினார்.
24 மணி நேரம் கால அவகாசம் வழங்கப்பட்டும் அன்புமணி தரப்பில் இருந்து எந்த பதிலும் அளிக்கவில்லை.
இந்நிலையில் தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் தலைமையில் எட்டு பேர் கொண்ட ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டம் இன்று (ஆகஸ்ட் 19) காலை நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் அன்புமணி மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.
அப்போது அவர், “ஒழங்கு நடவடிக்கை குழு அளித்துள்ள 16 குற்றச்சாட்டுக்கள் குறித்து அன்புமணிக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நோட்டீசிற்கு வரும் 31ஆம் தேதிக்குள் நேரிலோ அல்லது கடிதம் வாயிலாகவோ அன்புமணி விளக்கம் அளிக்க வேண்டும்” என்றார்.
இந்த குற்றசாட்டுகள் தொடர்பாக கிருஷ்ணகிரியில் நடைப்பயணம் மேற்கொண்டுள்ள அன்புமணியிடம் செய்தியாளார்கள் கேள்வி எழுப்பினர். ஆனால் இதற்கு அவர் பதிலளிக்கவில்லை.
