வைஃபை ஆன் செய்ததுமே, பதற்றம் தணியாமலேயே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப்.
ஏன்யா இவ்வளவு பதற்றம்?
திண்டிவனத்தில் தொடங்கியிருக்கும் பதற்றம் வட தமிழ்நாட்டில் இன்னும் எத்தனை விபரீதங்களை அரங்கேற்றுமோ தெரியலையே..?
என்ன விவகாரம்னு விரிவாக சொல்லுமய்யா
“உண்மையிலேயே இனிதான் பாமகவில் பெரிய பிரச்சனையே வெடிக்கப் போகுது.. எது எங்க போய் முடியும்னே தெரியாது.. ஏன்னா அப்பா- மகன் மோதலால் இப்போது வன்னியர் சமூகமே இரண்டாக பிளவுபட்டு நிற்கிறது..” என நேற்று (செப்டம்பர் 11) டிஜிட்டல் திண்ணையில் நாம் எழுதி இருந்தோம்.
நாம் எழுதிய எழுத்தின் ஈரம் காயக் கூடவில்லை.. திண்டிவனத்தில் ‘சம்பவம்’ அரங்கேறிவிட்டது.
என்ன ஆச்சாம்?
திண்டிவனம் மயிலம் சாலையில் பாமகவின் முதன்மை அமைப்பான வன்னியர் சங்கத்தின் தலைமை அலுவலகம் உள்ளது. இது வாடகை கட்டிடம்தான். இந்த கட்டிடம், பாஜகவைச் சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது. பாமகவின் தியாகிகள் தினம் வரும் 17ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. (1987 இடஒதுக்கீட்டுப் போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 21 வன்னியர்கள் நினைவாக)
அன்றைய தினம், வன்னியர் சங்க தலைமை அலுவலகத்துக்கு அன்புமணி செல்வதால் அவரது ஆதரவாளர்கள் அங்கு சென்றனர். ஆனால் ராமதாஸ் ஆதரவாளர்கள் , வன்னியர் சங்கத்தை இழுத்துப் பூட்டிவிட்டனர். இதனால் இருதரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு மோதலாகிவிட்டது. பின்னர் போலீஸ் தலையிட்டது.
ராமதாஸ் – அன்புமணி பிரச்சனையால் வன்னியர்களிடையே இரண்டு கோஷ்டிகளாக பிரிந்து நின்று மோதுகிற சூழ்நிலை உருவாகியேவிட்டது என்பதுதான் பெரும் துயரம்.
ஆக, பாமக டூ வன்னியர் சங்கமா?
அப்படித்தான் இனி மோதல் போகும் போல.. பாமகவுக்கு தாய் அமைப்பு வன்னியர் சங்கம்தான். வன்னியர் சங்கத்தின் பெரும்பாலான நிர்வாகிகள், இப்போதும் டாக்டர் ராமதாஸ் பக்கமே இருப்பதாகவும் நாம் சொல்லி இருந்தோம்.
வன்னியர் சங்கத்தின் தலைவராக இருந்த காடுவெட்டி குருவின் கடைசி நாட்களில் அன்புமணி அலட்சியம் காட்டியதால்தான் மரணமடைந்தார் என்கிற கோபம், வன்னியர் சங்க நிர்வாகிகளிடம் இருக்கிறது. இந்த கோபத்தைதான் திண்டிவனத்தில் அன்புமணிக்கு எதிராக வெளிப்படுத்தி இருக்கின்றனர் வன்னியர் சங்கத்தினர்.
“திண்டிவனம் முதல் கிருஷ்ணகிரி வரை வன்னியர் சங்க அலுவலகங்களில் எல்லாம் இனி இதேபோல பிரச்சனை பூதாகரமாக வெடிக்கும்.. இதுதான் விபரீதங்களை கொண்டுவரப் போகிறது” என்கின்றனர் பாமகவின் சீனியர்கள்.
சரி.. பாமகவில் இருந்து நீக்கப்பட்ட பின் அன்புமணி நிகழ்ச்சிகளுக்கு வரவேற்பு எப்படி?
பொதுவாக, இந்த மாதிரி சலசலப்புகள், சர்ச்சைகள் ஒரு கட்சியில் ஏற்பட்டால், இரண்டு பக்கமும் தொண்டர்கள் அணி திரள்வது வழக்கமானதுதான்.. பாமக விவகாரத்தில் இதுவும் தலைகீழ்தான்.. அன்புமணியின் கூட்டங்களில் முன்பு இருந்த உற்சாகம் கரைபுரண்டோடவில்லை. இளைஞர்களின் சாகசங்கள் நடப்பது இல்லை. ஏதோ நாங்களும் வந்தோம்.. கலந்துகிட்டோம் என ‘சுரத்தே’ இல்லாத தொனியில்தான் அன்புமணியின் கூட்டங்கள் நடக்கிறது என்கின்றன நம் களத் தகவல்கள்.
அன்புமணி மீது அதிருப்தியில் அல்ல.. பெருங்கோபத்தில்தான் ராமதாஸும் அவரது ஆதரவாளர்களும் உள்ளனர். இந்த பெருங்கோபத்தை யாராவது ‘உசுப்பிவிடும்’ வகையில் பேசினாலோ, தூண்டினாலோ மோசமான சம்பவங்கள் நடக்கக் கூடும் என போலீசாரும் வடதமிழ்நாட்டில் ரொம்பவே முன்னெச்சரிக்கையாக கண்காணித்து வருகின்றனராம் என ‘அலாரமடித்தபடியே’ டைப் செய்துவிட்டு ஆப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.