நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான திரைப்படம் ‘அமரன்’. இந்தத் திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும், விமர்சன ரீதியாக மிகுந்த பாராட்டுகளும் கிடைத்து வருகிறது. இந்த நிலையில், தற்போது இப்படக்குழுவை நடிகர் ரஜினிகாந்த் நேரில் அழைத்து பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பில் இருந்த நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, தயாரிப்பாளர் மகேந்திரன், ஒளிப்பதிவாளர் சாய் உள்ளிட்டோர் ரஜினிகாந்தோடு இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், நடிகர் கமல்ஹாசனுக்கும் இத்தகைய திரைப்படத்தை தயாரித்ததற்கு தொலைபேசி வாயிலில் வாழ்த்துகளை ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தத் திரைப்படத்தை சிவகார்த்திகேயன், ராஜ்குமார் பெரியசாமியுடன் அமர்ந்து நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்தும் காணொலியும் வைரலாகி வருகிறது. அந்தக் காணொலியில், ‘நேற்று தான் ‘அமரன்’ படம் பார்த்தேன். இத்தகைய படத்தை தயாரித்த கமல்ஹாசனை எவ்வளவு பாராட்டினாலும் பத்தாது. நினைத்ததை விட மிக சிறப்பாக இயக்கியுள்ளார் ராஜ்குமார் பெரியசாமி. எத்தனையோ ராணுவம் பற்றிய திரைப்படங்கள் வந்துள்ளன. ஆனால், இந்தப் படத்தின் படக்குழுவின் வேலை மிக அருமையாக உள்ளது.
சிவகார்த்திகேயன் முகுந்தாகவே வாழ்ந்துள்ளார். இது அவரது திரைவாழ்விலேயே மிக முக்கியமான திரைப்படம். அதே போன்று தான் சாய் பல்லவியும். இந்தப் படம் முடியும் போது என்னால் அழுகையை அடக்கவே முடியவில்லை. மேலும், இந்தப் படம் எனக்கு இன்னும் நெறுக்கமானதற்குக் காரணம், எனது சகோதரர் கொஞ்ச காலம் ராணுவத்தில் பணிபுரிந்தவர். அப்போது சீனப் போரில் அவரும் குண்டடி பட்டுப் படுகாயமடைந்திருக்கிறார். இந்தப் படத்தை பார்க்கும் போது இந்தியன் என்கிற ஸ்பிரிட் நம்மிடத்தில் வருகிறது. அவசியம் அனைவரும் இந்தப் படத்தை பார்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்’ என நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ளார்.
மறைந்த இந்திய ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையில் இருந்த காதல், ராணுவ ஆப்பரேஷன்கள், இழப்பு, வீர மரணம் உள்ளிட்டவைகளை மையமாகக் கொண்டு தயாராகியுள்ள இந்தத் திரைப்படத்தின் முதல் திரையிடல் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் திரையிடப்பட்டது. படத்தைக் கண்ட முதலமைச்சர், கிளைமாக்ஸ் காட்சியில் தான் கலங்கியதாகவும், இதுபோன்ற தமிழ்நாடு வீரர்களைப் பற்றிய கதைகள் வரவேண்டும் என்றும் தெரிவித்தார்.
இந்த வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் முகுந்தின் மனைவி இந்து ரெபெக்கா வர்கீஸாக சாய் பல்லவி, சிப்பாய் விக்ரம் சிங்காக புவன் அரோரா, முகுந்தின் மேல் ராணுவ அதிகாரியான அமித் சிங் தபாஸாக ராகுல் போஸ், முகுந்தின் அம்மாவாக கீதா கைலாசம் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் வெளியான முதல் நாளில் மட்டும் சுமார் ரூ.42.3 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
– ஷா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…