உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் நூற்றாண்டுகால பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளை (டிசம்பர் 6) ’வீரமிக்க நாளாக’ கொண்டாட வேண்டும் என்று ராஜஸ்தான் மாநில பாஜக அரசின் கல்வித்துறை பிறப்பித்த உத்தரவு பெரும் சர்ச்சையானது. இதனையடுத்து இந்த உத்தரவை திரும்பப் பெற்றது ராஜஸ்தான் பாஜக அரசு.
அயோத்தியில் 500 ஆண்டுகளுக்கும் மேலாக பாபர் மசூதி இருந்து வந்தது. ஆனால் கடவுள் ராமர் பிறந்த இடம் இதுதான் எனக் கூறி இந்துத்துவா அமைப்பினர் 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந் தேதி பாபர் மசூதியை இடித்து தகர்த்தனர். இதனால் நாடு முழுவதும் மிகப் பெரும் மத மோதல்கள் நிகழ்ந்தன. இதன் தொடர்ச்சியாக உலகை உலுக்கிய மும்பை தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன.
இந்தியாவில் இன்றும் சிறுபான்மை மக்களின் ஆறாத ரணமாக பாபர் மசூதி இடிப்பு சம்பவம் இருந்து வருகிறது. தற்போது பாபர் மசூதி இருந்த இடத்தில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி பிரம்மாண்டமான ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 6-ந் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளன்று இஸ்லாமிய அமைப்புகள் கண்டனப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் ராஜஸ்தான் மாநில பாஜக அரசின் கல்வித் துறை, டிசம்பர் 6-ந் தேதியை வீரமிக்க நாளாக பள்ளிகளில் கொண்டாட வேண்டும் என உத்தரவிட்டது. இது மிகப் பெரும் சர்ச்சையானது. இதனால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சில மணிநேரங்களிலேயே ராஜஸ்தான் பாஜக அரசு பின்வாங்கி உத்தரவை திரும்பப் பெற்றது.
