கோவையில் காவல் நிலையத்தில் ஒருவர் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் பேரூர் அருகே சாமிசெட்டிபாளையம் காமராஜர் நகர் பட்டத்தரசி அம்மன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் அம்மாவாசை.
இவரது மகன் ராஜா என்கிற அறிவொளி ராஜா (55). திருமணமாகாதவர். தனது வயதான தாயார் மற்றும் சகோதரி வீரமணியுடன் வசித்து வந்தார். சென்ட்ரிங் (கட்டிடப் பணி) வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று (ஆகஸ்ட் 5) காலை முதல் குடிபோதையில், யாரைப் பார்த்தாலும் தன்னை கொல்ல வருவதாக சத்தம் போட்டு கத்திக்கொண்டே இருந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் ஜேஎம் 1 நீதிமன்றத்துக்குள் நேராக சென்று, ‘என்னை கொலை செய்ய வருகிறார்கள்’ என்று கத்தி சத்தம்போட்டதால், அங்கிருந்த போலீசார் வெளியே ஓடி பார்த்துள்ளனர்.
ஆனால் சந்தேகிக்கும் படி யாரும் இல்லை.
இந்த நிலையில் பேரூர் கோர்ட் போலீஸ் ஒருவர், ராஜாவை அழைத்து, சாப்பிடுவதற்கு கையில் காசு கொடுத்து சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளார்.
எனினும் குடிபோதையில் இருந்த ராஜா, பேருந்துகளில் ஏறி சிறிது தொலைவு பயணிப்பதும் இறங்குவதுமாக இருந்துள்ளார்.
இந்த நிலையில் தான் பெரிய கடை காவல் நிலையத்தில் உள்ள எஸ்.ஐ அறையில் தூக்கில் தொங்கியவாறு ராஜாவின் உடல் மீட்கப்பட்டது.
இதுகுறித்து கோவை மாநகர காவல்துறை வட்டாரத்தில் நாம் விசாரித்த போது, “நேற்று இரவு 11.19 மணியளவில் பெரிய கடை வீதி காவல் நிலையத்துக்கு, ‘ என்னை வெட்ட வருகிறார்கள்… காப்பாற்றுங்கள்…’ என்று கத்திக்கொண்டே ராஜா ஓடி வந்தார். அங்கிருந்த சென்ட்ரி போலீஸ் செந்தில், வெளியே ஓடிப் போய் பார்த்தபோது யாரும் இல்லை.
இருந்தும், என்னை வெட்ட வருகிறார்கள் என்று ராஜா சொல்லிக்கொண்டே இருந்ததால், உனக்கு பயமாக இருந்தால் காவல் நிலையத்துக்குள்ளேயே உட்காரு என்று சொல்லி இருக்கிறார் சென்ட்ரி போலீஸ் செந்தில்.
ஆனால் ராஜா காவல் நிலையத்துக்கு வெளியே சென்று காம்பவுண்ட் சுவர் அருகே கீழே உட்கார்ந்துள்ளார்.
அப்போது மைக் அட்டென் செய்யவும், போனில் பேசவும் சென்ட்ரி போலீஸ் செந்தில் காவல் நிலையத்துக்குள் சென்றதும்,
அந்த நேரத்தில் வெளியில் உட்கார்ந்திருந்த ராஜா முதல் மாடியில் உள்ள உதவி ஆய்வாளர் அறைக்கு சென்று, கதவை மூடிவிட்டு, எஸ்.ஐ டேபிளில் ஏரி மின்விசிறியில் தான் உடுத்தியிருந்த வேஷ்டியை மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த சூழலில் இன்று காலை 8 மணிக்கு காவல் நிலையத்துக்கு வந்த எஸ்.ஐ, ரோல்கால் (போலீசாரின் ஆஜர் அணி வகுப்பு) நடத்திவிட்டு மேலே உள்ள தனது அறைக்கு சென்றார்.
அப்போது அந்த அறையின் கதவை திறக்க முடியவில்லை. இதனால் கதவை உடைத்து விட்டு உள்ளே சென்று பார்த்த போது, ராஜா தூக்கில் தொங்கியவாறு இருந்து கிடந்தார். இது தொடர்பாக உயரதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்’ என்றனர்.
கோவை காவல் ஆணையர் சரவணன் சுந்தர் பத்திரிகையாளர்களை சந்தித்து கூறுகையில், ‘ சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது அந்த நபர் பேருந்தில் வந்து இறங்கியுள்ளார். பின்னர் போத்தீஸ் கார்னர் பகுதிக்கு சென்றுள்ளார்.
அவர் பத்து நாட்களாகவே மன அழுத்தத்தில் இருந்ததாக அவரது குடும்பத்தினரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்தது. நீதிபதி விசாரணை நடத்திய பின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
சம்பந்தப்பட்ட காவலர்கள், பணியின் போது அலட்சியமாக இருந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இதை லாக்கப் டெத் என சொல்ல முடியாது. இறந்தவர் மீது ஏதேனும் வழக்கு உள்ளதா என்பதை இனி தான் பார்க்க வேண்டும் ‘ என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து இரவு பணியில் இருந்த போலீஸ் செந்தில்குமார் மற்றும் அறையை பூட்டி செல்லாத உதவி ஆய்வாளர் நாகராஜ் ஆகிய இருவரையும் ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.
ராஜா, நேற்று காலை முதல் நீதிமன்றத்துக்கும், காவல்நிலையத்துக்கும் ஓடிய போதே, பணியில் இருந்த போலீசார் அவரை பிடித்து காவல்நிலையத்தில் வைத்துக்கொண்டு உறவினர்களுக்கு தகவல் தெரிவித்திருந்தாலோ அல்லது அருகில் உள்ள மனநல மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருந்தாலோ இந்த சம்பவத்தை தவிர்த்திருக்கலாம்.