மடத்துகுளம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. மகேந்திரனுக்கு சொந்தமான தோட்டத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் (சப் இன்ஸ்பெக்டர்) சண்முகவேல் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மடத்துகுளம் அதிமுக எம்.எல்.ஏ. மகேந்திரனுக்கு சொந்தமான தோட்டம் குடிமங்கலம் பகுதியில் உள்ளது. இந்த தோட்டத்தில் வேலை செய்து வந்த தந்தை மற்றும் மகனுக்கு இடையே குடிபோதையில் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. இந்த தகராறு குறித்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அவசர உதவி எண் 100-க்கு அழைத்து போலீசாரிடம் தெரிவித்தனர்.
இதனையடுத்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த குடிமங்கலம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல், தமது ஓட்டுநருடன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.
அப்போது தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான மோதலை தடுக்க முயன்ற சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் வெட்டி கொலை செய்யப்பட்டார். மேலும் ஓட்டுநருக்கும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உதவி ஆய்வாளர் சண்முகவேலை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய தந்தை- மகனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
