திருச்செந்தூரில் விடியவிடிய கொட்டித்தீர்த்த கனமழையால் பிரசித்தி பெற்ற முருகன் கோயில் உள் பிரகாரத்தில் மழைநீர் புகுந்ததால் பக்தர்கள் அவதியடைந்துள்ளனர். கடல் பகுதியிலும் கனமழையால் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் நேற்று இரவு 10 மணி முதல் இன்று அதிகாலை 7.30 மணி வரை விடியவிடிய இடி, மின்னலுடன் சுமார் 9 மணி நேரம் கனமழை பெய்தது. குறிப்பாக தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் திருச்செந்தூர், காயல்பட்டினத்தில் தலா 15 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.
விடியவிடிய பெய்த கனமழையால் திருச்செந்தூர் நகர்பகுதி ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. திருச்செந்தூர் முருகன் கோயிலின் உட்பகுதியிலும் மழை நீர் புகுந்தது. சண்முக விலாச மண்டபத்திற்குள் புகுந்த மழை நீரால் பக்தர்கள் அவதியடைந்தனர்.
மேற்கு கோபுர நுழைவு வாயிலின் படிக்கட்டுகள் வழியாக திருச்செந்தூர் கோயிலுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால், தண்ணீரை வெளியேற்றும் பணியில் கோயில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கோவிலுக்கு செல்லக்கூடிய பிரதான சன்னதி தெருவில் மழைநீர் தேங்கியதால் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் அவதியடைந்தனர். மேலும், கனமழையால் கடற்கரை பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது.