தந்தை பெரியாரின் 147-வது பிறந்தநாள் இன்று (செப்டம்பர் 17) கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் இந்த நாள் ‘சமூக நீதி நாள்’ ஆக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து அவருக்கு திருவுருவ சிலைக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி
மகத்தான சீர்திருத்தவாதி தந்தை பெரியாரின் பிறந்தநாளான இன்று அவருக்கு என் பணிவான அஞ்சலிகள். சமூக நீதி, சமத்துவத்தை நிலைநிறுத்த, பெரியார் நம்மை எப்போதும் ஊக்கப்படுத்துவார்.
காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே
“நமது இலக்கிய மறுமலர்ச்சி சிந்தனைகள் எப்போதும் மூடநம்பிக்கை, இழிவு, அவமரியாதை மற்றும் அறியாமையை அகற்றுவதை மையமாகக் கொண்டிருக்க வேண்டும்.” ~ பெரியார்
சிறந்த சமூக சீர்திருத்தவாதி, சமூக நீதி மற்றும் சமத்துவத்தின் நாயகன் தந்தை பெரியாருக்கு அவரது பிறந்தநாளில் நமது அஞ்சலி.
முதல்வர் மு.க.ஸ்டாலின்
“அறிவு வளர்ச்சிக்கும் சமத்துவத்திற்கும் தடையாக இருப்பவைகளை அழித்திட வேண்டும்” என்றார் தந்தை பெரியார்!
நமது திராவிட மாடல் அரசால் சமூகநீதி நாள் -எனக் கடைப்பிடிக்கப்படும் பெரியாரின் பிறந்தநாளில்,
இந்தியாவின் வளர்ச்சிக்கும் இந்திய மக்களின் ஒற்றுமைக்கும் பெரும் தடையாக இருந்து வரும் சாதிய ஏற்றத்தாழ்வை நீக்கி, அனைவரையும் சமமாக நடத்தி, அனைத்துத் தரப்பினரும் சமவாய்ப்புகள் பெற்ற சமூகமாகத் திகழத் தமிழ்நாடெங்கும் உறுதிமொழி எடுக்கப்பட்டது!
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
கேள்விக்குறியாய் இருந்த தமிழினத்தின் முதுகெலும்பை ஆச்சரியக்குறியாய் மாற்றிய தந்தை பெரியாரின் பிறந்த நாள் இன்று!
ஆக்ஸ்போர்டு வரைச்சென்ற அறிவுச்சுரங்கம் தந்தை பெரியாரின் 147-ஆவது பிறந்த நாளையொட்டி கரூர் மண்ணில் உள்ள அய்யாவின் திருவுருவச்சிலைக்கு மரியாதைச் செலுத்தினோம். கழக முன்னோடிகளுடன் இணைந்து சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்றோம்!
வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

கேரள முதல்வர் பினராயி விஜயன்
பெரியார் பிறந்தநாளில் அவரை நினைவு கூர்கிறோம். சாதிய ஒடுக்குமுறை மற்றும் சமூக அநீதிகளுக்கு எதிரான அவரது இடைவிடாத போராட்டம் தலைமுறை தலைமுறையாக நமக்கு வழிகாட்டுகிறது. பெரியாரின் பகுத்தறிவு, சமத்துவம் மற்றும் சமூக சீர்திருத்தம் ஆகிய கொள்கைகள், நீதி மற்றும் முற்போக்கான சமூகத்திற்கான நமது போராட்டத்திற்குத் தொடர்ந்து உத்வேகம் அளிக்கின்றன.
கர்நாடக முதல்வர் சித்தராமையா
திராவிட இயக்கத்தின் தந்தை, சாதி ஒடுக்குமுறை மற்றும் ஆணாதிக்கத்திற்கு எதிரான அச்சமற்ற போராளி ஈ.வி. ராமசாமி ‘பெரியார்’ (1879-1973) அவர்களை அவரது பிறந்தநாளில் போற்றுகிறோம்.
சமத்துவம், பகுத்தறிவு மற்றும் சமூக நீதி பற்றிய அவரது தொலைநோக்குப் பார்வை தலைமுறைகள் மற்றும் பிராந்தியங்களில் கண்ணியம் மற்றும் விடுதலைக்கான இயக்கங்களைத் தொடர்ந்து ஊக்குவிக்கிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
கேள்விகள் கேட்டு பகுத்தறிவை விதைத்தார்!
உணர்வுகளைத் தட்டி உழுப்பி உரிமைக்காக போராடினார்!
சமத்துவ சமுதாயம் காண வயது கூடினும் தளராமல் உழைத்தார்!
யாருக்கும் யாரும் சிறியார் அல்ல என்றார்!
அதனாலே அவர் நம் பெரியார் என்றானார்!
பகுத்தறிவுப் பகலவனின் பிறந்தநாளில், அவர் வகுத்த சமூகநீதிப் பாதையில் என்றும் பயணித்து, உண்மையான சமத்துவ ஆட்சியை அதிமுக தலைமையில் 2026-ல் அமைத்திட உறுதியேற்போம்!
வாழ்க பெரியாரின் புகழ்!
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 147-வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று (17.09.2025) சென்னை சத்தியமூர்த்தி பவனில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினேன்.

சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்
தந்தை பெரியார் அவர்களின் 147 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அண்ணாசாலையில் உள்ள சிலைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
தந்தை பெரியாரின் 147-ஆவது பிறந்தநாளையொட்டி, சென்னை பெரியார் திடலில் உள்ள தந்தை பெரியார் நினைவிடத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
அன்புமணி ராமதாஸ்
“பகுத்தறிவு பகலவன்” தந்தை பெரியார் அவர்களின் 147-வது பிறந்தநாளை முன்னிட்டு, விழுப்புரத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு, மாலை அணிவித்து, புகழ் வணக்கம் செலுத்திய போது.!

தவெக தலைவர் விஜய்
பெண்கள் முன்னேற்றம்
சுயமரியாதை
பகுத்தறிவுச் சிந்தனை
சமூக சீர்திருத்தக்கொள்கை
வகுப்புவாரி பிரதிநிதித்துவம்
போன்ற சீர்திருத்த சிந்தனைகள் வாயிலாக நம் மக்களுக்காக உழைத்த எம் கொள்கைத் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் பிறந்ததினமான இன்று சென்னை பனையூரில் உள்ள, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை நிலையச் செயலகத்தில், அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.