டிரம்பின் H-1B விசா உத்தரவைத் தொடர்ந்து மோடியை ‘பலவீனமான பிரதமர்’ என்று மீண்டும் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.
H-1B விசா திட்டத்தை துஷ்பிரயோகம் செய்வது ஒரு தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் என்று தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், H-1 B விசாவுக்கான ஆண்டுக் கட்டணம் 1,00,000 டாலராக (இந்திய மதிப்பில் ரூ.88 லட்சம்) உயர்த்தி அதற்கான உத்தரவில் கையெழுத்திட்டார். இதன்மூலம் அமெரிக்காவுக்கு செல்லும் இந்திய பணியாளர்களுக்கு பேரிடி விழுந்துள்ளது.
டிரம்பின் இந்த உத்தரவை அடுத்து மோடியை ‘பலவீனமான பிரதமர்’ என்று காங்கிரஸ் கடுமையாக தாக்கியுள்ளது.

மக்களவையில் காங்கிரஸ் துணைத் தலைவர் கௌரவ் கோகோய் தனது எக்ஸ் பக்கத்தில், “H1-B விசாக்கள் குறித்த சமீபத்திய உத்தரவின் மூலம், அமெரிக்க அரசாங்கம் இந்தியாவின் சிறந்த மற்றும் பிரகாசமான எதிர்காலத்தைத் தாக்கியுள்ளது.
அமெரிக்காவில் ஒரு ஐஎஃப்எஸ் பெண் தூதர் அவமதிக்கப்பட்டபோது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காட்டிய துணிச்சலை நான் இன்னும் நினைவில் வைத்திருக்கிறேன். ஆனால் தற்போது பிரதமர் மோடியின் மௌனம் இந்திய குடிமக்களின் தேசிய நலனுக்கு எதிராக மாறியுள்ளது” என்று விமர்சித்தார்.
கடந்த 2017ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் பிரதமர் மோடி இடையேயான பேச்சுவார்த்தைகளில் H-1B விசா பிரச்சினை இடம்பெறவில்லை என்ற ஊடக அறிக்கையை சுட்டிக்காட்டி, அப்போது ’இந்தியாவின் பலவீனமான பிரதமர் மோடி’ என விமர்சித்திருந்தார் ராகுல்காந்தி.
தற்போது H-1B விசா கட்டணம் ரூ.88 லட்சமாக உயர்த்தப்பட்டதை அடுத்து, தனது பழைய பதிவினையும் டேக் செய்து பிரதமர் மோடியை, ’இந்தியாவின் பலவீனமான பிரதமர்’ என மீண்டும் அதே வார்த்தையைக் கூறி விமர்சித்துள்ளார் ராகுல்காந்தி.