இதெல்லாம் பேசல சரி; ஆனா அதெல்லாம் பத்தி பேசியதா “ராட்ட”?

Published On:

| By Minnambalam Desk

விஜய் நடித்த வாரிசு படத்தின் விழாவில் அதன் தயாரிப்பாளர் தில்ராஜு, தெலுங்கு வாசனை கலந்த தமிழில் ”இந்த படத்தில் பாட்டு இரிக்கி….. ஃபைட் இரிக்கி….. டான்ஸ் இரிக்கி….. காமெடி இரிக்கி….. செண்டிமெண்ட் இரிக்கி….. என்று பேசியது பெரிய வைரல்.. (விஜய்க்காக ஓடினால் கூட வாரிசு படம் ஓர் ஊசிப் போன பழைய வரிக்கி என்பது வேறு விஷயம்.)

யாராவது எங்காவது புது இடத்தில் போய் கல்லூரியிலோ ஸ்கூலோ காட்டினால் உடனே பக்கத்தில் உள்ள நிலத்தை பிளாட் போட்டு விற்பவர்கள் எங்க கிட்ட ஸ்கூல் இருக்கு காலேஜ் இருக்கு. என்பார்களே .. அப்படி தில் ராஜு பேசியதை வைத்து பலரும் சினிமா நிகழ்சசிகளில் காமெடி செய்து விளம்பரம் தேடிக் கொண்டார்கள்.

ADVERTISEMENT

அதன் விட்ட குறை தொட்ட குறையாக தலைகீழாக யோசித்து விளம்பரம் செய்து இருக்கிறது ஒரு படக் குழு.

சிவசக்தி பிரபு எழுதி இயக்கி நடிக்கும் படம் ‘ராட்ட’.

ADVERTISEMENT

இந்தப் படம் பற்றிய அறிமுகத்தில்

”இந்த படத்தில் அரசியல் பேசல.. ஆன்மீகம் பேசல … ஜாதி மதம் பேசல … வன்முறை பேசல… மது போதை பீடி சிகரெட் கலாச்சார சீர் கேட்ட பேசல…

ADVERTISEMENT

சண்டை சச்சரவை பேசல.. போலீஸ் அடிதடி பேசல.. துப்பாக்கி கத்தி இதுபோன்று ஆயுதம் பேசல…ரத்தம் தெறிக்கல… கொலை கொள்ளை கற்பழிப்பு பேசல….

ஆனால்…வாழ்வியலை நயம்பட பேசி தற்போதுள்ள வாழ்க்கை நெறிமுறையை யதார்த்தமான திரைக்கதையில்காட்டும் திரைப்படம்தான் “ராட்ட”

எந்தத் தவறையும் காட்டாத திரைப்படங்களுக்கு பெருமளவில் மக்களும், மீடியாக்களும் குரல் கொடுத்து ஆதரிக்க முன்வர வேண்டும் என வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்” என்கிறார் சிவசக்தி பிரபு.

அப்படியே ஷாக் ஆக இருந்தது.

ஜாதி மதம் வன்முறை போதைப் பொருள் வரிசையில் அரசியலா?

அரசியல் புரிதல் அவ்வளவு பெரிய தப்பா? அரசியல் என்பது கொலை கொள்ளை கற்பழிப்பா என்ன? எதில் அரசியல் இல்லை.

இது இங்கே எழுதப் படுவதற்கும் இதை நீங்கள் படிப்பதற்கும் பின்னால் கூட நம் யாருக்குமே தெரியாத ஒரு அரசியல் கூட இருக்கலாம்.

அப்படி இருக்க வேண்டத்தகாத விஷயம் போல் கருதும் மடமை இங்கே வளர்ந்து இரண்டு தலைமுறைகளே மூடர் கூடங்களாகப் போய் விட்டதன் விளைவு இந்த மண்ணுக்கான அரசியலில் நம்மவர்கள் யார் ? எதிரிகள் யார்? துரோகிகள் யார் என்பதே தெரியாமல் போய் விட்டது.

எனவே இந்தப் படத்தின் இயக்குனருக்கு அரசியல் குறித்த புரிதலும் இல்லை என்பது புரிகிறது.

கலையிலும் அரசியல் உண்டு. ஒரு பொருளின் விலையிலும் அரசியல் உண்டு. ஒரு விஷயத்தின் பின்னால் இருக்கும் அரசியல் புரியாத சமூகம் யாருக்கோ அடிமையாகும். யாருக்கு வேண்டுமானாலும் அடிமையாகும்.

இதெல்லாம் போகட்டும்.

என்ன என்ன பேசல என்று இந்தப் படக் குழு சொன்னது.

ஆனா ஒரு படத்துக்கு நல்ல கதை பேசணும். நல்ல திரைக்கதை பேசணும். நல்ல வசனம் பேச ணும். ரசிகர்ளுக்குப் பிடிக்கும் பாடல், நல்ல இயக்கம், சிறப்பான நடிப்பு இதெல்லாம் இருக்கான்னு பேசணும். . .

இது பேசலன்னா.. அதெல்லாம் பேசாமல் இருந்தாலும் பயன் இல்லே. அப்புறம் படம் வந்த பிறகு படம் பற்றி யாரும் பேசல என்று ஆகி விடும்.

  • ராஜ திருமகன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share