ஹரிஷ் காரே
அரசியல் களத்தில் அர்த்தமற்ற வெற்றிகளுக்குப் பழக்கப்பட்ட ஒரு தேசத்திற்கு, இந்திய அணியினர் இப்போது உண்மையான வெற்றியை அளித்திருக்கிறார்கள்.
ஓவல் மைதானத்தில் இந்தியக் கிரிக்கெட் அணியின் வெற்றி, நாடு முழுவதும் ஏற்படுத்திய மகிழ்ச்சிப் பெரு வெள்ளம், நல்ல செய்திகளுக்கும் உண்மையான வெற்றிகளுக்கும் ஒரு தேசம் எவ்வளவு ஏங்கி நிற்கிறது என்பதைக் காட்டுகிறது. கிரிக்கெட் இந்தியா முழுவதும் வெறித்தனமான ஆர்வத்திற்கான ஆதாரமாக இருந்துவருகிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இதற்கு முன்பு ஒரு டெஸ்ட் தொடர் ‘டிரா’ ஆனது, இந்திய அணியின் வெற்றியாகக் கருதப்பட்டதில்லை., அணியின் திறமை, நிதானம், தன்னம்பிக்கை, தலைமைத்துவம் ஆகியவற்றின் சரியான கலவையால் இது சாத்தியமாகியிருக்கிறது. தேசப்பற்றை நியாயமான முறையில் தூண்டும் தருணமாக இது அமைந்துள்ளது.
உண்மையான, நியாயமான வெற்றி

ஐந்தாவது டெஸ்டில் இங்கிலாந்து மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராகப் பெற்ற இந்த உத்வேகமான வெற்றி குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றி பாகிஸ்தானுக்கு எதிராகப் பெறப்பட்டது அல்ல என்பதையும் நாம் சுட்டிக்காட்ட வேண்டும். பாகிஸ்தானுடனான போட்டி, நமது உள்ளார்ந்த சார்புகளை அளவுக்கு அதிகமாகத் தூண்டுகிறது. ஆனால், இந்தியா-இங்கிலாந்து தொடர், விளையாட்டின் நிறுவப்பட்ட விதிகளின்படி, உண்மையான கிரிக்கெட் உணர்வுகளுடன் நடந்த போட்டி. இதில் கிடைத்திருப்பது உண்மையான, நியாயமான வெற்றி.
இதில் இரண்டு புதிய கதாநாயகர்கள் கிடைத்துள்ளனர்: ஷுப்மன் கில், முகமது சிராஜ். கில், துடிப்பான விராட் கோலியைப் போன்றவர் அல்ல. அமைதியான, நிதானமான தலைமைத்துவத்தின் குணங்களைச் சித்தரிக்கிறார். சிறந்த அணித்தலைவர்களில் ஒருவரான பென் ஸ்டோக்ஸை எதிர்த்துப் போராடிய கில் நமது பாராட்டுக்கு உரியவராகிறார்.
கில்லின் தலைமைத்துவம், அவரது தன்னம்பிக்கைக்காக மட்டுமல்லாமல், வெற்றியின் பெருமையை அணியின் சக வீரர்களுடன் பகிர்ந்துகொள்வதாலும் பாராட்டப்படுகிறது. அவர் தனி ஆளாக இருந்து இதைச் சாதிக்கவில்லை. ஆனால் நிதானமான, வெளிச்சம் விரும்பாத, அமைதியான அதிகாரம் அவரிடத்தில் திறம்படச் செயல்பட்டது.
இளம் நாயகனும் மூத்த தலைவர்களும்

கில்லின் நிதானமான தலைமைத்துவத்தை ரசிக்கும்போது, நமது நாட்டின் இரண்டு “தலைவர்களான” நரேந்திர மோடி, ராகுல் காந்தி ஆகியோர்மீது ஒருவித ஏமாற்றம் ஏற்படுகிறது. மோடி அதிகம் அறிமுகமானவர், அதிகம் வெளிப்பட்டவர், அதிகத் தன்னம்பிக்கை கொண்டவர், அதிக சாமர்த்தியம் உள்ளவர் என்ற தோற்றம் நிலவுகிறது. அவருடைய ஒவ்வொரு தந்திரமும் இப்போது நாட்டுக்குத் தெரியும். ஒருகாலத்தில் மக்களை மயக்கிய அவரது பேச்சு இப்போது பழையதாகவும் எரிச்சலூட்டுவதாகவும் உணரச்செய்கிறது. அவர் நியாயமான போட்டியில் உண்மையான வெற்றியாளராகக் கருதப்படவில்லை. அவ்வப்போது தவறான வழிகளை நாடுவதன் மூலம் தனது தலைமைத்துவ ஆதிக்கத்தை நிலைநிறுத்துபவராகக் காணப்படுகிறார். தனது ஆதரவாளர்களுக்கு மட்டுமே திருப்தியை அளிக்கிறார். இதற்கு மாறாக, கில்லின் தலைமைத்துவம் அனைத்து பிளவுகளுக்கும் அப்பால் அனைவராலும் பாராட்டப்படுகிறது.
இந்தியாவின் கேப்டனாக கில்லின் முதல் டெஸ்ட் தொடர் தலைமைத்துவ முயற்சி, அரசியல் பிரிவின் மறுபுறத்தில் உள்ள ராகுல் காந்தியின் இயல்புக்கும் மாறானது. காங்கிரஸ் தலைவர் தனது அதிகச் செருக்கு, அளவுக்கு அதிகமான போர்க்குணம், தேவையை மீறிய தனித்துவமான முயற்சிகள் ஆகியவற்றால் தனது ஆதரவாளர்களையும் ஆதரவாளர்களாக இருக்கக்கூடியவர்களையும் தொடர்ந்து ஏமாற்றிவருகிறார். கில் கடின உழைப்பு, பயிற்சி, செயல்திறன் ஆகியவற்றுக்குப் பிறகு கேப்டன் பதவிக்கு வந்துள்ளார்; மட்டைவீச்சிலோ தலைமையிலோ தோல்வியடைந்தால், இன்னொருவருக்கு வழிவிட்டு விலக வேண்டியிருக்கும் என்பதை அவர் அறிவார். ராகுல் காந்தியின் நிலை அப்படி அல்ல. எது நடந்தாலும் காங்கிரசின் அதிகாரம் அவரிடம்தான் இருக்கும். அதனால்தான், கில்லின் தலைமைத்துவ வெற்றி மிகவும் அமைதியானதாகவும் திருப்திகரமானதாகவும் தோன்றுகிறது.
இரண்டாவது நாயகன் முகம்மது சிராஜ்

தொடரின் இரண்டாவது நாயகனான முகமது சிராஜ், நமது தேசியப் பயணத்தின் தற்போதைய நிலையில் மாறுபட்ட உணர்ச்சிகளை ஏற்படுத்த உதவுகிறார். அவர் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது ஒன்றும் ரகசியம் அல்ல. கடந்த பத்தாண்டுகளாக, இச்சமூகத்தினர் கேலிக்கும் சந்தேகத்திற்கும் உள்ளாக்கப்பட்டனர். நாட்டின் செய்தித்தாள்கள், தொலைக்காட்சி சேனல்கள், பிற விவாதத் தளங்கள் சாதகமான கண்ணோட்டத்தில் முஸ்லிம் பெயரைக் குறிப்பிடுவது மிகவும் அரிதாகிவிட்டது. நமது தேசிய உணர்வு, வரலாறு ஆகியவற்றிலிருந்து 14 கோடி மக்களைக் கொண்ட ஒரு சமூகத்தை வெளியேற்ற முயற்சிக்கும் அரசியலைச் செய்துள்ளோம்.
இந்தச் சூழல்தான் சிராஜின் புதிய நிலையை நிதானமான சுய பரிசோதனைக்கு உட்படுத்துகிறது. அனுபவமிக்க கிரிக்கெட் விமர்சகர்கள் ஏற்கனவே அவரது சகிப்புத்தன்மை, தொடர்ந்து ஓவர்களை வீசுவதில் அவருக்கு இருக்கும் அயராத விருப்பம், எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும் அதை மீறத் துடிக்கும் அவரது விடாமுயற்சி முதலானவற்றைப் பாராட்டியுள்ளனர். வெறும் விடாமுயற்சியான செயல்திறன் மூலம், ஒரு இளம் முஸ்லிம் நமது தேசிய உணர்வுக்குள் நுழைந்துள்ளார். நமது அரசியல் உடலுக்குள் புகுத்தப்பட்ட சகிப்பின்மை, மதவெறி வைரஸ்களுக்கு இது ஒரு அற்புதமான மாற்று மருந்து.
ஒரு கிரிக்கெட் போட்டி தேசிய நிகழ்வாக மாறுகிறது. சமூகம் நல்ல செய்திகளுக்காகக் கூட்டாக ஏங்குகிறது. கடந்த பல ஆண்டுகளாக நாம் உருவாக்கிய மற்ற கவனச்சிதறல்கள் – பிளவுபடுத்தும் அரசியல், மொழிப் போர்கள், ஊழல் எதிர்ப்பு, பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்கள் போன்றவை – நம்மைப் போதுமான அளவில் உற்சாகமூட்டுவதில்லை.
போர்க்களமும் ஆடுகளமும்

உணர்ச்சிபூர்வமான உற்சாகத்தின் அடிப்படையில், ஓவல் வெற்றியை, பாகிஸ்தானுடனான சமீபத்திய நான்கு நாள் “போருடன்” ஒப்பிடலாம், அது மிகைப்படுத்தப்பட்டதாக இருந்தாலும். பாகிஸ்தானுடனான முந்தைய மோதல்களில் போலல்லாமல், ஆபரேஷன் சிந்துார் நீடித்த உற்சாகத்தை உருவாக்கத் தவறிவிட்டது. ஏனெனில் இதில் வீரர்கள் ஈடுபடவில்லை, போர்க்களத்தில் கதாநாயகர்கள் இல்லை; எதிரியின் முன்னிலையில் வெளிப்பட்ட வீரம், தைரியம், புத்திசாலித்தனத்தின் கதைகள் இல்லை; கிராமங்கள், நகரங்களில் போர் தொடர்பான உணர்வுகள் ஏதும் பிரதிபலிக்கவில்லை. தொலைக்காட்சி சேனல்கள் சொன்னதை (அல்லது கண்டுபிடித்ததை) அல்லது நமது தலைவர்கள் நமக்குச் சொன்னதைத் தவிர, நேரடியாகக் காணக்கூடிய தோல்வி அல்லது வெற்றி எதுவும் இல்லை. நாம் “வெற்றி” என்று உரிமை கோரியுள்ளோம்; ஆனால் “தோற்கடிக்கப்பட்ட” பாகிஸ்தானும் தான் வெற்றிபெற்றதாகக் கூறுகிறது.
இதற்கு மாறாக, கோடிக்கணக்கான வீடுகளில் இந்தியர்கள் தங்கள் தொலைக்காட்சித் திரையில் விளையாட்டைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். எந்த அரசியல் தூண்டுதலும் இதில் இல்லை. முகமது சிராஜ் மேலும் ஒரு விக்கெட்டை எடுக்க ஓடத் தொடங்கும் ஒவ்வொரு முறையும் ஒருவித உற்சாக உணர்வை மக்கள் உணர்ந்தனர். நாம் வென்றோம், தோல்வியடைந்தவர்கள் நமது வெற்றியை ஒப்புக்கொண்டனர். யாருக்கு வெற்றி என்பது குறித்து எந்த விவாதமும் இல்லை. இது கண்கூடான, உண்மையான, தூய்மையான வெற்றி.

நமது கிரிக்கெட் அணியின் செயல்திறன் குறித்த கலப்படமற்ற மகிழ்ச்சியின் எழுச்சி இன்றைய சூழலில் மிகவும் ஆறுதலளிப்பதாக உள்ளது. தேசியப் பெருமைக்கும் சாதனைகளுக்கும் குறுக்குவழிகள் அல்லது மறைமுகமான முறைகள் அல்லது மோசமான கணக்கீடுகள் இல்லை என்பதை கில்லும் அவரது அணியும் நிரூபித்துள்ளனர். இந்த நினைவூட்டலுக்காக மட்டுமே, நமது வெற்றியைக் கொண்டாடுவதற்கும், உண்மையான கதாநாயகர்களைப் போற்றுவதற்கும் நமக்கு உரிமை உண்டு.
ஹரிஷ் காரே, அரசியல் விமர்சகர், ‘தி ட்ரிப்யூன்‘ இதழின் முன்னாள் தலைமை ஆசிரியர்.