சிராஜ் பந்துவீச்சில் த்ரில் வெற்றி… சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி சாதனை!

Published On:

| By christopher

india get thrill win at oval and draw the series

INDvsENG 5th TEST : இங்கிலாந்து எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை வெற்றிகரமாக சமன் செய்தது.

இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் நான்கு போட்டிகளின் முடிவில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலை வகித்தது.

ADVERTISEMENT

இதனையடுத்து தொடரை சமன் செய்ய கட்டாயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி, கடந்த ஜூலை 31ஆம் தேதி ஓவல் மைதானத்தில் தொடங்கிய 5வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கியது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 224 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி 247 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

ADVERTISEMENT

இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 396 ரன்கள் குவித்த நிலையில், போட்டியில் வெற்றி பெற 374 ரன்கள் என்ற இலக்கை இங்கிலாந்து அணி பொறுமையாக பேட்டிங் செய்தது.

குறிப்பாக அந்த அணியின் சார்பில் ஜோ ரூட் (105) மற்றும் ஹாரி புரூக்கின் (111) அபார சதம் அடித்து அந்த அணியை வெற்றிக்கு அருகில் கொண்டு சென்றனர்.

ADVERTISEMENT

அதேநேரத்தில் நேற்றைய நாள் முடிவில் இங்கிலாந்து அணி 339 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது. களத்தில் ஜேமி ஸ்மித் (2) மற்றும் ஜேமி ஓவர்டன் (0) களத்தில் உள்ளனர்.

இதனால் கடைசி நாளான இன்று வெற்றி பெற 35 ரன்கள் தேவை என இங்கிலாந்து அணியும், 5 விக்கெட்டுகள் எடுத்தால் வெற்றி என இந்திய அணி வீரர்களும் களமிங்கினர்.

அதன்படி இன்று போட்டி தொடங்கியதும், பிரசித் கிருஷ்ணா வீசிய முதல் ஓவரின் முதல் இரண்டு பந்துகளை பவுண்டரிக்கு விரட்டி அச்சுறுத்தினார் ஜேமி ஓவர்டன்.

ஆனால் சிராஜின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் ஜேமி ஸ்மித் (2), ஜேமி ஓவர்டன் (9) மற்றும் கடைசி நேரத்தில் சிறப்பாக விளையாடிய அட்கின்சன் (17) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.

இதனால் 367 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட் ஆக, 6 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை வென்ற இந்திய அணி தொடரை 2-2 என்ற கணக்கில் வெற்றிகரமாக சமன் செய்தது.

இந்த போட்டியின் மூலம், மிக குறைந்த ரன் வித்தியாசத்தில் (6) இந்திய அணி பெற்ற டெஸ்ட் வெற்றியாக வரலாற்றில் பதிவானது.

மேலும் கடைசி டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளுடன் தொடரில் மொத்தம் 23 விக்கெட்டுகள் கைப்பற்றிய முகமது சிராஜ் ஆட்டநாயகன் விருது வென்றார்.

அதே போன்று இந்த தொடரில் 4 சதங்களுடன் அதிகபட்சமாக 754 ரன்கள் குவித்த சுப்மன் கில் இந்தியா அணிக்கான தொடர் நாயகன் விருது வென்றார். அதே போன்று இங்கிலாந்து அணி சார்பில் ஹாரி புரூக்கிற்கு வழங்கப்பட்டது. அவர் இந்தத் தொடரில் 481 ரன்கள் குவித்து இரண்டாவது அதிக ரன்கள் எடுத்த இங்கிலாந்து வீரராக உள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel