புதுச்சேரி: திமுக- காங்கிரஸ் தொகுதி பங்கீடு.. இன்று 2-ம் கட்ட பேச்சுவார்த்தை

Published On:

| By Mathi

Puducherry

புதுச்சேரியில் திமுக- காங்கிரஸ் இடையேயான முதல் கட்ட தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையில் முடிவு எடுக்கப்படவில்லை. இதனையடுத்து இன்று மார்ச் 15-ந் தேதி 2-வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

தமிழகத்தில் திமுக- காங்கிரஸ் இடையேயான தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையில் மிக நீண்ட இழுபறி ஏற்பட்டது. இதன் பின்னர் காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டசபை தொகுதிகள், 1 ராஜ்யசபா சீட் வழங்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

புதுச்சேரியில் திமுக- காங்கிரஸ் இடையேயான பேச்சுவார்த்தையில் கூட்டணிக்கு யார் தலைமை? என்பதில் திமுக- காங்கிரஸ் தலைவர்களிடையே மாறுபட்ட கருத்துகள் உள்ளன.

புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவையில் மொத்தம் 30 இடங்கள் உள்ளன. பெரும்பான்மைக்கு 16 எம்.எல்.ஏக்கள் தேவை. புதுச்சேரியில் காங்கிரஸ், திமுக இரு கட்சிகளுமே 20 இடங்களில் போட்டியிடுவோம் என அக்கட்சித் தலைவர்கள் கூறி வந்தனர்.

ADVERTISEMENT

இந்நிலையில் திமுக- காங்கிரஸ் கட்சி தலைவர்கள் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்த பரஸ்பரம் அழைப்பு விடுத்து கொண்டிருந்தனர். ஆனால் எந்த இடத்தில் பேச்சுவார்த்தை நடத்துவது என்பதிலும் மாறுபட்ட கருத்துகள் இருந்தன.

இந்நிலையில் புதுச்சேரியில் நேற்று மார்ச் 14-ந் தேதி எஸ்வி படேல் சாலையில் உள்ள சற்குரு ஹோட்டலில் திமுக- காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தை தொடங்கியது.

ADVERTISEMENT

திமுக சார்பில் புதுச்சேரி தேர்தல் ஒருங்கிணைப்பாளர் ஜெகத்ரட்சகன் எம்.பி, மாநில அமைப்பாளர் சிவா, அவைத் தலைவர் சிவக்குமார், சிட்டிங் எம்.எல்.ஏக்கள் கென்னடி, சம்பத், செந்தில்குமார், முன்னாள் எம்.எல்.ஏ மூர்த்தி ஆகியோர் அடங்கிய குழுவும்

காங்கிரஸின் மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி, முன்னாள் முதல்வர் நாராயணசாமி, எம்.எல்.ஏ. வைத்தியநாதன், முன்னாள் அமைச்சர்கள் ஷாஜஹான், கந்தசாமி, கட்சியின் மூத்த தலைவர்கள் தேவதாஸ், அனந்தராமன் ஆகியோரை கொண்ட குழுவும் இப்பேச்சுவார்த்தையை நடத்தின.

இந்தப் பேச்சுவார்த்தையில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை. இதனையடுத்து இன்று 2-வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

2021 சட்டப்பேரவை தேர்தல்

2021 புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக 13 இடங்களில் போட்டியிட்டு 6 இடங்களில் வெற்றி பெற்றது; காங்கிரஸ் கட்சி காங்கிரஸ் 14 இடங்களில் போட்டியிட்டு வெறும் 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

பாஜக கூட்டணி தொகுதி பங்கீடு

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக இடையேயான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை முடிவடைந்துள்ளது. என்.ஆர்.காங்கிரஸ் 16 இடங்களிலும் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 14 இடங்களிலும் போட்டியிட உள்ளன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share