ஐடி துறைக்கு மிகவும் குறைவாகவே நிதி ஒதுக்கப்படுகிறது என்று அந்த துறையின் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டமன்றத்தில் இன்று (ஏப்ரல் 21) தெரிவித்தார். fund allocation it department
சட்டமன்றத்தில் இன்று கேள்வி நேரத்தின்போது கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன் ஜெயசீலன், “எனது கூடலூர் சட்டமன்ற தொகுதியில் வேலைவாய்ப்பினை உருவாக்கி தருவதற்கான எந்த நிறுவனங்களும் இல்லை. எனவே, சிறு தகவல் தொழில்நுட்ப பூங்காவினை அமைத்து தருவதற்கு அரசு முன்வருமா?” என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த ஐடி துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், “இந்த கூட்டத்தொடரிலேயே இந்த அவையில் நான் என்னுடைய துறையில் உள்ள சிக்கல்களை கூறியிருக்கிறேன். நிதி மிகவும் குறைவாக ஒதுக்கப்படுகிறது. மற்ற மாநிலங்களைப் போல் அனைத்து தகவல் தொழில்நுட்ப பூங்காக்களும் எங்கள் துறையின் கீழ் செயல்படுவதில்லை.
ஒரு சிறிய பங்கான ELCOT மட்டும் தான் எங்கள் துறையின் கீழ் செயல்படுகிறது. மீதமுள்ள TIDEL, NEO TIDEL போன்றவை தொழில் துறையின் கீழ் வருகிறது. அது அசாதாரணமான சூழ்நிலையாக இருந்தாலும், அதுதான் 20 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது.
எனவே, யாரிடம் நிதியும், திறனும் அதிகாரமும் இருக்கிறதோ அவரிடம் கேட்டால் அவர் செய்து கொடுப்பார் என்று நான் கருதுகிறேன். எங்களிடம் நிதி இல்லை” என்று தெரிவித்தார்.
அப்போது சபாநாயகர் அப்பாவு, “அமைச்சர் பிடிஆர் இதையெல்லாம் முதல்வர் ஸ்டாலினிடம் பேசி முடிவெடுக்க வேண்டியது. பாசிட்டிவாக பதில் சொன்னால், உறுப்பினர்களுக்கு நன்றாக இருக்கும்” என்று தெரிவித்தார். fund allocation it department