வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணி தொடர்பான அனைத்து கட்சி கூட்டம் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் வரும் 4ம் தேதி தொடங்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கு தமிழகத்தில் ஆளும் திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இது தொடர்பாக விவாதிக்க சென்னை தி.நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் காங்கிரஸ், விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, மக்கள் நீதி மய்யம், தேமுதிக உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட கட்சிகள் பங்கேற்றுள்ளன.
அனைத்து கட்சி கூட்டத்தில் திமுக சார்பில் கே.என்.நேரு, எ.வ.வேலு, என்.ஆர்.இளங்கோ ஆகியோர் பங்கேற்றுள்ளனர். மேலும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன், தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, மநீம தலைவர் கமல்ஹாசன், திக தலைவர் கி.வீரமணி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காதர் மொய்தீன், மமக தலைவர் ஜவாஹிருல்லா, சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், சிபிஐ மாநிலச் செயலாளர் வீரபாண்டியன், தவாக தலைவர் வேல்முருகன் மற்றும் கருணாஸ், நெல்லை முபாரக், தமிமுன் அன்சாரி, கொங்கு ஈஸ்வரன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
அனைத்து கட்சி கூட்டத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.
கூட்டத்தில் பங்கேற்காத கட்சிகள்
அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் தவெக, நாம் தமிழர், தமிழ் மாநில காங்கிரஸ், அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம், இந்திய ஜனநாயக கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்துள்ளன.
