விஜயின் துரோகங்களை தோலுரித்துக் காட்டுவேன் – முன்னாள் மேலாளர் பி.டி. செல்வக்குமார்

Published On:

| By Pandeeswari Gurusamy

விஜய் செய்த அநியாயங்கள், ஏழை ரசிகர்களுக்கு செய்த துரோகங்களைத் தோலுரித்துக் காட்டுவேன் என விஜயின் முன்னாள் மேலாளர் பி.டி.செல்வக்குமார் தெரிவித்துள்ளார்.

திமுகவில் இணைந்த விஜயின் முன்னாள் மேலாளர் பி.டி.செல்வக்குமாருக்கு திமுக வர்த்தக அணியின் துணைச் செயலாளர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாகர்கோயிலில் செய்தியாளர்களிடம் பேசிய செல்வக்குமார்,“திமுகவைப் பொறுத்தவரை விஜயை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. நினைத்திருந்தால் கரூர் சம்பவத்தில் எத்தனையோ வழக்குகள் போட்டு உள்ளே தூக்கி வைத்திருக்கலாம்.

ADVERTISEMENT

தலைமை கழகத்தில் முடிவு செய்தால் நான் கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவேன். விஜய் எந்தத் தொகுதியில் யாரை நிறுத்தினாலும் அவர்களுக்கு எதிராகக் களமிறங்கி பணியாற்றுவேன். விஜய் செய்த அநியாயங்கள், ஏழை ரசிகர்களுக்கு செய்த துரோகங்களைத் தோலுரித்துக் காட்டுவேன்.

விஜய் ஏதாவது ஒரு ரசிகருக்கு நல்லது செய்திருக்கிறாரா? ரூ.100 டிக்கெட்டை ரூ.1000-க்கு வாங்குகிறார்கள். பால் அபிஷேகம் செய்கிறார்கள். ஆனால் விஜய் ரசிகர்களின் வாழ்வாதாரத்திற்கு ஏதாவது செய்தாரா? கரூரில் தன்னைத் தேடி வந்த ரசிகர்கள், தொண்டர்கள் இறந்தவுடன் பதறிப் போய், ‘பிழைத்தால் போதும்’ என்று தப்பித்து ஓடுகிறார். அங்கு நின்றால் என்ன ஆகிவிடும்? ‘நான் வரவழைத்த எனது ரசிகர்கள் இறந்துவிட்டார்கள், என் உயிர் முக்கியமா?’ என்று அன்று சொல்லியிருக்க வேண்டாமா?

ADVERTISEMENT

ஒரு கேப்டன் என்பவர் தான் இறந்தாலும் தன் பயணிகளைக் காப்பாற்ற வேண்டும் என்று சொல்வார்கள். அதைச் செய்ய விஜய் தவறிவிட்டார்.

செங்கோட்டையன் போன்ற போலி அரசியல்வாதிகள் 50 ஆண்டுகளாக உண்டு கொழுத்து விட்டார்கள். இனி அவருக்கு ரெஸ்ட் எடுப்பதற்கு ஒரு இடம் வேண்டும். கண்டிப்பாக செங்கோட்டையன் டெபாசிட் இழப்பார். எம்ஜிஆர் போன்ற மாமேதை வளர்த்த அந்தக் கட்சிக்கு துரோகம் செய்துவிட்டு வந்திருக்கிறார்.

ADVERTISEMENT

நான் அனுபவப்பட்டதை வைத்துச் சொல்கிறேன். விஜய் யாருக்கும் எதுவும் செய்ய மாட்டார். குறிப்பாக விஜய் ரசிகர்களும், தொண்டர்களும், விருப்ப மனு அளிப்பவர்களும் தயவுசெய்து உங்கள் பணத்தை வீணடித்துவிடாதீர்கள். ஒரு சகோதரன் போல் சொல்கிறேன். அவர் தோற்பதை விரும்ப மாட்டார். ஒரு படத்தில் தோற்றுவிட்டால் அவர்களை வீட்டிற்குள் விடக்கூடாது என்று சொல்வார்.

ஏனென்றால் அவருக்கு தோல்வி என்பது பிடிக்காது. தோல்வியடைந்த எந்த தயாரிப்பாளரையாவது விஜய் சந்தித்திருக்கிறார் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? யாருக்கும் உதவி செய்ய மாட்டார். தோற்றால் நானாக இருந்தாலும் வெளியில் அனுப்பி விடுவார். பெற்ற அப்பாவாக இருந்தாலும் கூண்டில் ஏற்றி விடுவார். உங்களுக்கு அள்ளிக் கொடுப்பார் என்று கனவில் கூட நினைக்காதீர்கள். நடுரோட்டில் விட்டுவிட்டு, சினிமாவும் வேண்டாம், ஒன்றும் வேண்டாம் என்று வெளிநாட்டிற்குத் தப்பிப் போய்விடுவார்,” எனத் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share