கோவை மருத்துவ கல்லூரி மாணவி மர்ம மரணம் தொடர்பான விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். psg medical student death
கோவை, பீளமேடு அருகே பிரபல பி.எஸ்.ஜி மருத்துவமனை மருத்துவ கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதில் தமிழ்நாடு மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த மாணவ – மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர்.
இந்த கல்லூரியில் நாமக்கல் மாவட்டம் வகுரம்பட்டி பகுதியைச் சேர்ந்த கந்தசாமி மகள் பவபூரணி (28) படித்து வந்தார். இவர், பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்.
எம்பிபிஎஸ் படித்து முடித்து விட்டு, பிஎஸ்ஜி மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் முதுகலை மயக்கவியல் பிரிவில் படித்து கொண்டே, அறுவை சிகிச்சை அவசர பிரிவில் பணியாற்றி வந்தார்.
கடந்த ஜூலை 6ஆம் தேதி அவருக்கு அந்த மருத்துவமனையில நைட் ஷிப்ட் போடப்பட்டிருந்தது. இங்கு நைட் ஷ்ப்ட் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு 4,5 பேர் ஓய்வெடுக்கும் அளவுக்கு கழிவறையுடன் கூடிய அறை ஒதுக்கப்படும்.
இந்தநிலையில் அன்றிரவு கழிவறைக்கு சென்ற பவபூரணி நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. அந்த சமயத்தில், நோயாளிகள் பற்றிய விவரங்களை கேட்பதற்காக மருத்துவமனையில் இருந்த மூத்த மருத்துவர், பவபூரணி மொபைல் எண்ணிற்கு தொடர்பு கொண்டுள்ளார்.
பலமுறை தொடர்புகொண்டும் பவபூரணி அந்த செல்போன் அழைப்பை எடுக்கவில்லை. இதனால் அந்த மூத்த மருத்துவர் நேரடியாக பவபூரணி பணியில் இருந்த வார்டுக்கு வருகை தந்தார். அங்கு பவபூரணி இல்லை. இதனால் அவருக்கு கொடுக்கப்பட்ட மருத்துவர்கள் அறைக்கு வந்து பார்த்தார். அங்கும் அவர் இல்லை.
அங்கிருந்தவாறே பவபூரணி நம்பருக்கு மீண்டும் தொடர்பு கொண்டார். அந்த அழைப்பையும் அவர் ஏற்கவில்லை. ஆனால் அந்த போன் ரிங் அடிப்பது மட்டும், அங்குள்ள கழிவறை பக்கமாக கேட்டது. இதையடுத்து அந்த கழிவறைக்கு சென்று சக மருத்துவர்களும் செவிலியர்களும் கதவை தட்டினர்.
நீண்ட நேரம் தட்டியும் கதவு திறக்கப்படாததால், அந்த கழிவறைக்கு மேல் உள்ள கண்ணாடி இருக்கும் வழியாக எட்டி பார்த்துள்ளனர்.

அப்போதான் பவபூரணி கழிவறை கதவு பக்கமாக மயங்கி சுருண்டு கிடந்தது தெரியவந்தது.
உடனே அங்கிருந்தவர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பவபூரணியை மீட்டனர். அப்போது அவரது கையில் மருந்து இல்லாத ஒரு சிரஞ்ச் இருந்தது தெரியவந்தது. உடனடியாக அவரை தூக்கிக் கொண்டு சென்று அதே மருத்துவமனையில் உள்ள ஐசியுவில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
முதல்கட்ட சிகிச்சை கொடுத்த போதும், அவரது உடலில் எந்த அறிகுறியும் இல்லை. இதையடுத்து அவரை பரிசோதித்து பார்த்தபோது அவர் உயிரிழந்திருப்பது தெரியவந்தது. அதிகாலை 2.30 மணியளவில் பவபூரணி இறந்துவிட்டார் என்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
இதுகுறித்து பீளமேடு காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் மருத்துவமனைக்கு வந்த போலீசார் பவபூரணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து பவபூரணி மரணம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். இதில், பவபூரணி மிகவும் அமைதியானவர் என்பதும் அவர் ஒருவரை காதலித்து வந்ததும் தெரியவந்தது.
அவர் காதலித்த நபர் பவபூரணி இறந்த தகவல் தெரிந்ததும் மருத்துவமனைக்கு வந்துவிட்டார். அவரை அடக்கம் செய்யும் கடைசி நிமிடம் வரை உடன் இருந்துள்ளார். அந்த நபரிடமும் சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் அவரிடமிருந்து எவ்விதமான பயமோ அல்லது குழப்பமான மனநிலையையோ காவல்துறையால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இருந்தாலும் அவரையும் போலீசார் கண்காணிப்பு வளையத்தில் வைத்துள்ளனர்.
தொடர்ந்து பவபூரணி பயன்படுத்திய அறையை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் அளவுக்கு அதிகமான வைட்டமின் மாத்திரைகள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், பவபூரணி எப்படி இறந்தார்? என்ன மருந்தை தனது உடலுக்குள் செலுத்திக்கொண்டார் என்பதெல்லாம் இனிவரும் மருத்துவ அறிக்கை மூலமாகத்தான் தெரியவரும் என்கிறார்கள் காவல்துறை வட்டாரத்தில்.
ஒருபக்கம் காதல் விவகாரத்தில் ஏதேனும் மன வருத்தத்தில் இருந்து, இப்படி செய்து கொண்டாரா? அல்லது மருத்துவமனையில் இருந்து ஏதேனும் அழுத்தம் கொடுக்கப்பட்டதா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்தசூழலில்தான் இது இட ஒதுக்கீட்டுக்காக நடத்தப்பட்ட கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தையும் நீலம் பண்பாட்டு மையம் கிளப்பியிருக்கிறது.
அதாவது, “மாணவியின் உறவினர்கள் இந்த மரணம் குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பியபோது முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறி உள்ளனர்.
மேலும் சம்பவம் நடந்த இடத்தில் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய காவல் துறை அவற்றை பெற்றோரிடம் காட்ட மறுப்பு தெரிவித்துள்ளது. மாணவியின் மரணத்தில் மிகுந்த சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும், மெரிட்டில் தேர்ச்சி பெற்று உயர்கல்வி மருத்துவம் படிக்கச் சென்ற பட்டியல் இன மாணவி மூன்று மாதத்துக்குள் இறந்தது, மருத்துவ இட ஒதுக்கீட்டுக்காக நடந்த கொலையா எனவும் சந்தேகம் எழுந்துள்ளது” என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
சிறப்புக் குழு ஒன்றை அமைத்து இந்த கோணத்தில் விசாரிக்க வேண்டும் என மாணவியின் பெற்றோர்களும் உறவினர்களும் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்
பவபூரணியின் இறப்பு குறித்து, அவரது தந்தை கந்தசாமி பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், மருத்துவமனை நிர்வாகம் அளித்த விளக்கத்தை நம்ப முடியவில்லை. எனது மகளின் அறையில் இருந்த பொருட்கள், சி.சி. டி. வி கேமராக்களை ஆய்வு செய்ய வேண்டும். உடனிருந்த பணியாளர்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்திடம் உரிய விசாரணை நடத்தி, எனது மகளின் இறப்புக்கு நீதி பெற்று தர வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், “பவபூரணியின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் கூடுதல் பரிசோதனை முடிவுகளுக்காகக் காத்திருப்பதாகவும், இதற்கு ஒரு மாதம் வரை ஆகலாம் என்றும் மூச்சுத் திணறல் காரணமாக அவர் மயக்கமடைந்திருக்கலாம் என்று கூறியதாகவும்” அவரது தந்தை கந்தசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
பவபூரணியின் மரணம் குறித்து 5 நாளில் அறிக்கை சமர்ப்பிக்க மாவட்ட ஆட்சியர் மற்றும் போலீஸ் கமிஷனர் ஆகியோருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் வழங்கியுள்ளது. psg medical student death