போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சாம்சங் ஊழியர்களை போலீசார் இன்று (அக்டோபர் 9) குண்டுக்கட்டாக கைது செய்து வரும் நிலையில் சிஐடியு மாநில தலைவர் சவுந்தரராஜன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தொழிற்சாலை இயங்கி வருகிறது. அங்கு பணியாற்றும் தொழிலாளர்களில் ஒரு பகுதியினர் தொழிற்சங்கம் அமைத்தல், ஊதிய உயர்வு உட்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஒரு மாதத்துக்கும் மேலாக ஊழியர்கள் போராடி வரும் நிலையில், போராட்டக்குழு நிர்வாகிகள் 10 பேர் நேற்று இரவு கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து பந்தலையும் வருவாய் துறை அதிகாரிகள் இரவோடு இரவாக அகற்றினர்.
எனினும் இன்று (அக்டோபர் 9) காலை முதலே போராட்டப் பகுதியில் பெய்து வரும் மழையையும் பொருட்படுத்தாமல் ஊழியர்கள் சிஐடியு மாநில தலைவர் சவுந்தரராஜன் தலைமையில் ஊழியர்கள் போராடி வருகின்றனர். இதற்கிடையில், போராட்டக் களத்தில் இரண்டு ஊழியர்கள் மயக்கமடைந்தனர். அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
தொடர்ந்து அங்கு ஏற்பட்ட பதற்றமான சூழலைத் தொடர்ந்து போலீசார் குவிக்கப்பட்டனர். அப்போது அத்துமீறி போராட்டத்தில் ஈடுபடுவதாக கூறி போராட்டக்காரர்களை அங்கிருந்து வெளியேறுமாறு போலீசார் கூறி வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டக்காரர்கள் கோஷமிட்ட நிலையில், தற்போது அவர்களை குண்டுக்கட்டாக போலீசார் கைது செய்து வருகின்றனர்.
ஆட்சிக்கு நல்லதல்ல; முதலமைச்சருக்கும் நல்லதல்ல!
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து சிஐடியு தொழிற்சங்க மாநில தலைவர் சவுந்தரராஜன் பேசுகையில், “காவல்துறை மிக மோசமான அடக்குமுறையில் இறங்கியிருக்கிறது. இப்படியெல்லாம் காவல்துறை செய்வதற்கு சட்டத்தில் இடமே இல்லை. போராட்டம் நடத்தப்படும் இந்த இடம் தனியாருடையது. நில உரிமையாளரிடம் அனுமதி பெற்றே இங்கு போராடுகிறோம். அப்படியிருக்க இங்கே வந்து சட்ட விரோதம் என்று கூறி கைது செய்ய காவல்துறைக்கு எந்த உரிமையும் கிடையாது. இவ்வளவு அக்கிரமமாக காவல்துறை நடந்து கொள்வது ஆட்சிக்கு நல்லதல்ல. முதலமைச்சருக்கும் நல்லதல்ல. அவர் உடனடியாக தலையிட வேண்டும்.
இந்தியா காலனி ஆதிக்கத்தில் இருந்தபோது காவல்துறை எப்படி எல்லாம் மக்களுக்கு எதிராக அடக்குமுறையை ஏவி கொடுமைப்படுத்தியதோ அதேபோன்ற காவல்துறை இப்போது நடந்து கொள்கிறது.
கார்ப்பரேட் நிறுவனத்துக்கு ஆதரவாக பெரும்பான்மை தொழிலாளிகளை, சிறுபான்மை தொழிலாளிகள் பக்கம் சாய்ப்பதற்காக மிரட்டுவதிலும் அவர்களை அச்சுறுத்துவதிலும் காவல்துறையே ஈடுபடுகிறது.
கடந்த 31 நாட்களாக வேலை நிறுத்தம் நடத்துவதன் மூலமாக தமிழ்நாடு முழுவதும், இந்தியா முழுவதும் எங்களுடைய எதிர்ப்பை காட்டி வருகிறோம். கார்ப்பரேட்க்கு ஆதரவாக இந்த அரசு செயல்படுவது தவறு.
அமைச்சர் சொல்வது அனைத்தும் தவறானது!
அமைச்சர் எங்களுடைய கோரிக்கை என்னவென்றே புரிந்து கொள்ளவில்லை. அவர் புரிந்து கொள்ளவில்லையா அல்லது புரிந்து கொள்ளாதது போல் நடிக்கிறாரா என்றே தெரியவில்லை.
சங்கத்தை பதிவு செய்வது என்பது எங்களுடைய உடனடி கோரிக்கை அல்ல. பதிவு செய்தால் எங்களுடைய வேலை நிறுத்தத்தை வாபஸ் வாங்குவோம் என்று எங்கேயும் நாங்கள் சொல்லவே இல்லை. பதிவு செய்வது என்பது இன்றைக்கு இல்லாவிட்டாலும் என்றைக்காவது எங்களுக்குத் தானாகவே கிடைக்கும். அதற்கு அமைச்சருடைய தயவு எங்களுக்குத் தேவையில்லை. அமைச்சர் சொல்வது அனைத்தும் தவறானது. மக்களை திசைதிருப்புவது.
எங்கள் கோரிக்கை ‘சங்கத்தை ஏற்க வேண்டும், அங்கீகரிக்க வேண்டும்’ என்பதே. அதைக் கூட நிறுவனத்தை ஏற்றுக்கொள்ள செய்ய இயலவில்லை என்றால் எதற்காக அரசு? எதற்காக ஆட்சி?
இன்று ரோட்டில் ஊழியர்களை வேட்டையாடுகிறார்கள். நேற்று இரவு முழுவதும் 10 பேரை கைது செய்தார்கள். எல்லா குடும்பங்களையும் அச்சுறுத்தியுள்ளார்கள். எல்லா குடும்பத்திலும் பீதி உண்டாக்கி இருக்கிறார்கள். பெண்கள் நடுங்கிக் கொண்டிருக்கிறார்கள். இது அரசு செய்யக்கூடிய காரியமா? இதை எந்த வகையிலும் நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. இது காவல்துறையின் அப்பட்டமான அத்துமீறல்.” என்று அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து சவுந்திரராஜனையும் போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி அழைத்து சென்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
ரூட் தல பிரச்சினையால் நேர்ந்த சோகம் : கல்லூரிகளில் போலீஸ் பாதுகாப்பு!
வாழ்வும் சாவும் உங்கள் கையில்! லெபனான் மக்களுக்கு நெதன்யாகு அறிவுரை!